அரசியல்

அரசியல் கட்சி தொடங்குகிறாரா நடிகர் விஜய்?

தமிழக சட்டசபை தேர்தல் வருகிற 2021ம் ஆண்டு நடைபெறவுள்ள நிலையில், அதற்கான ஆயத்த பணிகளில் அரசியல் கட்சிகள் முனைப்புடன் ஈடுபட்டு வருகின்றன. தமிழகத்தில் திராவிட கட்சிகள் அடுத்தடுத்து ஆட்சி அதிகாரத்தில் நீடித்து வரும் சூழல் காணப்படுகின்றன.

இந்நிலையில், நடிகர் கமல்ஹாசன் மக்கள் நீதி மய்யம் என்ற பெயரில் கடந்த நாடாளுமன்ற தேர்தலை சந்தித்த அனுபவம் பெற்றுள்ளார். தொடர்ந்து சட்டசபை தேர்தலுக்கும் தயாராகி வருகிறார். இதற்காக அவர் போட்டியிடும் தொகுதி பற்றியும் ஆவலுடன் மக்களால் எதிர்பார்க்கப்பட்டு வருகிறது.
இதேபோன்று மறுபுறம் நடிகர் ரஜினிகாந்த் அரசியல் கட்சி தொடங்கி அதற்கான நடவடிக்கையில் இறங்கி வரவேண்டுமென்று ரசிகர்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.

நடிகர் விஜய் அகில இந்திய தளபதி விஜய் மக்கள் இயக்கம் என்ற பெயரில் கட்சி தொடங்க, பெயர் பதிவுக்காக தேர்தல் ஆணையத்தில் விண்ணப்பிக்கப்பட்டுள்ளது.

நடிகர் விஜய் அரசியலுக்கு வர வேண்டுமென்று சமீப நாட்களாக அவரது ரசிகர்கள் போஸ்டர் ஓட்டி வந்தனர். இதையடுத்து தனது ரசிகர்களை நேரில் சந்தித்து விஜய் ஆலோசனை நடத்தினார். இந்த ஆலோசனை கூட்டத்தில் விஜய்யின் அரசியல் பயணம் குறித்து ஆலோசிக்கப்பட்டதாக கூறப்பட்டது.

இந்நிலையில் அகில இந்திய தளபதி விஜய் மக்கள் இயக்கம் என்ற பெயரில் கட்சியைப் பதிவு செய்து தேர்தல் ஆணையத்தில் விண்ணப்பிக்கப்பட்டுள்ளது. கட்சித் தலைவராக பத்மநாபன், பொதுச்செயலாளராக எஸ்.ஏ. சந்திரசேகர் பெயர் வழங்கப்பட்டுள்ளது. நடிகர் விஜய் அரசியல் கட்சி தொடங்கி உள்ளார் என்ற தகவல் தீயாய் பரவ ஆரம்பித்த நிலையில், விஜய்யின் அதிகாரப்பூர்வ மக்கள் தொடர்பாளர் ரியாஸ் அஹமது இந்த தகவலை மறுத்துள்ளார்.

இதனிடையே, விஜய்யின் தந்தை எஸ்.ஏ. சந்திரசேகர் அளித்த பேட்டியில், அகில இந்திய தளபதி விஜய் மக்கள் இயக்கம் என்பதை அரசியல் இயக்கமாக பதிவு செய்ய தேர்தல் ஆணையத்தில் விண்ணப்பித்துள்ளதாக தெரிவித்துள்ளார். மேலும், அரசியல் இயக்க பதிவிற்கும் விஜய்க்கும் தொடர்பில்லை என்றும், தனிப்பட்ட முறையில் மக்களுக்கு நல்லது செய்ய வேண்டும் என்ற நோக்கிலேயே பதிவு செய்ய விண்ணப்பித்துள்ளதாகவும் எஸ்.ஏ. சந்திரசேகர் தெரிவித்தார்.

விஜய் ஏற்கனவே அரசியல் ஆசைகளை கடந்த காலங்களில் மறைமுகமாக வெளிப்படுத்தியுள்ளார். 2013ஆம் ஆண்டு நடிகர் விஜய் நடித்த தலைவா படம் வெளியாவதில் சிக்கல் உண்டானது.

பின்னர், அப்போதைய முதல்வர் ஜெயலலிதாவின் ஆட்சியைப் புகழ்ந்து, அவருக்கு படத்தை வெளியிட உதவுமாறு கோரிக்கை வைத்து நடிகர் விஜய் காணொளி வெளியிட்ட பின் அந்தப் படம் வெளியானது.சர்க்கார் திரைப்படப் பாடல் வெளியீட்டு விழாவில், “நிஜத்தில் முதல்வரானால், நடிக்க மாட்டேன். உண்மையாக இருப்பேன்” என்று கூறி இருந்தார். அந்த திரைப்படமே அவரது அரசியல் அபிலாஷைகளை வெளிப்படுத்துவதாக இருந்ததாக விமர்சகர்கள் கூறி இருந்தனர்.

