தமிழகம்

பல்லடத்தில் எகிப்து நாட்டின் கட்டிடக்கலையா? : அதிர்ச்சி தகவல்

திருப்பூர் மாவட்டம் பல்லடத்தில் கட்டப்பட்டு வரும் வர்த்தக கட்டிடங்கள் விதிமுறைகளை மீறி கட்டப்பட்டு வருவதாகவும், பொதுமக்கள் உயிருக்கு ஆபத்தை ஏற்படுத்தும் விதமாக அமைந்துள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

பொதுவாக வீட்டுமனைகள் மற்றும் வர்த்தக கட்டிடங்கள் கட்ட தகுதியான இடங்கள் அளவிற்கேற்றவாறு நகர்புற ஊரமைப்பு இயக்குநகரத்தில் விண்ணப்பித்து அங்கீகாரம் பெற்று கட்டப்பட வேண்டும் என்பது அரசின் விதிமுறைகள்.

மேலும் கட்டிடங்கள் கட்ட 10 ஆயிரம் சதுரடி வீட்டுமனைகட்டிடங்களுக்கும், 2 ஆயிரம் சதுரடி கொண்ட வர்த்தக கட்டிடங்களுகும் ஊராட்சி நிர்வாகத்தினரால் அனுமதி வழங்க அரசு உத்தரவிட்டிருக்கிறது.

ஆனால் கட்டிடங்கள் கட்ட உத்தேசித்திருக்கும் இடம் நகர்ப்புற ஊரமைப்பு இயக்குநகரத்தால் அங்கீகாரம் பெற்றிருக்க வேண்டும். மேலும் 10 ஆயிரம் சதுரடிக்கு மேல் கட்டப்படும் கட்டிடங்கள் மற்றும் அதற்கு மேலாக கட்டப்படும் உயர் கட்டிடங்கள் மாவட்ட நகர்ப்புற் ஊரமைப்பு அலுவலகத்தினால் சரிபார்க்கப்பட்டு பின்னர் சென்னையில் உள்ள தலைமை நகர்ப்புற ஊரமைப்பு இயக்குநரகத்தின் அங்கீகாரம் பெற்று கடுமையான விதிமுறைகளை பின்பற்றி கட்டப்படவேண்டும் என்பது விதி.

ஆனால் திருப்பூர் மாவட்டம் பல்லடத்தில் கட்டப்பட்டுள்ள கட்டிடங்கள் குறிப்பாக வர்த்தக கட்டிடங்கள் விதிமுறைகளை மீறி கட்டப்பட்டுள்ளதாக புகார் எழுந்துள்ளது.

பல்லடத்தில் உள்ள பிரதான கோவை திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் தனியாருக்கு சொந்தமான கட்டுமான பொருட்கள் விற்பனை நிறுவனம் 50 ஆயிரம் சதுரடியில் கட்டப்பட்டுள்ளது. ஆனால் கட்டப்பட்டுள்ள கட்டிடத்தின் முன்புறம் மற்றும் பின்புறம் மட்டுமே சட்டர்கள் அமைத்துள்ளனர். மேலும் நிறுவனம் கட்டப்படிருப்பது எகிப்து நாட்டின் பிரமீடுகள் போன்று காற்றோட்டமின்றி ஜன்னல்களே இல்லாமல் மொத்த வர்த்தக விற்பனை மையம் கட்டப்படிருப்பது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மேலும் இது போன்று பிரமாண்டமாக 50 ஆயிரம் சதுரடியில் அமைக்கப்பட்டிருக்கும் வர்த்தக கட்டிடங்கள் குறைந்த பட்சம் விதிமுறைப்படி 4 ஆயிரம் சதுரடி வரை காற்றோட்டத்திற்கு ஒதுக்கப்படவேண்டும். மேலும் ஆபத்து காலங்களில் பாதுகாக்க அவசர கால வழிகள் என பல்வேறு பாதுகாப்பு அம்சங்களை ஏற்படுத்த வேண்டும். ஆனால் இந்த நிறுவனம் விதிமுறைகளை காற்றில் பறக்கவிடப்பட்டுள்ளதாக சமூக ஆர்வலர்கள் புகார் தெரிவிக்கின்றனர்.

