தமிழகம்

அனந்தசரஸ் குளத்தில் வைக்கப்பட்டார் அத்திவரதர் : போலீஸாரை எச்சரித்த காஞ்சிபுரம் ஆட்சியர்

கோவில் நகரமான காஞ்சீபுரத்தில் 108 திவ்ய தேசங்களில் ஒன்றாக விளங்கும் வரதராஜ பெருமாள் கோவில் உள்ளது. இந்த கோவிலில் உள்ள அனந்தசரஸ் குளத்துக்குள் இருந்து 40 ஆண்டுகளுக்கு ஒரு முறை எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சி அளிக்கும் அத்திவரதர் வைபவம் மிகவும் சிறப்பு வாய்ந்ததாகும்.

அந்த வகையில் கடந்த ஜூலை மாதம் 1-ந்தேதி முதல் அங்குள்ள வசந்த மண்டபத்தில் அத்திவரதர் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சி அளித்தார். ஜூலை 31-ந்தேதி வரை சயன கோலத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்த அத்திவரதர், பின்னர் கடந்த 1-ந்தேதி முதல் நின்ற கோலத்தில் காட்சி அளித்தார்.

தமிழ்நாட்டின் பல்வேறு மாவட்டங்களில் இருந்து மட்டுமல்லாது ஆந்திரா, தெலுங்கானா, கர்நாடகம், கேரளா, மராட்டியம் போன்ற வெளிமாநிலங்களில் இருந்தும் ஏராளமான பக்தர்கள் திரளாக வந்து அத்திவரதரை தரிசித்தனர். அத்திவரதரை சயன கோலத்தில் 43 லட்சம் பக்தர்கள் தரிசனம் செய்தனர்.
பொதுமக்கள் எழுப்பிய புகாரின் அடிப்படையில் அத்திவரதர் தரிசனத்தின் மிக முக்கிய பிரமுகர்கள் செல்லும் வழியில் மாவட்ட ஆட்சியர் பொன்னையா திடீர் ஆய்வு செய்தார்.
அத்திவரதர் வைபவம் ஆரம் பித்த நாள் முதலே காவல்துறை யினர் அத்துமீறும் செயல்களில் ஈடுபட்டு வந்ததாக கூறப்பட்டது. முக்கிய பிரமுகர்கள் நுழைவு வாயிலில் போலீஸார் பலரை அழைத்துச் சென்றதாகவும், இத னால் உரிய அனுமதிச் சீட்டு வைத்துள்ளவர்கள் பாதிக்கப்பட்டதாகவும் பலர் ஆட்சியரிடம் புகார் தெரிவித்தனர். இதைத் தொடர்ந்து இந்த ஆய்வு நடைபெற்றது.

ஆய்வின்போது ஆட்சியர், ‘‘பொதுமக்கள் பலரும் மணிக்கணக்கில் காத்திருக்கிறார்கள். நீங்கள் உங்களுக்கு வேண்டிய வர்களை மட்டும் முக்கிய பிரமுகர்களுக்கான அனுமதி சீட்டு இல்லாமல் விஐபி தரிசனத்தில் அனுப்புகிறீர்கள். நீங்கள் உங்கள் இஷ்டப்படி செயல்பட்டால் பொது மக்கள் கூறும் புகார்களுக்கு யார் பதில் சொல்வது? உங்கள் மீது நடவடிக்கை எடுத்தால்தான் திருந்துவீர்கள்.

இதுபோன்று பொறுப்பில்லாமல் செயல்பட்டால் இடைநீக்கம் செய்ய பரிந்துரை செய்ய வேண்டி இருக்கும் என்று எச்சரிக்கை செய்தார். மேலும் இது தொடர்பாக காவல்துறை உயர் அதிகாரிகளிடம் தெரிவிப்பதாக’’ கூறிச் சென்றார்.
ஆனால் ஆட்சியர் காரணம் இல்லாமல் காவல் துறையினரை ஒருமையில் திட்டியதாக சிலர், சமூக வலைதளங்களில் செய்திகளை பரப்பி வருகின்றனர்.
இந்தச் சம்பவத்தைத் தொடர்ந்து மிக முக்கிய பிரமுகர்கள் செல்லும் வழியில் முறைகேடுகள் முற்றிலும் தடுக்கப்படாவிட்டாலும், கூட்டம் கூட்டமாக பொதுமக்களை காவல் துறையினர் அழைத்து வருவது குறைந்துள்ளது.

