அரசியல்

சட்டமன்றத்தில் சும்மா உட்கார்ந்து கொண்டு பெஞ்சைத் தேய்ப்பதற்கு நான் தயாராக இல்லை: பரமக்குடி முத்தையா மனம் திறந்த பேச்சு

அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் அமைப்புச் செயலாளரும், முன்னாள் அமைச்சருமான செந்தில்பாலாஜி திமுகவில் இணைந்தது சம்பந்தமாக தகுதி நீக்கம் செய்யப்பட்ட பதினெட்டு எம்எல்ஏக்களில் ஒருவரும் ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி தொகுதி அதிமுக முன்னாள் எம்எல்ஏவுமான முத்தையா பரமக்குடியில் உள்ள தனது இல்லத்தில் செய்தியாளர்களைச் சந்தித்தார்.

அப்போது சட்டமன்றத்தில் சும்மா உட்கார்ந்து கொண்டு பெஞ்சைத் தேய்ப்பதற்கு நான் தயாராக இல்லை. தொகுதியின் வளர்ச்சிக்கு சுமாராக 50 அல்லது 60 கோரிக்கைகளை வைத்தேன் அதில் ஒன்றைக் கூட நிறைவேற்றவில்லை. பரமக்குடியில் உள்ள அரசு மருத்துவமனைக்குத் தேவையான மருத்துவரை நியமிக்கப் பலமுறை கோரிக்கை விடுத்தும் செயல்படுத்த முடியவில்லை.
பரமக்குடி தொகுதி வளர்ச்சிக்கான எந்தக் கோரிக்கையும் ஏற்கப்படாததால் எனது தொகுதி மக்களின் தேவைகளைப் பூர்த்தி செய்ய முயற்சித்த போது அண்ணன் தினகரன் முதல்வரை மாற்ற வேண்டும் என்று சொன்னார். அதன் காரணத்தை முன்னிட்டு அப்போது நான் 18 எம்எல்ஏக்களுடன் அவருடன் சென்றேன்.
அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்திலிருந்து தேர்தல் தோல்வி பயத்தால் செந்தில் பாலாஜி திமுகவிற்குச் சென்றிருக்கலாம். மிகப் பெரிய மனிதர் போல மீடியாக்களே மாயையை தோற்றுவிக்கின்றன. தங்க ஊசி என்றால் கண்ணில் குத்த முடியாது. அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தை விட்டுச் சென்றதால் அமமுக கட்சி அழிந்து போய்விடும் என்ற மாயையை மீடியாக்கள்தான் தோற்றுவிக்கின்றன. மிகப் பெரிய மலையில் இருந்து ஒரு துகள் கீழே விழுகிறது போன்றது. இதனால் எந்த பின்னடைவும் ஏற்படப்போவதில்லை. எங்களைப்போன்ற ஜூனியர் சட்டமன்ற உறுப்பினர்களுக்கு நல்லவர்தான். அதற்காக தங்க ஊசி என்பதற்காக கண்ணில் குத்த முடியாது. அவரே எப்போதும் டிடிவி தினகரன் வருங்கால முதல்வர். தமிழகத்தை ஆளும் சக்தி இவருக்கு மட்டுமே உள்ளது என்றுகூறி வந்தார். இவ்வளவு தீவிரமாக இருந்தவர் திமுகவில் கவுன்சிலராக இருந்து அதிமுகவில் அமைச்சரானார். அவரை அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் அமைப்பு செயலாளராக ஒரு மண்டல பொறுப்பாளர் மாவட்ட செயலாளர் நாளை மிகப்பெரிய பொறுப்புக்கு வர வேண்டியவர்.மீண்டும் பழைய கவுன்சிலர் ஆக வேண்டி திமுகவிற்கு சென்றிருக்கலாம்.
எனக்கு வருத்தமாக உள்ளது. பெங்களூரில் அம்மா சிறையிலிருந்த ஒரு சந்தர்ப்பத்தில் இவரே முதல்வர் என்ற பேச்சும் இருந்தது. இப்படியான மதிப்புமிக்க பதவிகளைத் தந்த அதிமுகவை விட்டுவிட்டு கவுன்சிலர் பதவி தேடி திமுகவிற்கு சென்றிருக்கலாம். இது வருத்தப்பட வேண்டிய விஷயம்.
அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தில் இருக்கும் எம்.ஆர்.விஜயபாஸ்கர் அபார வளர்ச்சி அடைந்துள்ளதாக அவர் நினைத்திருக்கலாம். எனவே மீண்டும் அதிமுகவிற்குச் சென்று அவரை வெற்றிகொள்ள முடியாது என்ற பயமாக இருக்கலாம். இவர் மீண்டும் கள்ளக்குறிச்சியில் நின்றால் அரவக்குறிச்சியில் நின்றால் கரூரில் நின்றால் தேர்தலில் தோற்றுப் போய் விடலாம் என்றும் தோல்வி பயத்தில் அவர் நினைத்திருக்கலாம். அவருக்கு வேறு ஏதேனும் சொந்தப் பிரச்சனைகள் இருந்திருக்கலாம் யாருக்குத் தெரியும்.
இவர் சென்றதால் டிடிவி தினகரன் தலைமையில் உள்ள அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்திற்கு எவ்விதப் பாதிப்பும் இல்லை. அதிமுகவில் எம்.ஆர்.விஜயபாஸ்கர் தான் நன்கு வளர்ந்து விட்டதாக நினைக்கிறார். செந்தில் பாலாஜி அவ்வாறு நினைக்கல போல அதனால் தாய் கழகமான அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்திற்குச் செல்லாமல் திமுக விற்குச் செல்கிறார். அதன்பிறகு செய்தியாளர்கள் சராமாரியாக கேள்விகளை எழுப்பத் தொடங்கினர்.

