சென்னை வடிகால் திட்டம்: ஜெர்மனி வங்கியிடம் ரூ.40 கோடி கடன்
சென்னையில் ஒருங்கிணைந்த வெள்ளநீர் வடிகால் அமைப்பை ஏற்படுத்தும் திட்டத்துக்கு ரூ.40 கோடி நிதி வழங்க ஜெர்மனியைச் சேர்ந்த வங்கி (Kreditanstalt für Wiederaufbau) இசைவு தெரிவித்துள்ளது. டெல்லியில் நடைபெற்ற இந்தியா – ஜெர்மனி நாடுகளைச் சேர்ந்த அதிகாரிகளின் கூட்டத்தில் இந்த முடிவு எட்டப்பட்டிருக்கிறது. இந்தக் கூடத்தில் வெள்ளநீர் வடிகால் இலாகா தலைமைப் பொறியாளர் எல். நந்தகுமார் மற்றும் மாநகராட்சி ஆணையர் ஜி. பிரகாஷ் ஆகியோர் கலந்துகொண்டார்.
இக்கூட்டத்தில் வைத்து இதுவரை உள்ளாட்சி அமைப்புகள் செயல்படுத்திய பல்வேறு திட்டங்கள் பற்றியும் புதிய ஒருங்கிணைந்த வெள்ளநீர் வடிகால் அமைக்கும் திட்டம் பற்றியும் விளக்கியுள்ளனர். கூவம் மற்றும் அடையாறு ஆகிய ஆறுகளை மீட்டெடுக்கும் திட்டம் பற்றியும் விவரித்துள்ளனர். ரூ.40 கோடி நிதியை எந்த வழிகளில் செலவிடுவது எனவும் கூறியுள்ளனர். கூவம், அடையாறு, கோவளம், கொசஸ்தலை முதலான ஆறுகளை ஒட்டிய பகுதிகளில் வடிகால் கட்டமைப்பை ஏற்படுத்த இந்த நிதி பயன்படுத்தப்படும் என நந்தகுமார் தெரிவித்துள்ளார்.
ஏற்கெனவே கோவளம் பகுதியில் 360 கி.மீ. தொலைவுக்கு வடிகால் அமைப்பை ஏற்படுத்த ரூ.1,230 கோடி கடன் அளிப்பதற்கு இதே வங்கி ஒப்புக்கொண்டுள்ளது. இது குறித்து பேச சென்னை மாநகராட்சி அதிகாரிகள் ஜெர்மனி வங்கி (KfW Bank) அதிகாரிகளை வரும் ஜூலை மாதம் சந்திக்க உள்ளனர்.
இந்தச் சந்திப்புக்குப் பிறகு, ஜனவரி 2020ல் நிதி வழங்கும் ஒப்பந்தம் கையெழுத்திடப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. திட்டத்தின் சாத்தியப்பாடு குறித்த ஆய்வு, வடிவமைப்பு மற்றும் ஆலோசனை ஆகியவற்றை வங்கியே ஏற்று செய்ய உள்ளது. அத்துடன் மாநகராட்சியின் ஏலம் மற்றும் டெண்டர் நடைமுறையையும் மேற்பார்வை செய்ய உள்ளது.