“ஜெயக்குமார் ஒரு ஜோக்கர்; அவருக்கெல்லாம் பதில் சொல்லிக்கொண்டிருக்க முடியாது” : மு.க.ஸ்டாலின்
அண்ணா அறிவாலயத்தில் தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது,
“டெல்லியில் தி.மு.க முன்னின்று நடத்திய, அனைத்துக் கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்கள் பங்கேற்ற கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றுள்ளது. அந்த ஆர்ப்பாட்டத்தின் நோக்கம், காஷ்மீரில் வீட்டுச்சிறைகளில் அடைக்கப்பட்டுள்ள அரசியல் கட்சித் தலைவர்களையும், முன்னாள் முதல்வர்களையும் விடுவிக்க வேண்டும்.
துண்டிக்கப்பட்ட தொலைத்தொடர்பு இணைப்புகளை மீண்டும் செயல்படுத்த வேண்டும் எனவும், காஷ்மீர் மக்கள் இயல்பு வாழ்க்கைக்குத் திரும்புவதற்கான நடவடிக்கைகளைச் செய்யவேண்டும் என வலியுறுத்தியும் இந்த ஆர்ப்பாட்டம் நடந்திருக்கிறது.
தி.மு.க அழைப்பை ஏற்று இந்த ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்ற கட்சிகள் அனைத்திற்கும், நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கும் தி.மு.க சார்பில் நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.” எனத் தெரிவித்தார்.
ப.சிதம்பரம் கைது செய்யப்பட்டிருப்பது குறித்து கருத்து கூறிய அவர், “சி.பி.ஐ அதிகாரிகள் சுவரேறிக் குதித்திருப்பது என்பது இந்திய நாட்டிற்கே அவமானமான செயல்; அது கண்டிக்கத்தக்கது. ஏறக்குறைய 20 முறை சி.பி.ஐ அதிகாரிகள் அழைத்தபோதெல்லாம் சென்று ஆஜராகி பதிலளித்திருக்கிறார் ப.சிதம்பரம். அதுமட்டுமல்லாமல், முன் ஜாமின் கேட்டும் உச்சநீதிமன்றத்தில் மனு அளித்திருக்கிறார். இதற்கிடையே இந்த கைது நடவடிக்கை என்பது அரசியல் பழிவாங்கும் நடவடிக்கையே; இது கண்டிக்கத்தக்கது.” என்றார்.
உள்ளாட்சித் தேர்தல் நடத்தப்படாததற்கு தி.மு.க-வின் வழக்கே காரணம் என அ.தி.மு.க-வினர் கூறுவது குறித்த கேள்விக்கு, “உள்ளாட்சித் தேர்தலை நடத்தக்கூடாது என்பதற்காக தி.மு.க வழக்குத் தொடுக்கவில்லை; முறையாக தேர்தல் நடத்தப்பட வேண்டும் என்பதற்காகவே வழக்கு தொடுக்கப்பட்டது. நீதிமன்றமே தேர்தல் நடத்துவதற்கான கெடு விதித்ததன் படி, மாநில தேர்தல் ஆணையம் தேர்தல் தேதியை அறிவித்து நடத்தியிருக்கவேண்டும்.
பழங்குடியினருக்கும், தாழ்த்தப்பட்டவர்களுக்கும் உள்ளாட்சித் தேர்தலில் இட ஒதுக்கீடு முறையாக இல்லை என்பதற்காகவே தி.மு.க சார்பில் வழக்கு தொடுக்கப்பட்டது. அதனால், தேர்தல் நடத்தப்படாததற்கு காரணம் தி.மு.க-வின் வழக்குதான் என அவர்கள் சொல்வதை வைத்துக்கொண்டு கேள்வி கேட்பதைத் தவிர்த்துவிட்டு, இதை மக்களிடம் தெளிவுபடுத்தவேண்டும்” என்றார்.
ப.சிதம்பரம் கைது மூலம் தி.மு.க-வுக்கும், காங்கிரஸுக்கும் தலைகுனிவு ஏற்பட்டுள்ளதாக அமைச்சர் ஜெயக்குமார் கூறியது தொடர்பான கேள்விக்கு, “ஜெயக்குமார் ஒரு ஜோக்கர்; அவர் கருத்துக்கெல்லாம் பதில் சொல்லிக் கொண்டிருக்க முடியாது” எனத் தெரிவித்தார் மு.க.ஸ்டாலின்.
சென்னை தேனாம்பேட்டையில் உள்ள காமராஜர் அரங்கில், ஜி.எஸ்.டி குறித்த கருத்தரங்கம் நடைபெற்றது. இதில் சிறப்பு விருந்தனராக கலந்து கொண்ட அமைச்சர் ஜெயக்குமார் செய்தியாளர்களை சந்தித்தார்.
அப்போது ஜெயக்குமார் ஒரு ஜோக்கர் என மு.க.ஸ்டாலின் விமர்சித்துள்ளது பற்றி செய்தியாளர்கள் கேட்டபோது, ஜோக்கர் இல்லாமல் சீட்டாடம் மட்டுமல்ல அரசியல் ஆட்டமே இல்லை. மேலும், ஸ்கார்ட்லாந்து யார்டு போலீசுக்கு இணையாக தமிழக போலீஸ் செயல்பட்டு வருவதால், தீவிரவாதிகள் ஊடுருவி இருப்பதாக வரும் தகவல் குறித்து பொதுமக்கள் அச்சம் கொள்ள தேவை இல்லை என்று அவர் கூறினார். தமிழகம் முழுவதும் காவல் துறையினர் அதிக விழிப்புடன் செயல்பட்டு வருவதாகவும் அமைச்சர் குறிப்பிட்டார்.
ஐ.என்.எக்ஸ் மீடியா வழக்கில், சி.பி.ஐ அதிகாரிகள் சுவர் ஏறி குதித்து கைது செய்யவேண்டிய நிலைக்கு தள்ளியது சிதம்பரம்தான் என்று குறிப்பிட்ட ஜெயக்குமார், பயமில்லை என்றால் விசாரணைக்கு ஒத்துழைக்க வேண்டியதுதானே என்றும் கேள்வி எழுப்பினார்.
சிதம்பரத்தால் இந்தியாவிற்கு மட்டுமல்ல தமிழகத்திற்கும் எந்த பயனும் இல்லை என்றும், யாருக்கும் ஏதும் செய்யாதவர் என்பதால்தான் சிதம்பரத்தின் நிழல் கூட இன்று அவரை திரும்பி பார்க்கவில்லை என்றும் அவர் தெரிவித்தார்.
- நமது நிருபர்