செந்தில்பாலாஜியை யாரேனும் பாராளுமன்றத் தேர்தலில் குறைந்த பட்சமாக சில தொகுதிகளுக்கு அல்லது பொருளாதாரத் தேவைக்குப் பொறுப்பேற்கச் சொன்னதால் இருக்கலாமோ?


யாரிடமும் பொருளாதாரத்தை எதிர்பார்த்து அமமுக கட்சி கிடையாது. இளைஞர்களும் தொண்டர்களும் மிகப்பெரிய ஆதரவு எங்கள் கட்சிக்கு உள்ளது. அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்திலிருந்து திமுகவிற்குச் சென்ற அண்ணன் செந்தில்பாலாஜி தோல்வி பயத்தால் சென்றிருக்கலாம்.

முதல்வர் பழனிசாமி தினகரனைத் தவிர அனைவரும் கட்சிக்கு வரலாம் என்று அழைப்பு விடுத்திருந்தது குறித்து உங்களுடைய நிலைப்பாடு என்னவாக இருக்கும் நீங்கள் என்ன நினைக்கிறீர்கள் தினகரனுடன் சேர்த்து அழைப்பு விடுத்தால் ஏற்றுக்கொள்கிறீர்களா? நீக்கிவிட்டு அழைப்பு விடுப்பதால் யோசனையில் உள்ளீர்களா உங்கள் நிலைப்பாடு என்ன?


