பரமக்குடி பள்ளி ஆசிரியரின் ஆன்லைன் வேலை வாய்ப்பு மோசடி : ஏமாறும் பட்டதாரிகள்…
வேலை வாங்கித்தருவதாக ஆன்லைனில் மோசடிக் கும்பல் பெருகிக் கொண்டே இருக்கிறார்கள். சமீபகாலமாக ஆன்லைனில் பல்வேறு மோசடி நடந்ததாக காவல் நிலையங்களில் புகார்கள் குவிந்த வண்ணம் உள்ளது.
இதேபோல் இராமநாதபுரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் உள்ள மாவ்ட குற்றப்பிரிவு அலுவலரிடம் புகார் மனு கொடுக்கப்பட்டு அவர்களும் முதல் தகவல் அறிக்கையை (FIR) பதிவு செய்திருக்கிறார்கள். புகார் கொடுத்த ஜெகதீசன் நம்மிடம் கூறுகையில் தேசிய மயமாக்கப்பட்ட வங்கிகள், இரயில்வே மற்றும் மத்திய அரசு அலுவலகங்களில் எளிய முறையில் வேலை வாங்கித் தருவதாக விளம்பரம் செய்து அதற்கான விண்ணப்பமும் வினியோகம் செய்தார். நானும் அதை நம்பி விண்ணப்பத்தை பூர்த்தி செய்து கொடுத்தேன். அதன்பிறகு நேர்காணல் நடத்தினார்கள். நிறையப் பேர் கலந்து கொண்டார்கள். அதன்பிறகு நேர்காணலில் கலந்து கொண்டவர்களிடம் தொடர்பு கொண்டு தேர்வு செய்யப்பட்டதாக கூறி சில லட்சங்கள் கட்டினால் அப்பாயின்மெண்ட் ஆர்டர் தருவதாக காட்டினார்கள். அதை நம்பி பலபேர் பணமும் கட்டினார்கள். அவர்கள் கொடுத்த ஆர்டர் காட்டி அரசு முத்திரையுடன் சம்பந்தப்பட்ட துறையின் உயர் அதிகாரியின் முத்திரையுடன் கூடிய கையொப்பம் இடம் பெற்றிருந்தது. அதைப் பெற்றுக்கொண்ட சிலர் தேசிய மயமாக்கப்பட்ட வங்கியின் அதிகாரியிடம் கொடுத்தபோது அது போலியானது என்று புகார் கொடுத்து வழக்குப்பதிவு செய்து சிறையில் அடைக்கப்பட்டிருக்கிறார்கள். இதுவரை 736 பேருக்கு அப்பாயின்மென்ட் ஆர்டர் கார்டு கொடுத்திருக்கிறார் இளங்கோ என்பவர். இவரிடம் பாதிக்கப்பட்ட ஒருவர் தலைமைச் செயலகத்திலேயே தீக்குளிக்க முயற்சி செய்த சம்பவமும் நடந்திருக்கிறது. பரமக்குடி ஆயிர வைசிய மேல்நிலைப்பள்ளியில் ஆசிரியராக பணிபுரியும் இளங்கோ, இவரது மனைவி உஷா (அரசுப் பள்ளி ஆசிரியை), பாலமுருகன், சரவணன், தங்கராஜ் ஆகியோர் இதுவரை 83 லட்சம் ஏமாற்றியிருக்கிறார்கள்.
நாடு முழுவதும் சைபர் குற்றங்கள் அதிகரித்து வருகிறது. புதிய தொழில்நுட்பங்கள் வளர, வளர அதற்கெதிரான எதிர்வினைகளும் அதிகரித்து வருகிறது. ஒவ்வொருவரும் தங்களை பற்றிய முழுமையான தகவல்களை பகிரங்கமாக பதிவிடுவதால் மிக எளிதாக ஏமாற்றப்படுகிறார்கள். கல்லூரி படிப்பை முடித்து வெளியே வரும் இளைஞர்கள் மற்றும் இளம்பெண்கள் பெரும்பாலும் ஆன்லைனில் தான் வேலை தேடுகின்றனர். ஆனால் வேலை வாய்ப்பு பற்றி ஆன்லைனில் உள்ள தகவல்கள் உண்மை தகவலா, மோசடி தகவலா என்பதை தெரிந்து கொள்வதில் அவர்கள் கவனம் செலுத்துவதில்லை. இதன்காரணமாக போலி வேலைவாய்ப்பை நம்பி பல லட்சங்களை கொடுத்து ஏமாறுகின்றனர். இதனால் மனதளவில் பாதிக்கப்படுவதோடு, விபரீத முடிவுகளை எடுக்கும் நிலைக்கு தள்ளப்படுகின்றனர்.
இதுபோன்ற ஆன்லைன் வேலைவாய்ப்பு மோசடிகளில் சிக்கியவர்களில் பெரும்பாலும் ஈரோட்டு மாவட்டத்தைச் சேர்ந்தவர்களே அதிகம். புதிய பட்டதாரிகளே எச்சரிக்கையாக இருக்கின்றனர். உண்மையாக நிறைய வேலைவாய்ப்புகள் இருந்த போதிலும், பல போலி நிறுவனங்களும் இளைஞர்களை குறிவைத்து இயங்கி வருகின்றன. நேர்முகத்தேர்வுக்கு அழைக்கும்போது அதற்கான கட்டணம் என கூறி பல லட்சங்களை ஏமாற்றி விடுகின்றனர்.
இதேபோல் வெளிநாட்டில் வேலை வாய்ப்பு இருப்பதாக கூறும் போலி நிறுவனங்கள், கிளியரன்ஸ் சான்றிதழ் வாங்கவேண்டும் உள்ளிட்ட பல காரணங்களை காட்டி காசு பார்த்து விடுகின்றன. இதனால் வேலை தேடுபவர்கள் பல ஆயிரம் கொடுத்து ஏமாறுகின்றனர். தற்போது சாப்ட்வேர் உட்பட பல துறைகளில் சுமார் 7 லட்சத்து 40 ஆயிரம் காலி பணியிடங்கள் காணப்படுகின்றன.
வேலை தேடுபவர்கள் போலியானவை எவை என்பது குறித்து எச்சரிக்கையாக இருப்பது அவசியம். ஆன்லைனில் தேர்வு செய்யப்படும் நிறுவனங்கள் கட்டணம் குறித்து தெரிவித்தால் உஷாராகிவிடுவது அவசியமாகும். கல்லூரி மற்றும் பல்கலைக்கழகங்களில் பாதுகாப்பான ஆன்லைன் வேலை வாய்ப்பு குறித்து குறிப்பிடத்தக்க அளவில் ஆலோசனை மற்றும் வழிமுறைகளை கூறுவது இல்லை என பெரும்பாலோனோர் கருத்து தெரிவித்துள்ளனர்.
ஆன்லைன் மூலம் வேலைவாய்ப்பை தேர்வு செய்பவர்கள் சம்பந்தப்பட்ட நிறுவனம் குறித்த முறையான தகவல்களை முதலில் தெரிந்து கொள்ளவேண்டும். பணத்தைகொடுத்து ஏமாற கூடாது என ஆய்வாளர்கள் எச்சரிக்கின்றனர்.