ஓபிஎஸ் மகன் மீது மட்டும் மோடிக்கு ஏன் அவ்வளவு காதல்? – ஈ.வி.கே.எஸ் இளங்கோவன்
தேனி மக்களைத் தொகுதியில் அதிமுக சார்பில் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்தின் மகன் ரவீந்திரநாத் குமாரும், காங்கிர்ஸ் கட்சி சார்பில் ஈ.வி.கே.எஸ் இளங்கோவனும் போட்டியிட்டனர். இந்த தேர்தலில் அதிமுக வேட்பாளர் ரவீந்திரநாத் குமார் 76693 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார்.
இந்நிலையில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த ஈ.வி.கே.எஸ் இளங்கோவன், ‘தேனியில் வெற்றி பெற முடியாமல் போனது உருவாக்கப்பட்ட தோல்வி. தேனி மக்களவைத் தொகுதியில் தேர்தலின் போது தில்லு முல்லு நடந்துள்ளது. தேனியில் பண பலமும், அதிகார பலமும் சேர்த்து என்னை தோற்கடித்துவிட்டது. பல இடங்களில் வாக்குப்பதிவு எந்திரங்களில் சீல் அகற்றப்பட்டே இருந்தது.
துணை முதலமைச்சர் ஓ.பி.எஸ் மகன் ரவீந்திரநாத் குமாருக்கு ஆதரவாக தேர்தல் ஆணையம் தனி கவனம் செலுத்தி வெற்றி பெற வைத்துள்ளது. சுனாமி போல் பணம் இறக்கப்பட்டு தேனியில் ரவீந்திரநாத் குமார் வெற்றி பெற்றுள்ளார். வாக்காளர்களுக்கு பணம் அளித்தது உள்ளிட்ட பல ஆதாரங்கள் என்னிடம் இருக்கிறது. அதை நீதிமன்றத்தில் சமர்ப்பித்து வழக்கு தொடர உள்ளேன். அதில், விவிபேட் இயந்திரங்களில் பதிவான ஒப்புகை சீட்டுகளுடன், வாக்குகளை சரிபார்க்க வேண்டுமென்ற கோரிக்கையை முன்வைக்க உள்ளேன் என்று கூறியுள்ளார்.
மேலும் ஓபிஎஸ் மகனின் மீது மட்டும் மோடிக்கு ஏன் அவ்வளவு காதல் என்று தெரியவில்லை. அதிமுக தில்லு முல்லு செய்தும் ஆண்டிப்பட்டி பகுதியில் நான் அதிக வாக்குகள் பெற்றது மகிழ்ச்சியளிக்கிறது. காங்கிரஸ் தோல்வி குறித்து ஆராய 4 பேர் கொண்ட குழுவை ராகுல் காந்தி அமைத்துள்ளார். 2 எம்பிக்களை வைத்துக்கொண்டே மக்களவையில் பல சாதனைகளை 1957-ல் திமுக செய்தது. இப்போது 23 திமுக எம்பிக்கள் உள்ளனர். அவர்கள் நிச்சயம் மக்களுக்கு நன்மை செய்வர் என்று ஈ.வி.கே.எஸ் இளங்கோவன் கூறியுள்ளார்.
தேனி மக்களவைத் தொகுதியில் மகனை வெற்றி பெறச் செய்த ஓபிஎஸ், பெரியகுளம் மற்றும் ஆண்டிப்பட்டி தொகுதியை கைவிட்டது என தங்க தமிழ்ச்செல்வன் கேள்வி எழுப்பியுள்ளார்.
மக்களவைத் தேர்தல் மற்றும் 22 சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தல் முடிவுகள் நேற்று வெளியாகின. இதில் தமிழகத்தில் 37 மக்களவை தொகுதிகளிலும், புதுச்சேரியில் ஒரு மக்களவை தொகுதியிலும் திமுக கூட்டணி வெற்றி பெற்றது.
