சிதம்பரத்துக்கு எதிராக ஆதாரங்களைக் காட்ட முடியுமா? : அரசுக்கு சவால் விடும் கார்த்தி சிதம்பரம்
ப.சிதம்பரம் கைது செய்யப்பட்டுள்ள விவகாரம் குறித்து ஊடகங்களில் சிதம்பரம் குறித்து வெளியாகும் செய்திகள் பற்றியும் கார்த்தி சிதம்பரம் அறிக்கை வெளியிட்டுள்ளார்.
அந்த அறிக்கையில், ‘கடந்த சில தினங்களாக ப.சிதம்பரத்துக்கு எதிராக ஆதாரமற்ற, உறுதிப்படுத்தப்படாத செய்திகளை ஊடகங்கள் வெளியிடுவதால் நாங்கள் மனவேதனை அடைந்துள்ளோம். ப.சிதம்பரத்தை அவமானப்படுத்த வேண்டும் என்ற அரசின் நோக்கத்தை நாங்கள் புரிந்துகொண்டபோதும், பழிவாங்கும் நடவடிக்கைக்கு எதிராக ஊடகங்களால் சுதந்திரமாக இயங்க முடியவில்லை என்பதை நினைத்து வேதனைப்படுகிறோம். சுதந்திரத்தின் முக்கியமான அடிப்படைகளில் ஒன்று, சட்டத்தின் முன் ஒருவர் குற்றவாளி என்று நிருபணமாகும் வரை அவர் நிரபராதியாகத்தான் கருதப்படவேண்டும்.
உண்மை கட்டாயம் வெளியே வரும் என்பதில் நாங்கள் உண்மையில் உறுதியாக உள்ளோம். சுமார் 50 ஆண்டுகளாக சிதம்பரம் பொதுவாழ்வில் இருந்துவருகிறார். இழிவுபடுத்தும் பிரச்சாரத்தின் மூலம் அவருடைய பணியை துடைத்து அழித்துவிட முடியாது. எங்களுடைய சிறிய குடும்பத்துக்கு தேவையான பணம் உள்ளது. நாங்கள் அனைவரும் வருமான வரி கட்டுபவர்கள். நாங்கள், பணத்துக்காக அலையவில்லை.
சட்டவிரோதமான வழியில் பணம் சம்பாதிக்க வேண்டிய அவசியம் எங்களுக்கு இல்லை. பல்வேறு நாடுகளில் சொத்துக்கள் உள்ளது, பல்வேறு வங்கிகளில் வங்கிக் கணக்கு உள்ளது. பல ஷெல் கம்பெனிகள் உள்ளது என்ற குற்றச்சாட்டுகளால் நாங்கள் அதிர்ச்சியடைந்தோம். இந்த மாதிரியான குற்றச்சாட்டுகள் பேய்க் கதைகள். ஒரு நாள் இந்த பேய்கள் எரிக்கப்படும். உலகத்தின் எந்தப் பகுதியிலாவது ஷெல் கம்பெனியோ, சொத்தோ, வங்கிக் கணக்கோ உள்ளதாக ஆதாரத்தை தாக்கல் செய்ய முடியுமா என்று அரசுக்கு சவால் விடுகிறோம்.
கட்டுப்பாடு, கண்ணியம், சுதந்திரம் ஆகியவற்றை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்று ஊடகங்களுக்கு கோரிக்கைவைக்கிறோம். சட்டம் ஒன்றுதான் ஊடகம் உள்ளிட்ட அனைவரையும் காப்பாற்றும் என்பதை எப்போதும் நினைவில் கொள்ளுங்கள்’ என்று குறிப்பிட்டுள்ளார்.