அப்போது “மெர்சல்ல கொஞ்சம் அரசியல் இருந்தது, சர்க்கார்ல அரசியல்ல மெர்சல் பண்ணி இருக்கோம்,” என்றார். ‘விஜய் நடித்த மெர்சல் படத்தில் மத்திய அரசின் பண மதிப்பிழப்பு நடவடிக்கை, ஜி.எஸ்.டி. வரி ஆகியவற்றை விமர்சிக்கும் வகையில் சில கருத்துகள் இடம்பெற்றிருந்தன. இதற்கு தமிழக பாரதீய ஜனதாக் கட்சியைச் சேர்ந்தவர்கள் கடும் எதிர்ப்புத் தெரிவித்தனர். இது போன்ற விமர்சனங்கள் இடம்பெற்றுள்ள காட்சிகளை நீக்க வேண்டுமென்றும் கோரினர்.

ஆனால், அந்தக் காட்சிகள் நீக்கப்படவில்லை. தவிர, திரையுலகைச் சேர்ந்தவர்களும் பிற அரசியல் கட்சித் தலைவர்களும் மெர்சல் திரைப்படத்திற்கு ஆதரவாக குரல் கொடுத்தனர். இந்தத் திரைப்படம் குறித்து தொடர்ந்து கடுமையாகப் பேசிவந்த பா.ஜ.கவின் தேசியச் செயலர் எச். ராஜா, விஜய்யைக் குறிப்பிடும்போது அவரது மதத்தை சுட்டிக்காட்டும் வகையில் அவரை ‘ஜோசப் விஜய்’ என்று குறிப்பிட்டது கடும் விமர்சனத்திற்கு உள்ளானது.

இந்தப் படத்திற்கு சில எதிர்ப்புகள் வந்ததாகவும் அந்தத் தருணத்தில், அந்த எதிர்ப்புகளுக்குப் பதில்சொல்லும் வகையில், திரையுலகைச் சேர்ந்தவர்கள், மாநில, தேசிய அரசியல் கட்சிகளைச் சேர்ந்தவர்கள், ஊடகங்கள் ஆகியவை தனக்கு ஆதரவாக இருந்ததாகவும் அப்போது அறிக்கை ஒன்றின் மூலம் விஜய் தெரிவித்திருந்தார்.

‘ஜோசப் விஜய்’ என்று பெயர் அச்சிடப்பட்டுள்ள அதிகாரப்பூர்வ லெட்டர்பேடில் இந்த அறிக்கையை அவர் வெளியிட்டு இருந்தார்.

மெர்சல் திரைப்படத்தின் சிங்கிள் ட்ராக்காக, ‘ஆளப் போறான் தமிழன்’ பாடல் வெளியான போதே, இந்தப் படத்தில் அரசியல் இருக்கிறது என்று அனைவரும் முணுமுணுக்க தொடங்கினர். இந்த ஆண்டு பிப்ரவரி மாதம் விஜய், திரைப்பட ஃபைனான்சியர் அன்புச் செழியன் மற்றும் தயாரிப்பு நிறுவனமான ஏஜிஎஸ் தொடர்பான இடங்களில் வருமான வரி சோதனை நடந்தது. அன்புச்செழியனுக்கு சொந்தமான இடங்களில் நடந்த சோதனையில் சுமார் 65 கோடி ரூபாய் அளவுக்கு ரொக்கம் சிக்கியிருப்பதாகவும் வருமான வரித்துறையால் அப்போது தெரிவிக்கப்பட்டது. விஜய் வரி நிலுவை எதையும் வைத்திருக்கவில்லை என்று அப்போது வருமான வரித்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

தன் தந்தை தொடங்கியுள்ள கட்சிக்கும் தனக்கும் எவ்வித தொடர்பும் இல்லை என நடிகர் விஜய் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் விடுத்துள்ள அறிக்கையில், “என் தந்தை திரு.எஸ்.ஏ.சந்திரசேகர் ஓர் அரசியல் கட்சியை ஆரம்பித்துள்ளார் என்பதை ஊடகங்களின் வாயிலாக அறிந்தேன். அவர் தொடங்கியுள்ள கட்சிக்கும் எனக்கும் நேரடியாகவோ மறைமுகமாகவோ எவ்வித தொடர்பும் இல்லை என திட்டவட்டமாக எனது ரசிகர்களுக்கும் பொதுமக்களுக்கும் தெரிவித்துக்கொள்கிறேன்.

இதன் மூலம் அவர் அரசியல் தொடர்பாக எதிர்காலத்தில் மேற்கொள்ளும் எந்த நடவடிக்கைகளும் என்னை கட்டுப்படுத்தாது என்பதை தெரியப்படுத்திக்கொள்கிறேன். மேலும் எனது ரசிகர்கள், எனது தந்தை கட்சி ஆரம்பித்துள்ளார் என்பதற்காக தங்களை அக்கட்சியில் இணைத்துக்கொள்ளவோ கட்சி பணியாற்றவோ வேண்டாம் என கேட்டுக்கொள்கிறேன்.

அக்கட்சிக்கும் நமக்கும் நமது இயக்கத்திற்கும் எவ்வித தொடர்பும் கிடையாது என்பதை தெரிவித்துக்கொள்கிறேன். மேலும் என் பெயரையோ புகைப்படத்தையோ எனது அகில இந்திய தளபதி விஜய் மக்கள் இயக்கத்தின் பெயரையோ தொடர்புபடுத்தி ஏதேனும் விவகாரங்களில் ஈடுபட்டால் அவர்கள் மீது தகுந்த நடவடிக்கை எடுக்கப்படும் என்பதையும் தெரிவித்துக்கொள்கிறேன்“ இவ்வாறு நடிகர் விஜய் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

ராபர்ட் ராஜ்

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button