தமிழகம்

தண்ணீர் பற்றாக்குறை! காரணம் என்ன?

போதிய அளவு மழை இல்லாததும், நிலத்தடி நீர் மட்டம் கடுமையாக குறைந்து போனதும் தண்ணீர் தட்டுப்பாடு ஏற்பட காரணம் என தமிழக குடிநீர் மற்றும் வடிகால் வாரியம் கூறியுள்ளது.
தமிழகத்தில் குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ள நிலையில், அதுகுறித்து ஸ்வாட் முறையிலான ஆய்வில் தமிழக குடிநீர் மற்றும் வடிகால் வாரியம் ஈடுபட்டது. இந்த ஆய்வின் முடிவு குறித்து வாரியம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், உத்தரப்பிரதேசம், உத்தரகாண்ட், குஜராத், மேற்குவங்கம், ஒடிசா, மகாராஷ்டிரா போன்று தமிழகத்தில் தாமிரபரணி தவிர வற்றாத ஜீவநதி இல்லை என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
தமிழகத்தில் தென்மேற்குப் பருவ மழை பொழிவு கடந்த 2 ஆண்டுகளாக தடைபடுவதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. கடந்த ஆண்டு இயல்பு அளவான 960 மில்லி மீட்டரை விட 149 மில்லி மீட்டர் குறைவாகவே மழை பெய்துள்ளது என்றும், 18 மாவட்டங்களில் இயல்பை விட குறைந்த அளவு மழையே பொழிந்தது என்றும் கூறப்பட்டுள்ளது.
தமிழகத்தின் தரை பரப்பில் 73 சதவீதம் கடினப்பாறைகளையும், 27 சதவீதம் சற்று மென் பாறைகளும் உள்ளன என்றும், கடினப்பாறை பகுதிகளில் நீரோட்டம் குறைந்தும், கடலோரங்களில் மென் பாறைகளின் அருகே உப்புத்தன்மை கொண்ட நீரோட்டம் உள்ளது என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.
தமிழகத்தின் பல்வேறு இடங்களில் ஆயிரத்து 286 ஆழ்துளைக் கிணறுகளில் நீர்மட்டக் குறியீட்டைக் கண்டறியும் எலக்ட்ரானிக் கருவியைக் கொண்டு சோதனை செய்ததில் 16 மாவட்டங்களில் 50 அடிக்கும் கீழ் நீர்மட்டம் குறைந்து உள்ளதாக கூறப்பட்டுள்ளது.
அனைத்துக்கும் மேலாக மழைநீர் சேகரிக்கும் பழக்கம் மக்களிடையே வெகுவாகக் குறைந்துவிட்டதாகவும், இவையே தண்ணீர் தட்டுப்பாட்டுக்கு முக்கிய காரணங்கள் என்றும் குடிநீர் வடிகால் வாரியம் தெரிவித்துள்ளது.


தமிழகம் முழுவதும் தண்ணீர் பஞ்சம் தலைவிரித்தாடும் நிலையில், சென்னையில் நள்ளிரவில் காலிக்குடங்களுடன், தண்ணீர் லாரிகளை நோக்கி பொதுமக்கள் படையெடுக்கின்றனர்.
பருவமழை பொய்த்துப் போனதால், சென்னைக்கு குடிநீர் வழங்கும் முக்கிய நீர்நிலைகள், வறண்டு போய்விட்டன. நிலத்தடி நீரும் அதலபாதாளத்துக்குச் சென்றுவிட்டதால், தலைநகர் சென்னையில் கடும் தண்ணீர் தட்டுப்பாடு நிலவுகிறது. இதனால், மக்கள் ஆங்காங்கே குடிநீருக்காகவும் அத்தியாவசிய தேவைக்கான நீருக்காகவும் காலிக்குடங்களுடன் இரவு பகல் பாராமல் அலைந்து திரிகின்றனர்.
அடித்தட்டு மற்றும் நடுத்தர வர்க்க மக்கள் குடிப்பதற்கு தண்ணீர் கேனை விலைகொடுத்து வாங்கினாலும், அத்தியாவசிய தேவைக்கும் கேன் தண்ணீரை வாங்கி பயன்படுத்த முடியுமா என கேள்வி எழுப்புகின்றனர்.
மழை இல்லாவிட்டாலும், “Save Water” என்ற பிரசாரத்தை முன்வைத்து, இன்னும் தீவிரமாக விழிப்புணர்வை அரசு ஏற்படுத்த வேண்டும் எனக் கூறும் பொதுமக்கள் சிலர், மழைநீர் சேகரிப்பை அனைத்து வீடுகளிலும் கட்டாயம் ஏற்படுத்த வேண்டும் என்றும் வலியுறுத்துகின்றனர். அத்துடன் போதுமான அளவிற்கு மரங்களை நட வேண்டும் என்றும், தேவையில்லாமல் நீர் செலவழிப்பதை தவிர்க்க வேண்டும் என்றும் தெரிவிக்கின்றனர்.
தண்ணீர் சப்ளை குறைந்துவிட்டதால், தங்களது வருமானமும் குறைந்துவிட்டதாக, லாரி ஓட்டுநர்கள் வேதனை தெரிவிக்கின்றனர்.
சென்னை பெருநகரின் தண்ணீர் பிரச்சினையை தீர்ப்பது என்பது சவாலான விஷயாக இருப்பதாக, நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல்துறை செயலாளர் ஹர்மந்தர் சிங் தெரிவித்திருக்கிறார்.
சென்னை சிந்தாதிரிப்பேட்டையில், குறுகலான தெருக்களில் வசிக்கும் மக்களுக்கும் குடிநீர் வழங்குவதற்கு ஏதுவாக மினி டேங்கர்களை தொடங்கி வைத்த பின் செய்தியாளர்களிடம் பேசிய அவர் இவ்வாறு கூறியிருக்கிறார்.
தற்போது, சென்னையில், நாளொன்றுக்கு, 525 மில்லியன் லிட்டர் தண்ணீர் குவாரிகளிலிருந்து எடுக்கப்பட்டு விநியோகிக்கப்படுகிறது என்றார்.
சென்னை குடிநீர் வாரியத்தின் 900 லாரிகள் மூலம், 9 ஆயிரத்து 400 முறை என்ற அளவில், 12 ஆயிரத்து 722 மில்லியன் லிட்டர் தண்ணீர் விநியோகம் செய்யப்படுகிறது.
சென்னையில், குடும்பம் ஒன்றிற்கு, சராசரியாக 830 லிட்டர் தண்ணீர் தேவைப்படும் நிலையில், 525 லிட்டர் தண்ணீர் வழங்கப்படுவதாக, ஹர்மந்தர் சிங் தெரிவித்தார். கழிவுநீரை சுத்திகரித்து நிறுவனங்களுக்கு வழங்கும் திட்டத்தை வரும் ஜுலை மாதம் முதல் செயல்படுத்தப்பட உள்ளதாக ஹர்மந்தர்சிங் கூறினார்.


