இந்தியா

பிளாஸ்டிக் குப்பையை சேகரித்தால் இலவசக் கல்வி!

அசாம் மாநிலம் கவுகாத்தியில் பமோஹி என்ற கிராமத்தில் அக்ஷர் பள்ளி இயக்கி வருகிறது. இந்தப் பள்ளியில் கல்விக் கட்டணத்துக்குப் பதிலாக பிளாஸ்டிக் குப்பைகள் வசூலிக்கப்படுகின்றன. வாரத்துக்கு 20 பிளாஸ்டிக் குப்பைகளைக் சேகரித்துவந்து கொடுத்தால், கல்விக் கட்டணம் இல்லாமல் இலவசமாகவே படிக்கலாம்.

இந்த முறையை அக்ஷர் பள்ளி 2016ஆம் ஆண்டு முதல் பின்பற்றுகிறது. மொத்தம் 110 மாணவ மாணவியர் இந்தப் பள்ளியில் படிக்கிறார்கள். இவர்கள் பள்ளிக்கு வரும்போது பிளாஸ்டிக் குப்பையுடன்தான் வருகிறார்கள். அவர்கள் கொண்டுவரும் பிளாஸ்டிக் குப்பைகளை எப்படி மறுசுழற்சி செய்து பயன்படுத்துவது எனவும் இந்தப் பள்ளியில் கற்பிக்கப்படுகிறது.

இந்தப் பள்ளியில் குழந்தைகளைச் சேர்க்கும்போதே பெற்றோரிடமும் இனி பிளாஸ்டிக்கை எரிக்கமாட்டோம் எனக் உறுதிமொழி பெறப்படுகிறது.
“எங்கள் வீட்டில் தினமும் காலையில் பிளாஸ்டிக்கை எரிப்போம். பிளாஸ்டிக்கை எரிப்பதால் வரும் புகை புற்றுநோயை ஏற்படுத்துகிறது என்று அறிந்து அதைக் கைவிட்டோம். இப்போது, வாரம் இரண்டு முறையாவது பிளாஸ்டிக்கை சேகரித்து வருகிறோம்.” என மாணவர் ஒருவர் தெரிவிக்கிறார்.

கவுகாத்தி நகரில் நாள்தோறும் 37 டன் குப்பைகள் உருவாகின்றன என என்விரோன் ((Environ)) என்ற தொண்டு நிறுவனம் கூறுகிறது. ஆனால், அக்ஷர் பள்ளி பிளாஸ்டிக் குப்பைகளைச் சேகரிப்பதுடன் பயனுள்ள விதமாக மறுசுழற்சியும் செய்கிறது. சிறிய பிளாஸ்டிக் குப்பைகளை பிளாஸ்டிக் பாட்டில்களுக்குள் திணித்து செங்கற்களுக்கு மாற்றாக வகுப்பறை, கழிப்பறை, நடைபாதை போன்றவற்றை கட்ட பயன்படுத்துகின்றனர்.

2013ஆம் ஆண்டு அமெரிக்காவின் நியூயார்க்கிலிருந்து இந்தியா வந்த மழின் என்பவரும் அசாமைச் சேர்ந்த சமூக சேவை பட்டதாரியான பர்மிதா என்வரும் இந்தப் பள்ளியை தொடங்கியுள்ளனர். 20 மாணவ மாணவிகளுடன் தொடங்கிய இந்தப் பள்ளியில் இப்போது 100 பேருக்கு மேல் சேர்ந்துள்ளனர். 2018ஆம் ஆண்டு திருமணம் செய்துகொண்ட இவர்கள் அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியா முழுக்க 100 அக்ஷர் பள்ளிகளை உருவாக்குவதை இலக்காகக் கொண்டு வைத்துள்ளனர்.

இதேபோல் தமிழகத்திலும் பிளாஸ்டிக்கை ஒழிக்க சட்டம் இயற்றி நடைமுறையும் படுத்தியுள்ளனர். ஆனால் உணவுப்பொருட்கள் அனைத்தும் டிபார்ட்மெண்ட் ஸ்டோர்களில் பிளாஸ்டிக் கவர்களில் தான் கொடுக்கிறார்கள். சட்டம் இயற்றினாலும் அதனை கடுமையான முறையில் நடைமுறைப்படுத்த ஆட்சியாளர்கள் தான் முயற்சி எடுக்க வேண்டும். பிளாஸ்டிக் ஒழிப்பில் அசாம் மாநிலம் போல் நமது மாநிலத்திலும் பள்ளி மாணவர்களிடையே பிளாஸ்டிக் உபயோகத்தால் ஏற்படும் தீங்கை விளக்கி விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும் என்பதே பொதுமக்களின் எதிர்பார்ப்பாக இருக்கிறது.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button