திருச்சியில் பெண்களுக்கான நவீன வசதிகளுடன் கூடிய கழிவறை ! –
திருச்சி ஸ்ரீரங்கம் கோட்டத்திற்கு உட்பட்ட சத்திரம் பேருந்து நிலையம், மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டி அருகே அமைந்துள்ளது பெண்களுக்கான நவீன சுகாதார மைய வளாகம். ரூ. 40 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்ட இந்த மையத்தை மாநகராட்சி ஆணையர் ரவிச்சந்திரன் திறந்து வைத்தார்.
இந்த சுகாதார வளாகத்தில் 24 மணிநேரமும் ஒரு ரூபாய்க்கு ஒரு லிட்டர் சுத்தமான குடிநீர் வசதியும், மேலும் அதன் அருகிலேயே ஏடிஎம் இயந்திரமும், முக்கியமாக பெண்களுக்கான பிரத்தியேகமாக சென்சார் மூலம் இயங்கும் கதவுகளை கொண்டும், மின்விளக்குகள் கொண்டும் கழிப்பறைகள் பொருத்தப்பட்டுள்ளன.
இதன் மூலம் பெண்கள் கழிப்பறைக்கும் செல்லும்போது மட்டும் கதவு தானாக திறந்து மூடும். அதேபோல மின்விளக்குகளும் தானாகவே கதவு திறந்தவுடன் எரியும், கழிப்பறையின் உள்ளே மின்விசிறி பொருத்தப்பட்டுள்ளது.
இது மட்டுமல்லாது குழந்தைகளுக்கான பிரத்யேக அறைகளும் இடம்பெற்றுள்ளன, அதாவது தாய்மார்கள் கழிப்பறைக்கு செல்லும்போது தங்களது குழந்தைகளை பத்திரமாக மற்றொரு அறையில் அமர வைப்பதற்கான இடமும், பின்னர் இவர்கள் கழிப்பறைக்கு சென்று வருவதற்கான ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.
கழிவறையை பயன்படுத்திய பிறகு கிருமி நாசினி மருந்துகள் கொண்டும் கைகளை கழுவதற்கான பிரத்தியேக வசதிகளும் செய்யப்பட்டுள்ளன. மேலும் ஐந்து ரூபாய் கட்டணம் செலுத்தி நாப்கின் பெற்றுக்கொள்ளும் இயந்திரம், இந்த கழிப்பறையில் இடம்பெற்றுள்ளது. பயன்படுத்திய நாப்கின்களை சுகாதார முறையில் மின்சார வசதியுடன் சாம்பலாக மாற்றும் இன்சுலேட்டர் இயந்திரமும் இதில் பொருத்தப்பட்டுள்ளது சிறப்பு அம்சமாகும்.
இதே வளாகத்தில் மகளிருக்கான மருத்துவ ஆலோசனைகளும், மாதவிடாய் சுகாதார மேலாண்மை பரிசோதனைகளும் ஒரே இடத்தில் கிடைக்கும் வகையில் ஹெல்த் கிளினிக்கும் அமைந்துள்ளன. இது பெண்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது.
திருச்சி மாநகராட்சியில் முதல் முறையாக நவீன வசதிகளுடன் கூடிய கழிப்பறைகளை திறக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து ஆண்களுக்கான கழிப்பறையும், தேவைக்கேற்ப பெண்களுக்கான கழிப்பறையும் திறந்து வைக்கப்படும் என மாநகராட்சி ஆணையர் ரவிச்சந்திரன் தெரிவித்தார்.
அதேபோல பயன்படுத்திய பெண்களும் இதுபோன்று இலவசமாக மாநகராட்சி சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள இந்த நவீன கழிப்பறை மிகவும் பெண்களுக்கு பயனுள்ளதாகவும் பாதுகாப்பானதாக இருக்கும் இதைப் பயன்படுத்தும் அனைவரும் சுத்தமாக வைத்துக்கொள்ள வேண்டும் என்பது அவர்கள் தெரிவித்தனர்.
ஒரே இடத்தில் பெண்களுக்கான கழிவறை, குழந்தைகள் பராமரிப்புடன் கூடிய கழிவறை, சிறுமியர் கழிவறை, நாப்கின் எரிப்பான், தானியாங்கி நாப்கின் விற்பனை கருவி, கை உலர்த்தி, சுத்திகரிக்கபட்ட குடிநீர், பணம் எடுக்கும் இயந்திரம், நவீன பரிசோதனை மையம் அமைந்திருப்பது பொதுமக்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.