ஏடிஎம் பணம் ரூ.16 லட்சம் கொள்ளை : கொள்ளையனை சாமர்த்தியமாக காவல்நிலையத்தில் ஒப்படைத்த ஆட்டோ டிரைவர்
திருச்சியில் ஏடிஎம் பணத்தை கொள்ளையடித்த கொள்ளையன், குடிபோதையில் தாமாக பெரம்பலூர் போலீசில் சிக்கிய சம்பவம் அரங்கேறியுள்ளது. அவனிடம் இருந்து 16 லட்சம் ரூபாய் ரொக்கப்பணம் மீட்கப்பட்டுள்ளது.
திருச்சியில் கடந்த 20ம் தேதி சிட்டி யூனியன் வங்கியின் ஏடிஎம்மில் இருந்த பணம் கொள்ளையடிக்கப்பட்டது. இது தொடர்பாக திருச்சி போலீசார் வழக்குப்பதிவு செய்து, தனிப்படை வைத்து தீவிர விசாரணை நடத்தி வந்தனர். இந்த நிலையில், திருச்சி ஏடிஎம்மில் கொள்ளையடித்த கொள்ளையன் பெரம்பலூரில் குடிபோதையில் பிடிட்டுள்ளான்.
கொள்ளையடித்த பணத்தை பையில் வைத்துக்கொண்டு குடிபோதையில் சுற்றி வந்துள்ளான். அப்போது ஆட்டோ ஒன்றை மறித்து அதில் ஏறியுள்ளான். பின்னர், தங்குவதற்கு ரூம் வேண்டும், ஏதாவது ஹோட்டல் இருந்தால், ரூம் புக் செய்து கொடுத்துவிட்டு போங்கள் என்று கூறியுள்ளார். தொடர்ந்து அவனது நடவடிக்கையில் சந்தேகம் ஏற்பட்ட ஆட்டோ டிரைவர், நேராக அவனை போலீசில் ஒப்படைத்தார்.
இது தொடர்பாக ஆட்டோ டிரைவர் கூறியதாவது, ‘சம்பவத்தன்று ஒருவர் பெரிய பையை வைத்துக்கொண்டு, சவாரிக்காக என் ஆட்டோவில் ஏறினார். போகும் போது, அவன் தங்குவதற்கு ரூம் கேட்டார். நான் அருகில் இருந்த ஹோட்டலுக்கு கூட்டிக் கொண்டு போனேன். அப்போது அவன் குடிபோதையில் இருந்ததால், ரூம் தர முடியாது என்று மறுத்துவிட்டார்கள்.
பின்னர், அருகில் இருந்த மற்றொரு தெரிந்த ஹோட்டலுக்கு கூட்டிக் கொண்டு போனேன். குடிபோதையில் இருந்தாலும், ரூம் தருவதற்கு அவர்கள் சம்மதித்தார்கள். ஆனால், அடையாள அட்டை கேட்டார்கள். நான் அவனிடம் அடையாள அட்டை ஏதாவது இருந்தால் கொடுங்கள் என்றேன்.
முதலில் அடையாள அட்டை இல்லை என்று கூறினான். அடையாள அட்டை இல்லை என்றால் ரூம் கிடையாது என்று நான் சொன்னேன். பின்னர், சரி பொறுங்கள். அடையாள அட்டையை எடுத்து தருகிறேன் என்று அவன் கொண்டு வந்த பையை திறந்தான். அப்போது தான் நான் அதிர்ச்சியடைந்தேன். பை முழுவதும் கட்டுக்கட்டாக பணம் இருந்தது.
உடனே அடையாள அட்டையையும், பையையும் நைசாக நான் வாங்கிக்கொண்டேன். பின்னர் அவனையும் சாமர்த்தியமாக ஆட்டோவில் ஏற்றி, நேராக போலீசில் ஒப்படைத்து விட்டேன்’ இவ்வாறு ஆட்டோ டிரைவர் தெரிவித்துள்ளார்.
குடிபோதையில் இருந்த கொள்ளையனிடம் போலீசார் நடத்திய விசாரணையில், அவன் திருச்சி பாலக்கரையைச் சேர்ந்த ஸ்டீபன் என்பதும், ஏடிஎம் கொள்ளையில் ஈடுபட்டதும் தெரியவந்தது. பின்னர், ஸ்டீபன் கொள்ளையடித்த 16 லட்சம் ரூபாய் ரொக்கப்பணத்தைப் போலீசார் பறிமுதல் செய்தனர்.
திருச்சி போலீசார் ஏடிஎம் கொள்ளையனை தனிப்படை வைத்து தீவிரமாக தேடி வந்த நிலையில், குடிபோதையில் தாமாக பெரம்பலூர் போலீசில் கொள்ளையன் சிக்கியுள்ளான். அவனை போலீசார் மீண்டும் திருச்சிக்கு கொண்டு சென்றனர்.