அரசு டாக்டர்கள் ஸ்டிரைக் வாபஸ்
தமிழகத்தில் 50 ஆயிரம் டாக்டர்கள் உள்ளனர். அவர்களில் 18,125 பேர் அரசு மருத்துவமனைகளில் பணிபுரிந்து வருகின்றனர். அரசாணை படி 2017ம் ஆண்டு வழங்க வேண்டிய கூடுதல் ஊதியத்தை உயர்த்தி வழங்கவில்லை. கடந்த ஆண்டு 800 அரசு மருத்துவர்கள் இடங்கள் பணி குறைப்பு செய்யப்பட்டுள்ளது. ஆனால் நோயாளிகளின் எண்ணிக்கை 3 மடங்கு உயர்ந்துள்ளது.
முதுநிலை மருத்துவ மாணவர்களுக்கு அவர்கள் படிப்பு முடித்ததும் அந்தந்த கல்லூரிகள் அருகிலேயே பணி வழங்க வேண்டும். ஆனால் அவ்வாறு இருந்த நடைமுறையை மாற்றி வெவ்வேறு ஊர்களில் பணி வழங்கியுள்ளனர். அதில் பழைய நடைமுறையே தொடர வேண்டும். முதுகலை நீட் தேர்வு மூலம் அரசு மருத்துவ கல்லூரி பயிற்சி மருத்துவர்களின் 50 சதவீத இட ஒதுக்கீடு பறிக்கப்பட்டுள்ளது. இந்த ஒதுக்கீட்டை திரும்ப அளிக்க வேண்டும் என்ற 4 கோரிக்கைகளை வலியுறுத்தி டாக்டர்கள் கடந்த 2 ஆண்டுகளாக போராட்டம் நடத்தினர். இந்நிலையில் 4 டாக்டர்கள் சங்கங்கள் ஒன்றிணைந்து அரசு டாக்டர்கள் சங்கங்களின் கூட்டமைப்பை உருவாக்கியுள்ளன. அந்த கூட்டமைப்பு சார்பில் கடந்த மாதம் 29ம் தேதி டாக்டர்கள் சிறிய அளவிலான பல்வேறு போராட்டங்களை நடத்தி வந்தனர்.
அரசு செவி சாய்க்காத நிலையில் கடந்த 24ம் தேதி முதல் ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனை வளாகத்தில் அரசு மருத்துவர்கள் பெருமாள் பிள்ளை, நளினி, நாச்சியப்பன், அனிதா, அகிலன், ரமா உள்ளிட்ட 9 மருத்துவர்கள் காலவரையற்ற உண்ணாநிலை போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர்.
இந்நிலையில், உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டிருக்கும் மருத்துவர்களின் கோரிக்கைகளை, தமிழக அரசு பரிசீலனை செய்ய வேண்டுமென திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தினார்.
இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், மருத்துவர்களின் 4 அம்ச கோரிக்கைகளை நிறைவேற்றுவதில் அமைச்சர் விஜயபாஸ்கரின் அலட்சியமே, மருத்துவர்களை போராடும் நிலைக்குத் தள்ளியிருப்பதாக குற்றம்சாட்டியுள்ளார்.
இதனால் சிகிச்சைக்கு வரும் நோயாளிகள் பெரும் பாதிப்புக்குள்ளாகி இருப்பதாக வேதனை தெரிவித்துள்ள ஸ்டாலின், அவர்களின் கோரிக்கைகளை உடனடியாக பரிசீலனை செய்ய வேண்டுமென வலியுறுத்தினார். மக்களுக்கு ஆற்ற வேண்டிய மருத்துவப் பணியின் முக்கியத்துவத்தை கருதி, அரசு மருத்துவர்கள் தங்களின் போராட்டத்தை விலக்கிக் கொள்ள வேண்டுமென மு.க.ஸ்டாலின் கேட்டுக் கொண்டார். பல அரசியல் கட்சித் தலைவர்கள் நேரிலும், அறிக்கை வெளியிட்டும் டாக்டர்கள் போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்தனர்.
