டிரைவர் சாப்பிடச் சென்ற நேரத்தில் லாரியை சரக்குடன் திருடிய கும்பல்! : நாமத்தை வரைந்து போலீசாருக்கு சவால் விடுத்த கொள்ளையர்கள்
வேலூரில் லாரி கடத்தல் வழக்கில் கைது செய்யப்பட்ட இளைஞர்கள் நான்கு பேர் காவல் நிலைய ‘பாத்ரூமில் வழுக்கி விழுந்த சம்பவம்’ பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை பகுதியை சேர்ந்த வெங்கடேஷ் என்பவருக்கு சொந்தமான லாரி இரவு சென்னை துறைமுகத்திலிருந்து ரூ.11 லட்சம் மதிப்பிலான வாகன உதிரிபாகங்கள் ஏற்றி கொண்டு சென்னை பெங்களூர் தேசிய நெடுஞ்சாலை வழியாக ஓசூர் நோக்கி சென்று கொண்டிருந்தது. துரை என்பவர் இந்த லாரியை ஓட்டிச் சென்றுள்ளார்.
அப்போது வேலூர் அடுத்த பூட்டுத்தாக்கு பகுதியில் டிரைவர் துரை கண்டெய்னர் லாரியை சாலையோரம் நிறுத்திவிட்டு அருகில் இருந்த ஹோட்டலில் உணவருந்த சென்றார். இதை நோட்டமிட்ட மர்ம நபர்கள் லாரியை கடத்தி சென்றுள்ளனர் சாப்பிட்டு வெளியே வந்து பார்த்த போது லாரி இல்லாததை கண்டு டிரைவர் துரை அதிர்ச்சி அடைந்தார். உடனடியாக லாரி உரிமையாளர் வெங்கடேஷுக்கு தகவல் தந்தார்.
பின்னர் லாரியில் இருந்த ஜி.பி.எஸ் கருவி மூலம் லாரி எங்கே சென்று கொண்டிருக்கிறது என வெங்கடேஷ் கண்காணித்து வந்தார். இது குறித்து ரத்தினகிரி காவல் துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. காவல்துறையினர் உதவி மூலம் தொடர்ந்து லாரி எங்கே செல்கிறது என கண்காணிக்கப்பட்டது. அப்போது பள்ளிகொண்டா டோல்கேட் அருகே லாரி சென்று கொண்டிருந்தது தெரியவந்தது.
இதையடுத்து அங்கு விரைந்து சென்ற காவல்துறையினர் கையும் களவுமாக லாரியை மடக்கி பிடித்தனர் காவல்துறையினரிடம் சிக்கிக் கொண்டதை அறிந்து குற்றவாளிகள் தப்பி ஓட முயன்றபோது, லாரியை ஓட்டி வந்த நபர் உட்பட 4 பேரை போலீசார் மடக்கிப்பிடித்தனர்.
இந்த விவகாரத்தில் கைதானவர்கள் வேலூர் சுற்றுவட்டாரப் பகுதியான சேண்பாக்கம், முத்துமண்டபம், விருதம்பட்டு பகுதியை சேர்ந்த அசோக்குமார்(22), லோகேஷ்(22), ராம்குமார்(22), அன்பழகன்(22), ஆகிய 4 பேரை ரத்தினகிரி போலீசார் கைது செய்தனர். இவர்களிடம் நடத்திய விசாரணையில் இந்த கடத்தல் சம்பவம் குறித்து பகீர் தகவல் வெளியாகி உள்ளது.
அதாவது வேலூர் தொரப்பாடி அரசு வேளாண் துறையில் பணிபுரிந்து வரும் யாசீம் என்பவர்தான் இந்த கடத்தல் கும்பலுக்கு தலைவன் என்பதும் அவன் தலைமையில் பல்வேறு வாகனங்களை கடத்தி வேலூர் முத்துமண்டபம் என்ற பகுதியில் கடத்தபட்ட வாகனத்தை பிரித்து உதிரிபாகங்களாக கள்ளச் சந்தையில் விற்று பணம் சம்பாதிப்பது தெரியவந்துள்ளது.
அதன்படி யாசிம் இளைஞர்களை கையில் வைத்துக் கொண்டு போலி சிம் கார்டு மூலம் அவர்களை தொடர்புகொண்டு கடத்தல் தொழிலில் ஈடுபட்டுள்ளார். அதன்படி சாலையோரம் டிரைவர் இல்லாமல் நிறுத்தப்படும் வாகனங்களை நோட்டமிட்டு அதை கடத்திச் சென்றுள்ளனர்.
எனவே இந்த கடத்தல் சம்பவத்தில் முக்கிய குற்றவாளியான யாசீமை போலீசார் தேடி வருகின்றனர். கைதான நபர்களிடமிருந்து ஒரு கார் இரண்டு சக்கர வாகனங்கள் 3 ஆட்டோக்கள் என ரூ.30 லட்சம் மதிப்பிலான வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டது இக்கடத்தல் சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
கைதானவர்கள் காவல்நிலைய பாத்ரூம்களில் வழுக்கி விழுந்து கை, கால்களை உடைத்துக்கொண்டதாக போலீசார் கூறியுள்ளனர், இவர்கள் அங்குள்ள அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
மதுரையில் கொள்ளையடித்த கடையில் நாமத்தை வரைந்து திருடிய பொருட்களின் விவரங்களை எழுதிவிட்டு சென்ற நூதன கொள்ளையர்களை போலீசார் தேடி வருகின்றனர்.
மதுரை ஒத்தக்கடை பகுதியை சேர்ந்த பாலசுப்ரமணியன் மற்றும் விஜய் ஆகிய இருவரும் சேர்ந்து மதுரை மாநகர் கோமதிபுரம் பகுதியில் அப்பள கம்பெனி ஒன்றை நடத்தி வருகின்றனர்.கடந்த சில தினங்களுக்கு முன்பாக அப்பள கம்பெனியில் பணம் திருடப்பட்ட நிலையில் அது தொடர்பாக புகார் அளிக்காமல் இருந்துள்ளனர்.
இந்நிலையில் வெள்ளிக்கிழமை இரவு அதே அப்பள கம்பெனியின் உள்ளே புகுந்த கொள்ளையர்கள் அங்கிருந்த கணினி, தராசு, மற்றும் ஒரு லட்சம் ரூபாய் ரொக்கத்தை மொத்தமாக கொள்ளையடித்து சென்றனர். கொள்ளையடிக்கப்பட்ட நிறுவனத்தில் உள்ள சுவர்களில் நாமத்தை வரைந்துவிட்டு அவர்கள் சென்றுள்ளனர். மேலும் எந்தெந்த பொருட்களை எந்த பகுதியில் கொள்ளையடித்தோம் என்ற தகவலையும், சில புரியாத ஆங்கில வார்த்தைகளையும் சுவர் மற்றும் கதவுகளில் எழுதிவிட்டு சென்றுள்ளனர். கொள்ளையர்கள் இருவர் இரு சக்கர வாகனத்தில் வந்து கொள்ளையடித்துவிட்டு சாக்கு மூட்டைகளில் பொருட்களை எடுத்துசென்றது அருகில் உள்ள சிசிடிவியில் பதிவாகியுள்ளது. அதனடிப்படையில் அண்ணாநகர் போலீசார் வழக்கு பதிவு செய்து கொள்ளையர்களை தேடி வருகின்றனர்.
கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்ட கொள்ளையர்கள் துணிச்சலுடன் அடையாளங்களை வரைந்துவிட்டு போலீசாருக்கு சவால் விடுக்கும் வகையில் கொள்ளையடித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.