திண்டுக்கல்லில் நீதிபதி போல கையெழுத்திட்டு கொலை வழக்கில் தொடர்புடையவருக்கு விடுதலை என தீர்ப்பு அறிக்கை கொடுத்து ஏமாற்றிய வழக்கில் போலி வழக்கறிஞருக்கு 6 வருட சிறை தண்டனை வழங்கப்பட்டுள்ளது. திண்டுக்கல் ஆர்.எம்.காலனி பகுதியை சேர்ந்த சிவநாத் கடந்த 2005-ம் ஆண்டு கொலை வழக்கு ஒன்றில் 4-வது குற்றவாளியாக கைதான நிலையில், இவரது தந்தை உமையனை தொடர்பு கொண்ட கார்த்திக் என்ற இளைஞர் தான் ஒரு வழக்கறிஞர் என்றும், சிவநாத்திற்கு விடுதலை வாங்கி தருவதாகவும் கூறி 43 லட்சம் ரூபாய் பணம் பறித்துள்ளார்.
மேலும் வழக்கு விசாரணை முடிந்து விட்டதாக கூறிய கார்த்திக், உமையானிடம் சிவநாதன் வழக்கிலிருந்து விடுதலை செய்யப்பட்டதாக கூறி அதற்கு விடுதலை அறிக்கை ஒன்றையும் மாவட்ட நீதிபதி கையெழுத்துடன் வழங்கினார். இதுகுறித்து நீதிமன்றத்தில் கேட்ட போது கார்த்திக் பொய் வழக்கறிஞர் என்பது தெரியவந்தது. நீதிமன்ற பரிந்துரையின் பேரில் கார்த்திக் மீது வழக்குப் பதிவு செய்த போலீசார் கடந்த மார்ச் மாதம் அவனை கைது செய்தனர்.