மேலும் அதிமுக கூட்டணியில் தேனி மக்களவைத் தொகுதியில் மட்டும் வெற்றி பெற்றது. எனினும், 22 சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலில் அதிமுக 9 இடங்களில் வெற்றி பெற்று ஆட்சியை தக்கவைத்துக் கொண்டது. திமுக-வுக்கு 9 இடங்களில் மட்டுமே வெற்றி பெற்று மீண்டும் வலுவான எதிர்க்கட்சி அந்தஸ்த்தை பெற்றது.
இந்த தேர்தலில் பெரியளவில் தொகுதிகளை கைப்பற்றும் என்று எதிர்பார்க்கப்பட்ட அமமுக, மநீம மற்றும் நாம் தமிழர் போன்ற கட்சிகள் பெரியளவில் சோபிக்கவில்லை. அவை எந்த தொகுதியிலும் வெற்றி பெறவில்லை. ஆனால் தமிழகத்தில் பெரும்பாலான தொகுதிகளில் பதிவான வாக்கு வித்தியாசத்தில் தினகரனின் அமமுக-வுக்கு மூன்றாவது இடம் கிடைத்தது.
இந்நிலையில் தேனியில் அமமுக கொள்கை பரப்புச் செயலாளர் தங்க தமிழ்ச்செல்வன் செய்தியாளர்களை சந்தித்தார். எடப்பாடி பழனிசாமியை தூக்கி விட்டு, பாஜக கட்சி துணை முதல்வர் ஓ. பன்னீர்செல்வத்தை மீண்டும் முதல்வராக்கும். தேனியில் ஓபிஎஸ் மகன் ரவீந்திரநாத் குமார் பெற்ற வெற்றியை ஏற்றுக்கொள்ள முடியவில்லை. காங்கிரஸ் வேட்பாளர் ஈவிகேஎஸ் இளங்கோவன் வெற்றி பெற்றிருந்தால் கூட வரவேற்றிருப்பேன். மகனை வெற்றி பெற வைத்த துணை முதல்வர் ஓபிஎஸ், ஆண்டிப்பட்டி மற்றும் பெரியகுளம் சட்டமன்ற தொகுதிகளை கைவிட்டது ஏன்? என அவர் கேள்வி எழுப்பினார். மேலும் பேசிய அவர், அமமுக தோல்விக்கு காரணம் பரிசுப் பெட்டி சின்னம் தான். கடைசி நேரத்தில் சின்னம் வழங்கப்பட்டதால் மக்களிடம் கொண்டு சேர்க்க முடியவில்லை என தங்க தமிழ்ச்செல்வன் வேதனையுடன் கூறினார்.
இந்நிலையில் தமிழகத்தில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அரசு இன்னும் ஒரு மாதத்திற்குள் கவிழ்ந்துவிடும் என்று முன்னாள் அமைச்சர் ராஜ கண்ணப்பன் தெரிவித்துள்ளார்.
ராமநாதபுரம் மக்களவை தொகுதியில் திமுக கூட்டணி சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்ற நவாஸ் கனி தனது தேர்தல் பிரசாரத்தின் போது ஆதரவு தெரிவித்த முன்னாள் அமைச்சர் ராஜ கண்ணப்பனை சென்னையில் உள்ள அவரது இல்லத்தில் சந்தித்து நன்றி தெரிவித்தார். அப்போது செய்தியாளர்களிடம் பேசிய நவாஸ் கனி, ராமநாதபுரம் தொகுதியில் குடிநீர் பிரச்னையை தீர்க்க முன்னுரிமை அளிப்பேன் என்று உறுதியளித்தார். மேலும் பயிர்காப்பீடு கிடைக்க தகுந்த நடவடிக்கை எடுப்பேன் என்றும் உறுதி அளித்தார்.
இதைத்தொடர்ந்து பேசிய ராஜ கண்ணப்பன், தமிழகத்தை வழிநடத்தும் தகுதி ஸ்டாலினுக்கு மட்டுமே இருப்பதாகக் கூறினார். மேலும், முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அரசு இன்னும் ஒரு மாதத்திற்குள் கலைந்துவிடும் என்று தான் எதிர்பார்ப்பதாகவும் அவர் கூறினார்.