பல்லடம் சாலையில் சிதறிய பாகங்கள்….அலறிய பொதுமக்கள்…
திருப்பூர் மாவட்டம் பல்லடம் பகுதி கேட் வே ஆஃப் மான்செஸ்டர் என அழைக்கப்படும் பகுதியாகும். மதுரை, நெல்லை, கன்யாகுமரி உள்ளிட்ட தென் மாவட்டங்கள் மற்றும் திருச்சி தஞ்சை, கும்பகோணம்,திருவாரூர் உள்ளிட்ட கிழக்கு மாவட்டங்களுக்குச் செல்வதற்கு பிரதான சாலையாகவும் பல்லடம் தேசிய நெடுஞ்சாலை உள்ளது. கோவையில் இருந்து செல்லும் கனரக மற்றும் பேருந்துக்கள், கார்கள் தினந்தோறும் ஆயிரக்கணக்கில் செல்வதால் இந்த சாலை பெரும்பாலும் போக்குவரத்து நெரிசலுடன் தான் காணப்படும். இந்நிலையில் இந்த நெடுஞ்சாலையில் செல்லும் கார்கள் லாரிகள் அதிவேகத்தில் செல்வதால் கட்டுப்பாட்டை இழந்து விபத்துக்கள் ஏற்படுகின்றன. பெரும்பாலும் பல்லடத்தை கடக்கும் கண்டெய்னர் லாரிகள் படு வேகமாக செல்வதை காணமுடிகிறது.
இந்நிலையில் பட்டபகலில் போக்குவரத்து நிறைந்த விடுமுறை நாட்களில் பல்லடம் நான்கு ரோடு சந்திப்பில் சூலூரில் இருந்து வேகமாக வந்த லாரி சிக்னலை கடந்து செல்ல முயன்றபோது ஓட்டுநர் பிரேக் அடித்ததால் டன் கணக்கில் ஏற்றிவந்த சிமெண்ட் கலவை இயந்திரங்கள் சாலையில் சிதறியது. மேலும் பாதுகாப்பற்ற முறையில் அலட்சியமாக கையாண்டதால் அடுக்கி வைக்கப்பட்டிருந்த பாகங்கள் சிதறின. இந்நிலையில் சிக்னலில் லாரியின் பக்கவாட்டில் திடீரென பெரிய பாகங்கள் சிதறி விழுவதை கண்ட வாகன ஓட்டிகள் உயிரை காப்பாற்றிக்கொள்ள அங்கிருந்து தப்பினர். இதன் காரணமாக பல்லடம் பிரதான சாலை கடும் போக்குவரத்து நெருக்கடி ஏற்பட்டது.
பின்னர் சம்பவ இடத்தில் போக்குவரத்து போலீசார் உடனடியாக கிரேன் எந்திரத்தை வரவழைத்து அங்கிருந்து கண்டெய்னர் லாரியை அப்புறப்படுத்தினர். கோடிக்கணக்கான மதிப்பிலான இயதிரத்தை ஆயிரக்கணக்கான கிலோ மீட்டர் தூரம் ஓட்டிச்சென்று சேர்ப்பதில் குறிக்கோளாக செயல்படும் நிறுவனங்கள் எந்திரங்களை இது போன்று அலட்சியமாக பாதுகாப்பற்ற முறையில் எவ்வாறு அனுமதித்தது என்பது கேள்விக்குறியாக உள்ளது. மேலும் லாரியில் பொருட்களை ஏற்றும் போது உரிய பாதுகாப்பான முறையில் வைக்கப்பட்டுள்ளதா என்பதை உறுதி செய்யவேண்டும்.
இந்தியாவில் அதிவேகமாக வளர்ந்து வரும் நிறுவனம், 1500 க்கும் மேற்பட்ட வாடிக்கையாளர்களை கொண்ட நிறுவனம் என்றெல்லாம் விளம்பரப்படுத்தினால் மட்டும் போதாது, பொதுமக்களின் உயிரையும் கருத்தில் கொண்டு பாதுகாப்பான முறையில் பொருட்களை எடுத்துச்செல்வதை உறுதி செய்யவேண்டும் என்பதே பொதுமக்களின் கோரிக்கையாக உள்ளது. மேலும் சாலையில் எந்திரத்தின் பாகங்கள் சிதறி பொதுமக்களின் உயிருக்கு ஆபத்தை ஏற்படுத்தியது ஓட்டுநரின் கவனக்குறைவா? அல்லது நிறுவனத்தின் அலட்சியமா? என்பது குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு தீவிர நடவடிக்கை எடுத்தால் மட்டுமே எதிர்காலத்தில் இது போன்று விபத்து ஏற்படாமல் தடுக்க முடியும்.