ராமதாஸ் கைது செய்யப்படுவது எப்போது..? : செய்தியாளர்களுக்கு ஆதரவாக எழும் குரல்கள்..!
செய்தியாளர்களை வெட்டுவேன் என்று மிரட்டிய ராமதாஸ் மீது இன்னும் நடவடிக்கை எடுக்காதது குறித்து எதிர்ப்புகள் கிளம்பி வரும் சூழலில், அவர் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என பல கட்சித் தலைவர்கள் அரசுக்கு கோரிக்கை விடுத்து வருகின்றனர்.
அண்மையில் தமிழ் படைபாளிகள் பேரியக்கம் சார்பில் நடத்தப்பட்ட கருத்தரங்கத்தில் பாமக நிறுவனர் ராமதாஸ் சிறப்பு அழைப்பாளராக பங்கேற்றிருந்தார். அப்போது பேசிய அவரிடம் தமிழகத்தில் நிலவி வரும் தன்ணீர் தட்டுப்பாடு குறித்து செய்தியாளர்கள் கேள்வியை முன்வைத்தனர்.
அதற்கு பதிலளித்த ராமதாஸ், மரம் வெட்டியது குறித்து கேட்கப்பட்ட கேள்விக்கு பலமுறை பதில் அளித்துவிட்டேன். இனி இந்த கேள்வியை கேட்டால், மரத்தை வெட்ட மாட்டோம். கேள்வி கேட்கிற ஆளை வெட்டி போட்டு போராட்டம் நடத்துவோம் என தெரிவித்தார்.
இவருடைய பேச்சு சர்ச்சையை கிளப்பியது. பல்வேறு ஊடக அமைப்புகள், எதிர்க்கட்சி தலைவர்கள், சமூக ஆர்வலர்கள் என பலரும் ராமதாஸுக்கு கண்டனங்களை தெரிவித்தனர். சென்னை பத்திரிக்கையாளர் மன்றம் வெளியிட்ட அறிக்கையில் ராமதாஸ் தனது பேச்சுக்காக வருத்தம் தெரிவிக்க வேண்டும் என கேட்டுக்கொண்டது.
கடந்த 23ம் தேதி நடைபெற்ற வழக்கறிஞர்கள் மாநாட்டில் பங்கேற்று ராமதாஸ் பேசினார். அப்போது அவரிடம் இந்த சம்பவம் குறித்து செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். செய்தியாளர்கள் குறித்த தன்னுடைய பேச்சு சரியானது தான். தன்னுடைய பேச்சை மாற்றிக் கொள்ள முடியாது என திட்டவட்டமாக கூறிவிட்டார்.
பாமக-வின் நிறுவனர் ராமதாஸ் மற்றும் அந்த கட்சியின் இளைஞரணித் தலைவரும் அவருடைய மகனுமான அன்புமணி ராமதாஸ் தொடர்ந்து செய்தியாளர்களை அவமதிக்கும் செயலில் ஈடுபட்டு வருகின்றனர். மக்களவைத் தேர்தலுக்கு முன்பாக நடைபெற்ற செய்தியாளர்கள் சந்திப்பில் அன்புமணி பங்கேற்றார்.
அவரிடம் அதிமுக உடன் ஏற்படுத்திக் கொண்ட கூட்டணி குறித்தும், முன்னர் அந்த கட்சியை தரக்குறைவாக விமர்சித்ததை பற்றியும் கேள்விகள் கேட்கப்பட்டன. ஆனால் அதற்கு மிகவும் காட்டமாக பேசினார் அன்புமணி ராமதாஸ். தவிர, அந்த செய்தியாளர் சந்திப்பில் இருந்து அவர் பாதியிலேயே வெளியேறிவிட்டார்.
மேலும், தன்னை மடக்கிக் கேள்விக் கேட்டதாகவும், தன்னுடைய அனுமதி பெறாமல் அந்த செய்தியாளர் சந்திப்பை நேரலை செய்ததாகவும் சில ஊடகங்கள் மீது அவர் வழக்குத் தொடர்ந்தார். அதன் மீதான விசாரணை தற்போது நடைபெற்று வருகிறது.
