தமிழகம்

சொத்துக்காக தம்பியை கொடூரமாக கொலை செய்த அண்ணன் : வெளியான சிசிடிவி காட்சிகள்!

தருமபுரி, அடுத்த சத்யா நகரைச் சேர்ந்த காவேரி- சக்தி தம்பதிக்கு 5 மகன்கள் மற்றும் 3 மகள்கள். மூன்று மகள்களுக்கு திருமணமாகி தனியாக வசித்து வரும் நிலையில், மூத்த மகன் வெங்கடாசலம் திருமணமாகி மனைவி, 2 குழந்தைகளுடன் அக்கா முனியம்மா வீட்டில் தங்கி உள்ளார்.

தந்தை காவேரி மறைவுக்கு பின் அவரது பெயரில் கொல்லகொட்டாய் பகுதியில் உள்ள 75 சென்ட் சொத்துக்காக சகோதரர்களுக்குள் தகராறு இருந்து வந்துள்ளது.
வெங்கடாசலத்திற்கும், சத்யா நகரில் வசித்துவரும் 24 வயதான அவரது தம்பி நரசிம்மனுக்கும் அடிக்கடி சொத்து தகராறு நடந்து வந்துள்ளது.
இந்த தகராறு முற்றியதால், காவல்நிலையம் வரை சென்று பஞ்சாயத்து செய்து தீர்த்து வைக்கப்பட்டது. எனினும் இருவருக்கும் இடையில் சொத்து தகராறு தொடர்ந்து வந்துள்ளது.

இந்நிலையில், குமாரசாமிபேட்டையில் உள்ள சந்தோஷ் திரையரங்கு முன்பு இரு சக்கர வாகனத்தில் நண்பர் மணியுடன் நரசிம்மன் சென்று கொண்டிருந்தார்.
அப்போது, மற்றொரு இருசக்கர வாகனத்தில் வந்த அண்ணன் வெங்கடாசலம், தம்பி நரசிம்மனை வழிமறித்து வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார்.
பின்னர் கண்ணிமைக்கும் நேரத்தில் மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து நெஞ்சு பகுதியில் குத்தியுள்ளார். ரத்த வெள்ளத்தில் நரசிம்மன் கீழே சரிந்தார்.
வெங்கடாசலத்தை தடுக்க, நரசிம்மனுடன் வந்த அவரது நண்பர் மணி முயன்றபோது, அவரையும் கத்தியால் குத்த முயன்றுள்ளார். சாலையில் நின்றவர்கள் தாக்க வந்ததால் அவர் அங்கிருந்து தப்பித்து ஓடிவிட்டார்.

கத்திக்குத்து சம்பவம் குறித்து தகவலறிந்து சம்பவ இடத்திற்கு சென்ற தருமபுரி போலீசார் நரசிம்மனை மீட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். ஆனால் அவர் ஏற்கெனவே உயிரிழந்து விட்டதாக மருத்துவர்கள் தெரிவித்துவிட்டனர்.

நரசிம்மன் உயிரிழப்பு தொடர்பாக கொலை வழக்கு பதிவு செய்த தருமபுரி போலீசார், தம்பியை கொலை செய்துவிட்டு தலைமறைவாகிய அண்ணன் வெங்கடாசலத்தை தேடி வருகின்றனர். மேலும், இந்த கொலை சொத்துக்காக மட்டுமே நடந்ததா அல்லது வேறு ஏதேனும் காரணம் உள்ளதா எனவும் போலீசார் விசாரித்து வருகின்றனர்.
கிருஷ்ணகிரியில் 2011-ம் ஆண்டு கணவனை கொன்ற வழக்கில் மனைவி, கள்ளக்காதலன் உட்பட மூன்று பேருக்கு இரட்டை ஆயுள்தண்டனை வழங்கி கிருஷ்ணகிரி நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது.

கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளி தாலுகா அத்திகானூரைச் சேர்ந்தவர் சஞ்சீவன். ஜவுளி வியாபாரியான இவர் வெளியூர்களுக்கு சென்று ஜவுளி வியாபாரம் செய்து வந்தார். மேலும் அவ்வப்போது உள்ளூரிலும் ஜவுளி வியாபாரம் செய்து வந்தார். இவருக்கு மது குடிக்கும் பழக்கம் இருந்தது. இவரது மனைவி அனிதாதேவி. வேலூர் மாவட்டம் திருப்பத்தூர் தாலுகா வண்ணாரத்தெரு ஆதிவூரைச் சேர்ந்த ஜெயப்பிரகாஷ் என்பவருக்கும் கள்ளக்காதல் ஏற்பட்டது.

இதனையறிந்த சஞ்சீவன், அனிதாதேவியை கண்டித்தார். இருப்பினும் அனிதாதேவி தொடர்ந்து ஜெயப்பிரகாஷூடன் தொடர்பில் இருந்தார். தங்களது கள்ளக்காதலுக்கு இடையுறாக இருந்த சஞ்சீவனை கொலை செய்ய, அனிதாதேவியும், ஜெயப்பிரகாசும் திட்டமிட்டனர். அதன்படி, கடந்த 2011ம் ஆண்டு அக்டோபர் மாதம் 31ம் தேதி, சஞ்சீவனை தலையணையால், அழுத்தியும், கத்தியால் குத்தியும் கொலை செய்தனர்.

இதற்கு உடந்தையாக ஜெய்பிரகாஷின் நண்பரான, கரூர் மாவட்டம் அரவக்குறிச்சி அருகே உள்ள சீத்தப்பட்டியைச் சேர்ந்த சங்கர் செயல்பட்டார். இதனை தொடர்ந்து சஞ்சீவனின் சடலத்தை அருகில் உள்ள அருணபதி ஏரியில் குழி தோண்டி புதைத்தனர். இந்த நிலையில் ஏரியில் புதைக்கப்பட்டிருந்த உடலின் பாகங்கள் வெளியே தெரிந்தது. இது குறித்து அந்த பகுதி மக்கள் போலிசாருக்கு தகவல் அளித்தனர்.

அதன் அடிப்படையில் மத்தூர் போலீசார் விசாரணை நடத்தியதில் சஞ்சீவனை அவரது மனைவி அனிதாதேவி, கள்ளக்காதலன் ஜெயப்பிரகாஷ் மற்றும் சங்கர் ஆகியோர் சேர்ந்து கொலை செய்து உடலை புதைத்தது தெரிய வந்தது. இதைத் தொடர்ந்து அவர்கள் 3 பேரையும் போலீசார் கைது செய்தனர். இவ்வழக்கு கிருஷ்ணகிரி கூடுதல் மாவட்ட அமர்வு நீதிமன்றத்தில் நடந்து வந்தது.

வழக்கை விசாரித்த நீதிபதி விஜயகுமாரி அதன்படி குற்றம் சாட்டப்பட்ட அனிதாதேவி, ஜெயப்பிரகாஷ், சங்கர் ஆகியோருக்கு கொலை குற்றத்திற்காக (பிரிவு 302) ஆயுள் தண்டனையும், கூட்டு சதிக்காக (பிரிவு 120) ஆயுள் தண்டனையும், தடயங்களை மறைத்த குற்றத்திற்காக (பிரிவு 201) 7 ஆண்டு சிறை தண்டனையும், தலா ரூ.25 ஆயிரம் அபராதமும் விதித்து தீர்ப்பு கூறினார்.

இதைத் தொடர்ந்து அனிதாதேவி, ஜெயப்பிரகாஷ், சங்கர் ஆகிய 3 பேரையும் போலீசார் கைது செய்து வேலூர் மத்திய சிறையில் அடைத்தனர்.

  • தே.முத்துப்பாண்டி

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button