வாகன சோதனைகளை தீவிரப்படுத்த தேர்தல் ஆணையர் உத்தரவு
தேர்தல் ஆணையர்கள் சுஷில் சந்திரா, அசோக் லவசா, தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹூ உள்ளிட்டோர் செய்தியாளர்களை சந்தித்தனர். அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகளுடனும், காவல்துறை, வருமான வரித்துறை, சுங்கத்துறை உள்ளிட்ட பல்வேறு துறை அதிகாரிகளுடனும் ஆலோசனை நடத்தப்பட்டதாக தேர்தல் ஆணையர் அசோக் லவசா தெரிவித்தார்.
பணப்பட்டுவாடாவை தடுக்க கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும், தேர்தல் பறக்கும்படையினர் சாதாரண மக்கள், வியாபாரிகளுக்கு இடையூறு விளைவிக்கக் கூடாது, தமிழகத்தில் காலியாக உள்ள மேலும் 4 சட்டமன்ற தொகுதிகளுக்கும் தேர்தல் நடத்த வேண்டும் என அரசியல் கட்சிகள் வலியுறுத்தியதாக அவர் கூறினார். அதிகாரிகள் அலட்சியம், தவறான உள்நோக்கத்துடன் செயல்படுவதை தேர்தல் ஆணையம் பொறுத்துக் கொள்ளாது எனக் குறிப்பிட்ட அசோக் லவசா, தேர்தல் பறக்கும்படையினரின் வாகன சோதனை தீவிரப்படுத்தப்பட்டுள்ளது என்றார்.
ஒவ்வொரு மக்களவை தொகுதிக்கும் குறைந்தது 2 செலவின பார்வையாளர்கள் உள்ளனர் என்றும், தமிழகத்திற்கு சிறப்பு செலவின தேர்தல் பார்வையாளர் நியமிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார். மத்திய பாதுகாப்பு படையினர் தேவையான இடங்களில், தேவையான அளவுக்கு நிறுத்தப்படுவர் என்றும், சி-விஜில் ஆப் மூலம் அனைவரும் புகைப்படம், வீடியோக்கள் ஆதாரங்களுடன் புகார் அளிக்கலாம் என்றும் அசோக் லவசா கூறினார். 4 சட்டமன்ற தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் நடத்துவது தேர்தல் ஆணையத்தின் பரிசீலனையில் உள்ளதாகவும், விரைவில் முடிவு எடுக்கப்படும் என்றும் அசோக் லவசா தெரிவித்தார்.
வேலூரில் பணம் பறிமுதல் செய்யப்பட்ட விவகாரத்தில் முழு அறிக்கை கிடைத்த பிறகு தேர்தல் ஆணையம் நடவடிக்கை எடுக்கும் எனவும் தேர்தல் ஆணையம் அசோக் லவசா தெரிவித்தார்.