தமிழகம்

அங்கன்வாடி மையங்களில் பணியாற்றுவது கவுரவக் குறைச்சலா? : உயர் நீதிமன்ற நீதிபதிகள் ஆவேசம்

அங்கன்வாடி மையங்களில் இடைநிலை ஆசிரியர்கள் கண்டிப்பாக பணியாற்ற வேண்டும் என்று உத்தரவிட்ட சென்னை உயர்நீதிமன்றம், அங்கன்வாடி மையங்களில் பணியாற்றுவது கவுரவக் குறைச்சலா எனவும் பள்ளி ஆசிரியர்களுக்கு கேள்வி எழுப்பியது.
அரசுப் பள்ளி வளாகத்தில் உள்ள அங்கன்வாடி மையங்களில், மழலையர் வகுப்புகளை நடத்துவதற்கு இடைநிலை ஆசிரியர்கள் சுமார் 8,000 பேரை நியமித்து தமிழக அரசு உத்தரவிட்டது.
இந்த அரசாணையை எதிர்த்து, தமிழக தொடக்கப் பள்ளி ஆசிரியர்கள் கூட்டமைப்பு தொடர்ந்த வழக்குகளை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்த நிலையில், விழுப்புரத்தைச் சேர்ந்த சுமதி உள்பட 10-க்கும் மேற்பட்ட இடைநிலை ஆசிரியர்கள் இதனை எதிர்த்து வழக்கு தொடர்ந்தனர். அங்கன்வாடி மையங்களுக்கு உபரி ஆசிரியர்கள் நியமிக்கப்படுவார்கள் என்று கூறிய நிலையில், தற்போது தங்களை மாற்றியுள்ளதாக அவர்கள் மனுவில் குற்றம்சாட்டினர்
இந்த வழக்கானது நீதிபதி வி.பார்த்திபன் முன்பு விசாரணைக்கு வந்தபோது, விரைவில் உபரி ஆசிரியர்கள் இறுதி செய்யப்பட்டு நியமிக்கப்படுவார்கள் என அரசுத் தரப்பில் விளக்கமளிக்கப்பட்டது. மேலும் இடைநிலை ஆசிரியர்களின் சம்பள விகிதங்களில் எந்த மாற்றமும் செய்யப்படாது எனவும் விளக்கமளித்தது.
இதனை ஏற்றுக்கொண்ட நீதிபதி, அங்கான்வாடி மையங்களில் தற்காலிகமாக பணியமர்த்தப்பட்ட இடைநிலை ஆசிரியர்கள் தங்களது பணியைத் தொடரவேண்டும் என உத்தரவிட்டார்.
மேலும், அங்கன்வாடி மையங்களில் பணியாற்றுவது கவுரவ குறைச்சலா எனவும் பள்ளி ஆசிரியர்களுக்கு நீதிபதி கேள்வி எழுப்பினார்.
அரசின் ஒவ்வொரு முடிவையும் எதிர்த்து வழக்கு தொடர்வதை சமீபகாலமாக ஆசிரியர்கள் வாடிக்கையாகக் கொண்டுள்ளதாகவும் நீதிபதி வேதனை தெரிவித்தார் இதனை தொடர்ந்து வழக்கு விசாரணை ஜுலை 23-க்கு ஒத்திவைக்கப்பட்டது.
மற்றொரு வழக்கில் அரசு போக்குவரத்து கழகங்களில் பணியாளர்கள் தேர்வு செய்ய, 3 மாதங்களில் தனி தேர்வு கொள்கைகளை வகுக்க தமிழக அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
ஐடிஐ ஃபிட்டர் படிப்பை முடித்து, போக்குவரத்து கழகத்தில் பயிற்சி பெற்றுள்ள திருநெல்வேலியை சேர்ந்த மாற்றுத் திறனாளி கோவைசாமி என்பவர், தனக்கு போக்குவரத்து கழகத்தில் பணி வழங்க உத்தரவிட கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.
வேலை வாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்து 22 ஆண்டுகள் கடந்தும், இதுவரை தனக்கு நேர்முக தேர்வுக்கு அழைத்து எந்த கடிதமும் வரவில்லை என்பதால், 248 நாட்கள் பயிற்சி பெற்ற தனக்கு போக்குவரத்து கழகத்தில் பணி வழங்கும் படி அளித்த மனுவை பரிசீலிக்க வேண்டும் என கோரியிருந்தார்.
இந்த வழக்கை விசாரித்த தனி நீதிபதி, போக்குவரத்து கழகங்களில் உரிய முறையில் விளம்பரம் கொடுக்காமல் பணி நியமனங்கள் மேற்கொள்ளபடுவதாகவும், தேர்வு நடைமுறைகள் ஏதும் இல்லை என்றும் கூறி, அரசு பணியாளர் தேர்வாணையம் அல்லது வேறு அமைப்பின் மூலம் எழுத்து தேர்வு நடத்தி பணியாளர்களை தேர்வு செய்ய வேண்டும் என கடந்த 2014 ஆகஸ்ட் மாதம் உத்தரவு பிறப்பித்தார்.
இந்த உத்தரவை எதிர்த்து தமிழக அரசு போக்குவரத்து கழகத்தின் சார்பில் மேல்முறையீடு செய்யப்பட்டது.
நடத்துனர்கள், ஓட்டுனர்கள், இளநிலை, உதவி பொறியாளர்கள் பணியாளர்கள் பணியிடங்களுக்கு தகுதிகள் நிர்ணயித்து தேர்வுகள் மேற்கொள்வதாகவும், இவர்களின் கல்வி தகுதி, வயது, அனுபவம் உள்ளிட்ட தகுதிகளை பரிசீலித்து செயல்முறை தேர்வு நடத்திய பிறகே பணிக்கு தேர்வு செய்யப்படுவதாக அந்த மனுவில் தெரிவிக்கப்பட்டது.
இந்த மேல்முறையீட்டு வழக்கை விசாரித்த நீதிபதி சசிதரன், பி.டி ஆஷா அமர்வு, அரசு பணி நியமனத்தில் வெளிப்படைத்தன்மை பின்பற்ற வேண்டும் எனவும், வெளிப்படைத்தன்மையை உறுதி செய்ய விளம்பரங்களை வெளியிட்டு, தகுதியுடைய அனைவரையும் போட்டியிட அனுமதித்து பணியாளர்கள் தேர்வு செய்ய வேண்டும் என உத்தரவிட்டது.போக்குவரத்து துறையில், பணியாளர்கள் தேர்விற்கு உரிய நடைமுறையை உருவாக்க நீதிமன்றம் உத்தரவிட்டும், அந்த நடைமுறைகளை ஏற்படுத்த எந்த நடவடிக்கையும் அரசு எடுக்க வில்லை என கூறிய நீதிபதிகள், போக்குவரத்து துறை பணியாளர்கள் தேர்விற்கு 3 மாதங்களில் தனி தேர்வு கொள்கைகளை வகுக்க வேண்டும் என உத்தரவிட்டு, வழக்கை முடித்து வைத்தனர்.
மனுதாரருக்கும் இந்த தேர்வில் கலந்து கொள்ள ஏதுவாக வயது வரம்பை தளர்த்தி அனுமதிக்கவும் நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button