பேருந்து படிக்கட்டில் ஆபத்தான பயணம் செய்யும் மாணவர்கள்
பரமக்குடியில் குறைந்த அளவு நகரப் பேருந்துகள் இயக்கப்படுவதால் பேருந்து படிக்கட்டில் மாணவர்கள் ஆபத்தான முறையில் தொங்கியபடி பயணம் செய்கின்றனர். ராமநாதபுரம் மாவட்டத்தின் மையப்பகுதியில் பரமக்குடி அமைந்துள்ளது. சுற்றுவட்டார கிராமங்களை சேர்ந்தோர் கல்வி, தொழில் உள்ளிட்ட பல்வேறு வேலை நிமித்தமாக தினசரி பரமக்குடி வந்து செல்கின்றனர். பரமக்குடி பேருந்து பணிமனையில் இருந்து 30 டவுன் பஸ்கள் இயக்கப்பட்ட நிலையில் ஓட்டுநர், நடத்துனர் பற்றாக்குறை காரணமாக தற்போது வெறும் 10 பேருந்துகள் மட்டுமே கிராமப் புறங்களுக்கு இயக்கப்பட்டு வருகின்றன.
இன்று காலை வீரசோழன் கிராமத்தில் இருந்து பரமக்குடி வந்த அரசு பேருந்தில் பள்ளி மாணவர்கள், நடத்துனர் தொங்கியபடி பயணம் செய்துள்ளனர். பள்ளி மாணவர்கள் தொடர்ந்து 10 முதல் 20 கிலோமீட்டர் வரை தொங்கியபடி ஆபத்தான முறையில் பயணம் செய்துவருகின்றனர். கடந்த வாரம் பரமக்குடி அருகே நென்மேனி என்ற இடத்தில் பேருந்தில் தொங்கியபடி பயணம் செய்த போது, நிலை தடுமாறி கீழே விழுந்த பள்ளி மாணவனின் கால் முறிந்தது. குறைந்த அளவில் பேருந்துகள் இயக்கப்படுவதால் பள்ளி, கல்லூரி மாணவர்கள் தொடர்ந்து தொங்கியபடி ஆபத்தான முறையில் பயணம் செய்து வருகின்றனர்.
ஓட்டுனர், நடத்துனர் பணியிடங்களை நிரப்பி அதிகளவில் நகரப் பேருந்துகளை இயக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். பள்ளி மாணவர்கள் பேருந்தில் தொங்கியபடி பயணம் செய்யக்கூடாது என தமிழக அரசை ஏற்கனவே அறிவுறுத்திய நிலையில் பரமக்குடியில் டவுன் பஸ்ஸில் மாணவர்கள் தொங்கியபடி ஆபத்தான பயணம் செய்யும் வீடியோ மனதை பதறவைக்கும் கட்சியாக உள்ளது.