போலீஸாரின் அத்துமீறல்கள் குறித்து பக்தர்கள் குற்றச்சாட்டுகளை கிளப்பியதை தொடர்ந்து, விவிஐபி, விஐபி தரிசன வரிசையில் ஆய்வு மேற்கொண்ட ஆட்சியர், போலீஸாரை கடுமையாக எச்சரித்தார். இதுதொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வேகமாக பரவியது.
இதனால் கோபமடைந்த போலீஸார், பதிலுக்கு தங்களது குமுறல்களையும் பதிவு செய்து வருகின்றனர். அதில், ‘இரவு பகலாக குடும்பத்தை மறந்து பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வரும் ஒட்டுமொத்த போலீஸாரையும் அவமதிக்கும் விதமாக ஒருமையில் ஆட்சியர் பேசுவதை ஏற்றுக் கொள்ள முடியவில்லை. பிரபல ரவுடி ஒருவருக்கு விவிஐபி அந்தஸ்து கொடுத்து தரிசனத்துக்கு அனுமதித்தது யார்?’ என்று போலீஸார் கேள்வி எழுப்பியுள்ளனர்.

இதுதொடர்பாக மக்கள், காவலர்கள் முன்னிலையில் காவல் ஆய்வாளரை மாவட்ட ஆட்சியர் வசைபாடியது மனித உரிமை மீறல் என தெரிவித்துள்ள மனித உரிமை ஆணையம், இது தொடர்பாக காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் மீது இதுவரை என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என கேள்வி எழுப்பியுள்ளது.
தமிழக தலைமைச் செயலாளர், டி.ஜி.பி., காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் பொன்னையா ஆகியோர் 2 வாரத்தில் அறிக்கை தாக்கல் செய்யவும் உத்தரவிட்டுள்ளது.
அத்திவரதர் தரிசனத்துக்கு வரும் பக்தர்களுக்கு உதவ மருத்துவர்கள் மற்றும் சுகாதாரத்துறை பணியாளர்கள் பணியாற்றி வருகின்றனர். இதற்காக ஆங்காங்கே மருத்துவ முகாம்கள் அமைக்கப்பட்டுள்ளன.

இந்நிலையில், விவிஐபி வரிசைஅருகே உள்ள முகாமில் பணியாற்றும் மருத்துவர்கள் பணிக்கு வந்தபோது, போலீஸார் அவர்களை அனுமதிக்க மறுத்து ஒருமையில் பேசியதாகவும், சில மருத்துவர்களின் அடையாள அட்டைகளை போலீஸார் கிழித்து எறிந்ததாகவும் கூறப்படுகிறது. இதனால், மருத்துவர்கள் தங்களின் பணிகளை புறக்கணித்து விவிஐபி வரிசை அருகே வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதையடுத்து, காஞ்சிபுரம் மாவட்ட எஸ்பி கண்ணன், சுகாதாரத் துறை துணை இயக்குநர் செந்தில்குமார் ஆகியோர் மருத்துவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது மருத்துவர்களிடம் தவறாக நடந்துகொண்ட போலீஸார் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்ததை அடுத்து, மருத்துவர்கள் போராட்டத்தை கைவிட்டனர்.
கடைசி மற்றும் 47-வது நாளில் 3.50 லட்சம் பக்தர்கள் அத்தி வரதரை தரிசனம் செய்தனர். தரிசனம் நடைபெற்ற 47 நாட்களில் அத்திவரதரை தரிசித்த பக்தர்களின் எண்ணிக்கை ஒரு கோடியை தாண்டிவிட்டதாக இந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.
அத்திவரதருக்கு பரிகார பூஜை நடைபெற்றது. அடுத்த 40 ஆண்டுகளுக்கு சிலைக்கு எந்த பாதிப்பும் ஏற்படாத வகையில் சாம்பிராணி தைலம் உள்ளிட்ட மூலிகை திரவியங்கள் அத்திவரதர் சிலைக்கு பூசப்பட்டது.

இரவு 10 மணியில் இருந்து 12 மணிக்குள் அத்திவரதர் சிலை அனந்தசரஸ் குளத்துக்குள் வைக்கப்பட்டது. குளத்தில் உள்ள அத்திவரதர் மண்டபத்தின் கீழ் உள்ள அறையில் அத்திவரதர் சிலை வைக்கப்பட்டது. அதன்பிறகு குளத்தில் வழக்கம்போல் நீர் நிரப்பப்பட்டது. முன்னதாக சுமார், 5 மணியளவில், அத்திவரதர்- உற்சவர் சந்திப்பு நிகழ்ச்சி நடைபெற்றது.

இந்நிலையில் வசந்தமண்டபத்தில் வைக்கப்பட்டிருந்த அத்திவரதர் அனந்தசரஸ் குளத்தில் உள்ள நீராழி மண்டபத்தில் சயன கோலத்தில் வைக்கப்பட்டார். அனந்தசரஸ் குளத்தில் ஜலவாசம் செய்யும் அத்திவரதர், அடுத்த 40 ஆண்டுகளுக்கு பிறகு (2059-ம் ஆண்டு) மீண்டும் அருள்பாலிக்க வருவார்.

  • நமது நிருபர்

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button