மழையின்றி வறண்டுபோன
வைகையின் பிறப்பிடம்..!


வைகையின் பிறப்பிடமான வருசநாட்டில் மழை பொய்த்துப் போனதால், சுற்றியுள்ள மலைக்கிராமங்களில் குடிநீர் இன்றி மக்கள் தவித்து வருகின்றனர். தேனி மாவட்டம் ஆண்டிபட்டி தாலுகா கடமலை- மயிலை ஒன்றியத்துக்குட்பட்ட வருசநாடு அருகே முருக்கோடை, தும்மக்குண்டு, வாலிப்பாறை, காமராஜபுரம், நந்தநாதபுரம் உள்ளிட்ட மலைக்கிராமங்கள் உள்ளன.
இதன் அருகாமையில் வெள்ளிமலை எனும் இடத்தில் இருந்துதான் வைகை ஆறு உற்பத்தியாகிறது. 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் வசிக்கின்ற அப்பகுதிகளில் விவசாயம், கால்நடை வளர்ப்பு ஆகியவையே பிரதான தொழிலாக உள்ளது.


கடந்த ஆண்டு வடகிழக்கு பருவமழை பொய்த்ததால் எதிர்பார்த்த அளவு நீர் வைகையில் உற்பத்தியாகவில்லை. இதனால் கோடை துவங்குவதற்கு முன்னரே வறண்ட நிலைக்கு சென்றது வைகை ஆறு. இதன் எதிரொலியாக விவசாயம் பாதிப்படைந்ததோடு மட்டுமல்லாமல், கடும் குடிநீர் தட்டுப்பாடும் ஏற்பட்டது.
ஆற்றுப்படுகைகளில் ஊற்றுதோண்டி, பலமணி நேரம் காத்திருந்து ஒரு குடம் நீர்எடுத்துவர, நீண்டதூரம் சென்று வருகின்றனர் மக்கள்.
மயிலை ஊராட்சி ஒன்றியத்தில் உள்ள கண்டமனூர், கடமலைக்குண்டு, ஆத்தாங்கரைப்பட்டி, தங்கம்மாள்புரம், வருசநாடு, முத்தலாம்பாறை, தும்மக்குண்டு உள்ளிட்ட 18 ஊராட்சிகளுக்கு உட்பட்ட 250க்கும் மேற்பட்ட மலைக் கிராமங்களுக்கு வைகை ஆற்றில் உறை கிணறு அமைத்து குடிநீர் விநியோகம் செய்யப்படுகிறது. இந்த உறைகிணறுகளும் வறண்டதால் குடிநீர் தட்டுப்பாடு உச்சத்தை எட்டியுள்ளது.
வாரத்துக்கு ஒருமுறை ஊராட்சி சார்பில் விநியோகம் செய்யப்படும் தண்ணீரும் குடிப்பதற்கு உகந்ததாக இல்லை என்று கூறும் மக்கள், வெளியூரில் இருந்து கேன்களாக வாங்கி வந்து தண்ணீரை இருப்பு வைத்து பயன்படுத்தி வருவதாக வேதனை தெரிவிக்கின்றனர்.
மழைப்பொழிவு மிகுந்த பகுதி என்று கூறப்படும் வருசநாட்டில் மழை பொய்த்து, கடும் வறட்சி கண்டு மக்கள் குடிநீருக்கு தள்ளாடும் நிலை ஏற்பட்டுள்ளது. குடிநீர் தட்டுப்பாட்டை போக்க மாவட்ட நிர்வாகம் உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுக்கின்றனர் மக்கள்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button