அரசியல்தமிழகம்

கேந்திரிய வித்யாலயா பள்ளிகளில் தமிழுக்கு இடம் இல்லையா…? : வைகோ கண்டனம்

மத்திய அரசின் கேந்திரிய வித்யாலயா பள்ளிகளில் மாநில மொழி அல்லது தாய்மொழியை மாணவர்களுக்குக் கற்பிக்க வேண்டும். இதற்காக துணை ஆணையரின் அனுமதி பெற்று, ஒப்பந்த அடிப்படையில் ஆசிரியர்களை நியமித்துக்கொள்ளலாம். 6-ஆம் வகுப்பிலிருந்து 8-ஆம் வகுப்பு வரையிலும், தேவைப்பட்டால் 9 மற்றும் 10 ஆம் வகுப்பு மாணவர்களுக்குக்கூட கற்றுத் தரலாம். பள்ளி நேரத்திலேயே வாரத்திற்கு இரண்டு அல்லது மூன்று வகுப்புகள் இதற்காக ஒதுக்கப்பட வேண்டும் என்றெல்லாம் கேந்திரிய வித்யாலயா கல்வி விதி 112 ஆம் பிரிவில் கூறப்பட்டுள்ளது.

2013&-14 ஆம் கல்வி ஆண்டிலிருந்து தமிழகத்தில் உள்ள கேந்திரிய வித்யாலயா பள்ளிகளில் இவை நடைமுறைக்கு வந்து, தமிழ்மொழி கற்பிக்கப்பட்டு வந்தது.

இந்நிலையில், கடந்த நவம்பர் 2020 ஆம் ஆண்டு கேந்திரிய வித்யாலயா பள்ளிகளில் ஓர் வகுப்பில் 20 மாணவர்கள் விரும்பினால் மட்டுமே தாய் மொழி தமிழ் பயிற்றுவிக்க ஏற்பாடு செய்யப்படும் என்றும், அதற்காக பகுதி நேர ஆசிரியர்கள் மட்டும் நியமனம் செய்யப்படும் என்றும், வாரத்தில் இரண்டு அல்லது மூன்று வகுப்புகள் மட்டுமே நடத்தப்படும் என்றும் அறிவிப்பு வெளியிடப்பட்டது.

மாநில அரசுகளின் நிதி ஆதாரங்களையும், கட்டமைப்பு வசதிகளையும் பெற்றுக்கொண்டு நடத்தப்படும் பள்ளிகளில் தாய்மொழிக் கல்விக்கு இடம் இல்லை என்று புறக்கணிப்பதை கடுமையாகக் கண்டனம் செய்திருந்தேன்.

இந்நிலையில், தமிழகத்தில் உள்ள கேந்திரிய வித்யாலயா பள்ளிகளில் மாணவர்கள் கண்டிப்பாக சமஸ்கிருதம் படித்து தேர்ச்சி அடைந்தால் மட்டுமே 6ஆம் வகுப்பிலிருந்து 7ஆம் வகுப்பிற்குச் செல்ல முடியும் என்றும், சமஸ்கிருதத்திற்கு பதிலாக தமிழை மொழிப் பாடமாக எடுத்து தமிழ்நாட்டு மாணவர்கள் படிக்க முடியாது என்றும் தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் வாயிலாக தெரிய வந்துள்ளது.

தமிழகத்தில் உள்ள 49 கேந்திரிய வித்யாலயா பள்ளிகளில் செம்மொழியாம் தமிழ் புறக்கணிக்கப்பட்டு, வழக்கொழிந்துபோன சமஸ்கிருதத்திற்கு மகுடம் சூட்டுவது கடும் கண்டனத்துக்கு உரியதாகும். மேலும், 6ஆம் வகுப்பு முதல் 8 ஆம் வகுப்பு வரை இந்தி மொழியும் கட்டாயம் என்று ஏற்கனவே கேந்திரிய வித்யாலயா பள்ளிகள் செயல்படுத்தி வருகின்றன. ஆனால் தமிழ் கட்டாய மொழிப்பாடம் இல்லை என்பது ஏற்கத்தக்கது அல்ல.

2014 ஆம் ஆண்டு பா.ஜ.க. அரசு பொறுப்பு ஏற்றதிலிருந்து இந்தி, சமஸ்கிருத மொழித் திணிப்பில் தீவிரமாக இருக்கிறது. ஆர்.எஸ்.எஸ். சங் பரிவாரங்கள் வழிகாட்டுதல்படி உருவாக்கப்பட்டுள்ள தேசியக் கல்விக் கொள்கையும், இந்தி, சமஸ்கிருத மொழிகளுக்கு மட்டுமே முக்கியத்துவம் அளிக்கிறது.

அரசியல் அமைப்புச் சட்டத்தின் 8ஆவது அட்டவனையில் இடம்பெற்றுள்ள 22 மொழிகளுக்கும் உரிய அங்கீகாரத்தையும், சம வாய்ப்பையும் மத்திய அரசு அளிக்க வேண்டும். இல்லையேல், நான் நீண்ட காலமாக கூறி வருவதைப் போல் இந்திய ஒருமைப்பாடு என்பது வினாக்குறி ஆகும். எனவே தமிழகத்தில் உள்ள கேந்திரிய வித்யாலயா பள்ளிகளில் தமிழ் மொழியைப் பயிற்றுவிக்க உரிய ஆசிரியர்களையும் நியமனம் செய்து, தாய்மொழிக் கல்விக்கு ஆக்கமும் ஊக்கமும் தேட வேண்டும் என்று வலியுறுத்துகிறேன்.

– நமது நிருபர்

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button