திகார் சிறையில் தூக்குத் தண்டனை கைதிகளைத் தூக்கிலிடும் பணியாளர் இல்லை எனத் தகவல் வெளியானது. டெல்லி திஹார் சிறையில் மரண தண்டனை கைதிகளைக் தூக்கிலிடும் பணிக்குச் செல்லத் தயாராக இருப்பதாக ராமநாதபுரத்தைச் சேர்ந்த தலைமைக் காவலர் ஒருவர் சிறைத்துறை இயக்குநருக்குக் கடிதம் எழுதியுள்ளார்.
ராமநாதபுரம் மாவட்டக் காவல்துறை பயிற்சி மையத்தில் தலைமைக் காவலராகப் பணியாற்றி வருபவர் சுபாஷ் சீனிவாசன். 1997-ல் காவலர் பணியில் சேர்ந்த இவர், கடந்த 15 ஆண்டுகளாக பல்வேறு சமூகசேவை பணிகளிலும் தன்னை ஈடுபடுத்திக்கொண்டு வருகிறார். மனநோயாளிகளுக்கு உதவுவது, ஆதரவற்ற சடலங்களை அடக்கம் செய்வது, ஆபத்தில் சிக்கியவர்களை அசாத்திய துணிச்சலுடன் மீட்பது போன்ற பல செயல்களில் தன்னை ஈடுபடுத்திக்கொள்பவர். இவரின் சிறப்பான செயல்பாட்டினைப் பாராட்டி முதலமைச்சரின் அண்ணா பதக்கமும் வழங்கப்பட்டுள்ளது.
சிவகங்கை மாவட்டத்தில் பணியாற்றிய போது, சாலையோர மரங்களில் ஆணி அடித்து வைக்கப்படும் விளம்பர போர்டுகளை அகற்றுவதுடன், மரத்தில் அடிக்கப்பட்ட ஆணியினை அகற்றி அந்த இடத்தில் மஞ்சள் பொடி, எண்ணெய் கொண்ட கலவையினைப் பூசி மரங்கள் பட்டுப்போகாமல் உயிர்ப்புடன் இருக்க வைக்கும் பணிகளில் ஈடுபட்டார். தற்போது ராமநாதபுரம் கிழக்குக் கடற்கரைச் சாலையில் உள்ள மரங்களிலும் இந்தப் பணியினை மேற்கொண்டு வருவதன் மூலம் மரங்களின் நண்பனாக இயங்கி வருகிறார்.
தெலங்கானாவில் பெண் மருத்துவர் கொலைவழக்கில் தொடர்புடைய குற்றவாளிகள் நால்வரும் சம்பவம் நடந்த 10-வது நாளில் என்கவுன்டர் மூலம் கொல்லப்பட்டனர். இந்நிலையில் கடந்த 2012-ல் டில்லியில் நடந்த மருத்துவ மாணவி நிர்பயா பாலியல் கொலைச் சம்பவத்தில் குற்றவாளிகளான 4 பேருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டது. இவர்களது தண்டனை இன்னும் நிறைவேற்றப்படவில்லை. `திகார் சிறையில் தூக்குத் தண்டனை கைதிகளைத் தூக்கிலிடும் பணியாளர் இல்லை’ எனச் செய்திகள் வெளியாகி இருந்தன.
இந்நிலையில், தலைமைக் காவலர் சுபாஷ் சீனிவாசன் திகார் சிறையின் தலைமை இயக்குநருக்குக் கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளார். அதில், திகார் சிறையில் மரண தண்டனை விதிக்கப்பட்ட கைதிகளைத் தூக்கிலிடும் பணியை ஏற்க தான் விரும்புவதாகவும் அதற்காகத் தனக்கு ஊதியம் எதுவும் வழங்க வேண்டாம் எனவும் குறிப்பிட்டுள்ளார். “இதன்மூலம் நிர்பயா வழக்கில் மரண தண்டனை விதிக்கப்பட்டவர்களுக்கான தண்டனையை நிறைவேற்ற முடியும்” என்கிறார் காவலர் சுபாஷ் சீனிவாசன்.