தேசியக்கொடி, அரசுகளின் சின்னங்களை தவறாக பயன்படுத்துபவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்: நீதிமன்றம் உத்தரவு!
காங்கிரஸ் கட்சியை சேர்ந்த முன்னாள் எம்.பி. அன்பரசு, தன்னுடைய வாகனங்களில் தேசிய சின்னங்கள் மற்றும் அடையாளங்களை தவறாக பயன்படுத்துவதாகவும், அதை தடுப்பதற்கான சட்ட விதிகளை காவல்துறை பின்பற்றுவதில்லை எனக்கூறி சினிமா பைனான்சியர் முகுந்த்சந்த் போத்ரா என்பவர் கடந்த 2014ஆம் ஆண்டு வழக்கு தொடர்ந்திருந்தார். அவரது மறைவிற்கு பின்னர் இந்த வழக்கை அவரது மகன் ககன் சந்த் போத்ரா நடத்தி வந்தார்.
இந்த வழக்கில் உத்தரவு பிறப்பித்துள்ள சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி எஸ்.எம்.சுப்ரமணியம், வாகனங்களில் முறைகேடாக பயன்படுத்தப்பட்டு வரும் தேசியக்கொடி, இலச்சினைகள், பெயர் மற்றும் முத்திரைகள் ஆகியவற்றை ஒரு மாதத்திற்குள் அகற்ற வேண்டுமென பத்திரிகை மற்றும் ஊடகங்களில் விளம்பரம் செய்ய டிஜிபி’க்கு உத்தரவிட்டார். இதனை பின்பற்றாதவர்கள் மீது வழக்கு பதிவு செய்ய வேண்டும் எனவும் உத்தரவில் தெரிவித்துள்ளார்.
மேலும் தேசியக்கொடிகள், சின்னங்கள், இலச்சினைகள் பயன்படுத்துபவர்களின் விவரங்களை முறையாக பராமரிக்க டிஜிபி மற்றும் சென்னை மாநகர காவல் ஆணையருக்கு உத்தரவிட்டுள்ள நீதிபதி, இந்த உத்தரவை மீறும் அதிகாரிகள் மீது தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் தெரிவித்துள்ளார்.
உயர் நீதிமன்றத்தின் இந்த உத்தரவை செயல்படுத்துமாறு அதிகாரிகளுக்கு இரண்டு வாரங்களுக்குள் டிஜிபி உத்தரவிட வேண்டும் என தெரிவித்து இந்த வழக்கு முடித்து வைக்கப்பட்டது.