திருப்பூர் ஆற்றில் கழிவு நீரை வெளியேற்றும் வாகனங்கள்..! : வெளிவந்த அதிர்ச்சி வீடியோ
திருப்பூர் மாநகராட்சி பகுதிகளில் தனியார் செப்டிக் டேங்க் வாகனங்கள் வீடுகளில் இருந்து அப்புறப்படுத்தும் மனிதக்கழிவுகளை முறையாக அப்புறப்படுத்தாமல் நொய்யல் ஆற்றில் கலந்து வருவது தொடர்பாக புகார் எழுந்துள்ளன.
இந்த நிலையில் திருப்பூர் மங்கலம் சாலை ஆரப்பாளையம் அருகே நொய்யல் ஆற்றுக்கு செல்லும் கால்வாயில் தனியார் வாகனம் ஒன்று மனிதக் கழிவுகளை வெளியேற்றி வந்தனர்.
இதுதொடர்பாக, அந்த வழியாக சென்ற நபர் அவர்களிடம் கேட்ட போது, கழிவுகளை வெளியேற்றி வந்த நபர் உடனடியாக அதனை நிறுத்தி அங்கிருந்து தப்பிச் சென்றார். இது தொடர்பாக வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.
மேலும், இதுபோன்று மனிதக் கழிவுகளை ஆற்றில் கலப்பவர்கள் மீது மாநகராட்சி உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்து வருகிறது.
பொதுவாக இரவு நேரங்களில் இப்படியான தனியார் செப்டிக் டேங்க் வாகனங்களில் இருந்து ஊருக்கு வெளியே உள்ள ஏரிகள், குளங்கள் மற்றும் வெட்ட வெளியில் கழிவு நீரை வெளியேற்றி வந்தனர். தற்போது ஊரடங்கு அமலில் இருப்பதை சாதகமாக்கி கொண்டு பட்டப்பகலில் இப்படியான செயலில் ஈடுபட்டிருப்பது அதிர்ச்சியை அளித்துள்ளது.
- சௌந்திரராஜன்