புகாரை விற்பனை செய்யும் சென்னை மாநகராட்சி செயற்பொறியாளர்….
சென்னை மாநகராட்சி மாதவரம் மண்டலம்-3 ன் செயற்பொறியாளாராக பணிபுரிந்து வருகிறார் ராமமூர்த்தி. இவர் தன்னிடம் வரும் புகார் கடிதங்களை சம்பந்தப்பட்ட குற்றம் சுமத்தப்பட்ட நபர்களிடம் கொடுத்து பணம் வசூல் செய்வதை வாடிக்கையாக செய்து வருகிறார்.
சென்னை மாநகராட்சி மாதவரம் மண்டலம்-3 ன் செயற்பொறியாளராக பல ஆண்டுகளாக பணியாற்றி வருபவர் ராமமூர்த்தி. மாதவரம் மண்டலத்திற்கு உட்பட்ட கதிர்வேடு பகுதியில் முறைகேடாக மாநகராட்சியில் கட்டிடங்கள் கட்டுவதற்கான அனுமதி பெறாமல் கட்டிடங்கள் கட்டப்பட்டு முப்பது லட்சத்திற்கு மேல் வாடகை வசூல் செய்து வருகிறார் குஜராத்தைச் சேர்ந்த ராஜீவ் படேல் என்பவர்.
இவரது கட்டிடத்திற்கு அருகிலேயே இவரது மகன் தினேஷ்குமார் முறைகேடாக மிகப்பெரிய இரண்டு கட்டிடங்களை கட்டி வாடகை வசூல் செய்து வருகிறார்.
இது சம்பந்தமாக மாநகராட்சி ஆணையர், தலைமை பொறியாளர் ( கட்டிடங்கள் ),நிர்வாக பொறியாளர், மாதவரம் மண்டல அதிகாரி, மற்றும் செயற்பொறியாளர் ராமமூர்த்தி ஆகியோரிடம் கடந்த இரண்டு மாதங்களாக பல்வேறு புகார்கள் கொடுக்கப்பட்டுள்ளது .
இந்த புகார்கள் சம்பந்தமாக விசாரணை செய்து நடவடிக்கை எடுத்து , அதிகாரிகளுக்கு அறிக்கை கொடுக்க வேண்டிய ராமமூர்த்தி, அதை செய்யாமல்
முறைகேட்டில் ஈடுபட்டவர்களை சந்தித்து தனக்கு பணம் தேவைப்படும் போதெல்லாம் புகார் கடிதங்களை காண்பித்து பணம் வசூல் செய்வதோடு, நான் தான் நடவடிக்கை எடுக்க வேண்டும். இன்னும் சில மாதங்கள் தாமதப்படுத்தி வைக்கிறேன். கவலைப்படாதே பணத்தை மட்டும் கொடு என்று புகார்கள் மீது நடவடிக்கை எடுக்காமல் தாமதப்படுத்தி வருகிறார்.
கடந்த 5 ஆம் தேதி கூட திணேஷ்குமாரிடம் ஒரு லட்சம் பேரம் பேசி 70000 ( எழுபது ஆயிரம் ) வாங்கி இருக்கிறார்.
பயிர்களை பாதுகாக்க வேண்டிய வேலியே பயிர்களை மேய்வது போல் குற்றங்களை தடுக்க வேண்டிய பொறுப்பில் இருக்கும் இவரைப் போன்ற அரசு அதிகாரிகளால் தான் நேர்மையாக இருக்கும் அரசு அதிகாரிகளுக்கும் கெட்ட பெயர் ஏற்படுகிறது.
இது சம்பந்தமாக மாநகராட்சி லஞ்ச ஒழிப்பு துறை, மாநில லஞ்ச ஒழிப்புத்துறையில் புகார்கள் கொடுக்கப்பட்டுள்ளது. மாநகராட்சி ஆணையர் மாதவரம் மண்டல செயற்பொறியாளர் ராமமூர்த்தியை பணி நீக்கம் செய்து விரிவான விசாரணை செய்ய வேண்டும் என்பதே பெரும்பாலானோரின் கோரிக்கையாக உள்ளது. -
–சூரியன்