கொங்கு மண்டலத்தில் களைகட்டும் கிராவல் மண் கொள்ளை
தமிழகம் முழுவதும் நடந்து வந்த உழவுத்தொழில் 20-ம் நூற்றாண்டின் பிற்பகுதியிலும், 21-ம் நூற்றாண்டின் தொடக்கத்திலும் குறிப்பாக கொங்கு மண்டலத்தில் பெருவாரியாக நடந்து கொண்டிருக்கும் ரியல் எஸ்டேட் தொழிலில் நல்ல லாபம் கிடைக்கும், உழவைக் காட்டிலும் பெரும் பணம் ஈட்டலாம் என்பது போன்ற ஆசை வார்த்தைகளை நம்பியும், பருவமழை பொய்த்ததன் காரணமாகவும், காலம் காலமாக விவசாயம் செய்து வந்த விவசாயிகள் தங்கள் விவசாய நிலங்களில் விவசாயப் பணி செய்யாமல் விவசாய நிலங்களை தரிசாக்கி அங்குள்ள வளமான மண்ணை வெட்டி எடுத்து வியாபாரம் செய்கின்றனர். இயற்கையாகவே கொங்கு மண்ணில் வளம் அதிகம். இங்கு உள்ள விவசாய நிலங்களில் கிரஷர் முதலாளிகளும், ரியல் எஸ்டேட் அதிபர்களும் கிராவல் மண்ணை வெட்டி எடுத்து விற்பதின் மூலம் பெரும் லாபம் ஈட்டுகிறார்கள். இந்த விவசாய நிலத்தில் மண்ணை வெட்டி எடுப்பதற்கு அந்த நிலத்தின் உரிமையாளரான விவசாயிக்கு மிகச் சொற்பமான தொகையை மட்டுமே கொடுத்துவிட்டு வெட்டி எடுத்து வரும் இடைத்தரகர்கள் பெரும் தொகைக்கு இந்த மண்ணை விற்பனை செய்கின்றனர்.
குறிப்பாக திருப்பூர் மாவட்டம், காங்கேயம் ஒன்றியம், கீரனூர் சுற்றுவட்டார பகுதியில் அனுமதியின்றி அரசு அதிகாரிகளின் உதவியோடு மேடை மண் எடுக்கப்பட்டு ஒரு நாளில் 100 க்கும் மேற்பட்ட டிப்பர் லாரிகளில் அனுமதியின்றி திருப்பூர் மாநகரத்திற்குள் கொண்டு செல்லப்படுகிறது. அவ்வாறு மேடை மண் எடுத்துச் செல்லும் டிப்பர் லாரிகள் ஊத்துக்குளி, திருப்பூர் ஆகிய வருவாய் வட்டாட்சியர்களின் எல்லைகளை கடந்து தான் செல்ல வேண்டும். முறையாக எந்த ஒரு அனுமதியும் இல்லாமல் கனிமவளத்துறை அதிகாரிகளின் உதவியோடு இந்த கொள்ளை அனுதினமும் நடைபெறுகிறது. மேலும் டிப்பர் லாரியில் கொண்டுவரப்படும் மேடை மண் மூடாமல் வருவதால் சாலைகளில் செல்லும் வாகன ஓட்டிகள் மிகவும் சிரமத்திற்கு உள்ளாகி விபத்துக்கள் ஏற்பட்டு விடுகிறது.
இது பற்றி அப்பகுதி மக்கள் கூறுகையில் “கீரனூர் சுற்றுவட்டார பகுதிகளில் மேடை மண் கொள்ளையடிக்கப்படுவது குடிசை தொழில் போல் ஆகிவிட்டது. இதை தட்டி கேட்பவர்களை வெளியூர் கும்பல் மிரட்டுகிறது. எனவே நாங்கள் அவர்களுக்கு பயந்து இந்த விஷயத்தில் தலையிடுவது இல்லை”, என்று கூறினார்கள்.
பொது மக்கள் கூறுவதை வைத்து பார்க்கும்போது கீரனூர் பகுதியில் மேடை மண் வெட்டி எடுக்கும் நபர்கள் உள்ளூர் பகுதியை சேர்ந்தவர்கள் இல்லை என்பது நமக்கு வெட்டவெளிச்சமாக தெரிகிறது. வெளியூரிலிருந்து இங்கு வந்து தங்கி உள்ளூர் மக்களை மிரட்டி மேடை மண் கொள்ளையடிக்கப் படுகிறது. இதை அரசாங்க அதிகாரிகள் கண்டுகொள்வதே இல்லை என்பது நிதர்சனமான உண்மை.
இது ஒருபுறமிருக்க ஈரோடு மாவட்டம், சென்னிமலை ஒன்றியத்திற்குட்பட்ட ஓட்டப்பாறை பஞ்சாயத்தில் தனியார் நிலத்தில் இருந்து அனுமதி இல்லாத மேடை மண் இரவு நேரங்களில் எடுக்கப்பட்டு பெருந்துறை, ஈரோடு பகுதிகளுக்கு கொண்டு சென்று விற்பனை ஆகிறது. பிரபல மாத இதழின் நிருபர் ஒருவர் இது பற்றி செய்தி சேகரிக்க சென்ற போது இரவு நேரங்களில் மேடை மண் எடுக்கும் நபர்களால் துரத்தப்பட்டுள்ளார். அவர் அருகில் உள்ள காவல் நிலையத்தில் தஞ்சம் அடைந்துள்ளார். பெருந்துறை வட்டாட்சியரோ, சென்னிமலை நில வருவாய் ஆய்வாளரோ, ஈரோடு கனிமவளத் துறை அதிகாரிகளோ இதைப்பற்றி கண்டுகொள்வதாக இல்லை என்கின்றனர் அப்பகுதி பொதுமக்கள்.
நாம் இது பற்றி ஈரோடு மாவட்ட கனிமவளம் மற்றும் சுரங்கத்துறை உயர் அதிகாரியிடம் கேட்டபோது “ஓட்டப்பாறை பஞ்சாயத்துக்கு உட்பட்ட பகுதியில் தனியார் நிலத்தில் மேடை மண் வெட்டி எடுக்கப்பட்ட இடத்தை கிராம நிர்வாக அலுவலர் உடன் எங்களது அதிகாரிகளும் சென்று பார்வையிட்டனர். அது சம்பந்தமான கோப்புகள் விசாரணையில் உள்ளது. உரிய நடவடிக்கை எடுக்கப்படும்“ என்றார். இது போன்று கொங்கு மண்டலத்தில் கிராவல் மண் கொள்ளை களைகட்டுகிறது என்பது நிதர்சனம்.
எது எவ்வாறு இருப்பினும் தமிழகத்தில் பல மாவட்டங்களில் முறையான அனுமதி இன்றியோ அல்லது முறையான அனுமதியோடு அனுமதி பெற்ற அளவைவிட அதிகமாக அளவில் பல இடங்களில் மேடை மண் வெட்டி எடுக்கப்படுவதால் மண்வளம் பாதிக்கப்படுவதோடு விவசாயம் அழியும் சூழ்நிலை ஏற்படுகிறது. வெளி பார்வைக்கு கொண்டுவர வேண்டிய வேலையை நாங்கள் செய்துள்ளோம். இனி களத்தில் இறங்கி போராட வேண்டியது பொதுமக்களின் கடமையாகும்.
& தே.முத்துப்பாண்டி