தருமபுரியில் தேர்தல் பிரச்சார பொதுக்கூட்டத்தில் பேசிய அன்புமணி ராமதாஸ், அதிமுக வேட்பாளருக்கு ஆதரவாக வாக்கு சேகரித்தார். அப்போது பேசிய அவர், தேர்தல் பூத்களை கைப்பற்ற வேண்டும். மஞ்ச சட்டை போட்ட நம்ம பசங்க அங்க இருப்பாங்க. அதை பாத்ததும் திமுக பெருசுங்க ஓடிப்போவாங்க என்றார்.
ஏற்கனவே செய்தியாளர் சந்திப்பில் அன்புமணியில் அணுகுமுறை விவாதத்தை கிளப்பியிருந்த நிலையில், இந்த பிரச்சார பொதுக்கூட்டத்தில் அவர் பேசியது மேலும் சர்ச்சையானது. ஆனால் தேர்தல் ஆணையம் எந்தவித நடவடிக்கைகளையும் எடுக்கவில்லை.
இந்நிலையில் மக்களவைத் தேர்தலில் அதிமுக, பாஜக, தேமுதிக உடன் சேர்ந்து 7 தொகுதிகளில் பாமக போட்டியிட்டது. அனைத்திலும் அந்த கட்சி தோல்வி அடைந்தது. மேலும், தர்மபுரி தொகுதியில் போட்டியிட்ட பாமக இளைஞரணித் தலைவர் அன்புமணி ராமதாஸ் திமுக வேட்பாளரிடம் தோல்வி அடைந்தார்.
இந்த படுதோல்வி காரணமாக ஊடகங்கள் மீது பாமக தலைவர்கள் அதிருப்தியில் உள்ளனர். அதன் வெளிபாடே அவருடைய இந்த பேச்சு என பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர். அதை மெய்ப்பிக்கும் விதமாகவே பல ஊடக அமைப்புகள் கண்டனம் தெரிவித்த போது, அதை ஏற்க ராமதாஸ் மறுத்துவிட்டதாக சொல்லப்படுகிறது.
ராமதாஸ் பேச்சுக்கு கண்டனம் தெரிவித்தும், செய்தியாளர்களின் கோரிக்கைக்கு ஆதரவு தெரிவித்தும் பல்வேறு அரசியல் கட்சியினர் ஆதரவு கரம் நீட்டி வருகின்றனர். விடுதலை சிறுத்தைகள் கட்சியை சேர்ந்த வன்னி அரசு, கடந்தாண்டு செப்டம்பரில் காவல்துறையினரை மிரட்டும் தொனியில் பேசிய கருணாஸை தமிழக அரசு கைது செய்தது.
அதேபோனற ஒரு நடவடிக்கை ஏன் தற்போது ராமதாஸ் மீது எடுக்கவில்லை. கருணாஸுக்கு ஒரு சட்டம்? ராமதாஸுக்கு ஒரு சட்டமா? ஊடகவியலாளர்களை இவ்வாறு மிரட்டினால் அவர்களால் எப்படி ஜனநாயக கடமையாற்றிட முடியும்? என்று அவர் பல்வேறு கேள்விகளை எழுப்பியுள்ளார்.
முன்னதாக 2013ம் ஆண்டில் மாமல்லபுரத்தில் நடந்த பொதுக்கூட்டத்தில் வன்முறையை தூண்டும் வகையில் ராமதாஸ் பேசியதால், அப்போதைய முதலர் ஜெயலலிதா அவர் மீது கைது நடவடிக்கை எடுத்தார். ஜெயலலிதாவின் வழித்தோன்றல்கள் போல பேசி வரும் தற்போதைய ஆட்சியாளர்கள் ராமதாஸ் பேச்சுக்கு எந்தவித கண்டனமும் தெரிவிக்காமல் உள்ளனர். இது மிகவும் வருத்தத்தை ஏற்படுத்தியுள்ளது என்று அவர் தெரிவித்துள்ளார். ஸீ