மேலும் இது போன்று 50 ஆயிரம் சதுரடியில் போதிய பாதுகாப்பு அம்சங்கள் இன்றி கட்டிடங்கள் கட்ட முறையாக அனுமதி பெற்றிருக்கிறதா? அவ்வாறு அனுமதி பெற்றிருந்தால் ஒரு ஜன்னல் கூட இல்லாமல் எவ்வாறு 50 ஆயிரம் சதுரடியில் கட்டிடம் கட்ட அனுமதி அளித்தனர் என்பது வியப்பாக உள்ளது.

சாதாரண குடிமகன் கூலோ கஞ்சியோ குடித்து சிறுக சிறுக சேமித்துவைத்து வீடு கட்ட அனுமதி கோரினால் 10 க்கு 10 அறைக்கே ஒரு ஜன்னல் வைத்தால் தான் அனுமதி என கராராக நடந்துகொள்ளும் அதிகாரிகள் இதுபோன்று கட்டிடங்களை கட்ட எவ்வாறு அனுமதி வழங்கினர் என்பது கேள்விக்குறியாகி உள்ளது.

மேலும் 5 லட்சம் சதுரடி கட்டிட பொருட்கள் தங்களிடம் விற்பனைக்குள்ளதாக விளம்பரப்படுத்தும் இந்த நிறுவனம், கட்டிடங்களுக்கான கட்டுமான பொருட்களை விற்பனை செய்யும் இது போன்ற நிறுவனம் கட்டிடம் கட்டுமானத்தில் விதிமீறல்களில் ஈடுபட்டுள்ளதா? என்பது குறித்து மாவட்ட ஆட்சியர் தனி குழு அமைத்து ஆய்வு செய்யவேண்டும் என்பது அனைவரின் கோரிக்கையாக உள்ளது.

மேலும் பல்லடம் தாலுகாவிற்குட்பட்ட ஆறுமுத்தாம்பாளையம் ஊராட்சிக்குட்பட்ட பகுதியில் பி.ஏ.பி. வாய்க்கால் அமைந்துள்ளது. இப்பகுதியில் வேலம்பாளையத்தில் இருந்து ஆறுமுத்தாம்பாளயம் வழியாக செல்லும் இந்த வாய்க்கால் அறிவொளிநகர் செல்லும் சாலையின் குறுக்கே கடந்து செல்லும் போது சாலையின் குறுக்கே பாலங்கள் எதுவும் கட்டப்படாமல் தார்ச்சாலை போடப்பட்டுள்ளது.

மேலும் சாலையை கடந்தவுடன் மறுபுறம் உள்ள நிறுவனத்தின் சுற்றுச்சுவர் வழியாக நிறுவன வளாகத்திற்குள் சென்று மறுபுறம் வெளியேறுகிறது. மேலும் பிரதான பரம்பிக்குளம் ஆழியாறு பாசன வாய்க்கால் மூலமாக சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள ஆயிரக்கணக்கான விவசாய நிலங்களின் நீராதாரமாக திகழ்ந்து வருகிறது.

இந்நிலையில் மேற்படி பி.ஏ.பி. வாய்க்கால் செல்லும் நீர்வழிப்பாதையை ஆக்கிரமித்து வர்த்தக நிறுவனம் பல ஆண்டுகளாக செயல்படுவது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மேலும் இது போன்று விதிமுறைகள் மீறிய கட்டிடங்கள் மற்றும் நீர் நிலைகளை ஆக்கிரமித்துள்ள நிறுவனங்கள் மீது அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே அனைவரின் கோரிக்கை.

நமது நிருபர்

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button