அதேநேரத்தில், தொடர் போராட்டத்தில் ஈடுப்பட்ட காரணத்தால் சில மருத்துவர்களின் உடல் நிலை சோர்வுற்று ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டனர். 4வது நாளாக இந்தப் போராட்டம் தொடர்ந்தது. சென்னை மட்டுமல்லாது, திருச்சி, மதுரை, நெல்லை, நாகர்கோவில், வேலூர், சேலம், கோவை உள்பட மாநிலம் முழுவதும் வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இந்நிலையில் அமைச்சர் டாக்டர் சி விஜயபாஸ்கர், பேச்சுவார்த்தை நடத்தியப்பின், முதல்வருடன் கலந்து ஆலோசித்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என கூறினார். பின்னர், சென்னை தலைமை செயலகத்தில் உள்ள நாமக்கல் கவிஞர் மாளிகையில் அரசு தரப்பில், அனைத்து அரசு மருத்துவர்கள் கூட்டமைப்பினருடன் பேச்சுவார்த்தை நடைப்பெற்றது.
அரசு தரப்பில், சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர், மக்கள் நல்வாழ்வு மற்றும் குடும்ப நலத்துறை இணை செயலாளர் நடராஜன், தமிழ்நாடு எயிட்ஸ் கட்டுபாட்டு சங்க திட்ட இயக்குனர் டாக்டர் செந்தில்ராஜ், மக்கள் நல்வாழ்வுத்துறை துணை செயலாளர்கள், மருத்துவ கல்வி இயக்குனர் டாக்டர் நாராயண பாபு, பொது சுகாதாரத்துறை இயக்குனர் டாக்டர் குழந்தைசாமி, மருத்துவம் மற்றும் ஊரக நலப்பணிகள் இயக்குனர் சுவாதி, மரசு மருத்துவகல்லூரி முதல்வர்கள் பங்கேற்றனர்.
முதல்வர் லண்டன் புறப்பட்டு செல்கிறார். அவருடன் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் விஜயபாஸ்கரும் செல்கிறார்.
அவர்கள் திரும்ப தமிழகம் வருவதற்கு 2 வாரங்கள் ஆகும். அதனால், உடனே பேச்சு வார்தையை முடிக்க வேண்டும் என்று அரசு தரப்பில் திட்டமிடப்பட்டது. இறுதிச்சுற்று பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்பட்டது. அரசு டாக்டர்கள் கோரிக்கைகள் குறித்து ஆறு வாரத்திற்குள் பரிசீலிக்கப்படும் என அமைச்சர் விஜயபாஸ்கர் உத்தரவாதம் அளித்தார். இதையடுத்து அரசு டாக்டர்கள் ஸ்டிரைக் வாபஸ் பெறப்பட்டது.
நோயாளிகள் கடும் பாதிப்பு
தமிழகம் முழுவதும் உள்ள அரசு மருத்துவமனைகளின் புறநோயாளிகள் பிரிவில் தினமும் 5 முதல் 8 லட்சம் பேர் வரையில் சிகிச்சை பெற வருகிறார்கள். மருத்துவர்களின் இந்த அடையாள வேலைநிறுத்த போராட்டத்தால் நோயாளிகள் சிகிச்சை பெற முடியாமல் தனியார் மருத்துவமனைகளுக்கு செல்லும் நிலைக்கு ஆளாகினர்.
பயிற்சி மருத்துவர்கள், முதுநிலை மருத்துவ மாணவர்கள், முக்கிய பதவியில் உள்ள டாக்டர்கள் பணியை புறக்கணிக்கவில்லை.
இது தவிர அவசர சிகிச்சை பிரிவு டாக்டர்களும் பணியை புறக்கணிக்கவில்லை. பிற பிரிவுகளில் சிகிச்சை அளிக்கும் டாக்டர்களில் பலர் பணியை புறக்கணித்துள்ளனர். இதனால், மருத்துவ சேவை முழுமையாக முடங்கியது.
- செந்தில்குமார்