இதற்கு முதலில் அதிமுகவுடன் இணைவதற்கு எங்களுக்கு மனம் வேண்டும். அவர் கூப்பிட்டவுடன் சென்று சேர்வது போன்ற தோற்றம் எல்லாம் கிடையாது. அப்படி ஓட வேண்டும் என்றால் என்றோ சென்று சேர்ந்திருப்பேன். ஜக்கையன் சென்றபோது நாங்களும் சென்றிருக்கலாம். இன்றைக்கு அமமுக அபார வளர்ச்சி பெற்றுவிட்டது.
இப்போது அழைக்க வேண்டிய அவசியமில்லை எடப்பாடி பழனிசாமி என்ன நினைத்துக்கொண்டு எல்லாரும் வாங்கன்னு கூப்பிடுகிறார் என்பது எனக்குத் தெரியாது
நாங்கள் என்னமோ இங்குக் குடிக்கக் கஞ்சி இல்லாதது போன்று அரசியல் அங்கீகாரம் இல்லாமல் இருப்பது போன்றும் எங்கள் பின்னால் தொண்டர்கள், படைபட்டாளங்கள், இல்லாதது போன்றும் ஏதோ நாங்கள் அனாதைகள் ஆகி விட்டது போன்றும் அவர் கூப்பிட்டவுடன் போவதற்கு 18 எம்எல்ஏக்களில் போன ஒருவரைத் தவிர நாங்கள் தயாராக இல்லை.


ஒருவேளை அம்மா மக்கள் முன்னேற்றக் கழகமும் அண்ணா திராவிட முன்னேற்றக் கழகமும் இணைப்பு என்று வந்தால்…


நாங்கள் ஏன் அதிமுகவை விட்டுப் பிரிந்து சென்றோம். தமிழகத்தில் முதல்வரை மாற்றுங்கள் என்று கோரிக்கை விட்டோம். தன்னை முதல்வர் ஆக்கிய தியாகத் தலைவி சின்னம்மா அவர்களுக்குத் துரோகம் செய்தார். அதுக்காக மேற்கொண்டும் எனது பரமக்குடி தொகுதியில் எத்தனையோ கோரிக்கைகளை வைத்தேன் எதையும் செய்து தரவில்லை சுமாராக 50 அல்லது 60 கோரிக்கைகளை வைத்தேன். அதில் ஒன்றைக் கூட நிறைவேற்றவில்லை.
நான் ஒரு மருத்துவர். அரசு மருத்துவராகப் பணி செய்துள்ளேன். பரமக்குடியில் உள்ள அரசு மருத்துவமனைக்குத் தேவையான மருத்துவரை நியமிக்கப் பலமுறை கோரிக்கை விடுத்தும் செயல்படுத்த முடியவில்லை. மருத்துவரை டிரான்ஸ்பர் செய்து கொண்டு வர முடியவில்லை. புதிய போஸ்டிங் போட முடியவில்லை. எனது தொகுதி வளர்ச்சிக்கான எந்தக் கோரிக்கையும் ஏற்கப்படாததால் அண்ணன் தினகரன் முதல்வரை மாற்ற வேண்டும் என்று சொன்னார். எனது தொகுதி மக்களின் தேவைகளைப் பூர்த்தி செய்ய நான் அண்ணன் அவருடன் சென்றேன். அதன் காரணத்தை முன்னிட்டு 18 எம்எல்ஏக்கள் உடன் சென்றேன். நான் முதல்வரை மாற்ற வேண்டும் எனக் கேட்டேன். நான் வைத்த கோரிக்கைகள் நிறைவேற்றப்பட்டதா? நான் பதவியில் இருந்த போதும் கடந்த ஒன்றரை வருடங்களாகப் பதவியில் இல்லாத காலத்திலும், பரமக்குடி தொகுதிக்கு உண்டான ஏதாவது வளர்ச்சித் திட்டங்கள் நடந்ததா? ஒன்னும் இல்லையே சும்மானாலும் திடீர்ன்னு கட்சிக்குத் திரும்ப வாங்கண்ணா எதற்காகச் சட்டமன்றத்தில் சும்மா உட்கார்ந்து கொண்டு பெஞ்சைத் தேய்ப்பதற்கு நான் தயாராக இல்லை. நாங்கள் ஆதரவு கொடுப்போம் என்று இப்போது திடீர் அழைப்பு விடுக்கிறார்.
நான் எம்எல்ஏ பதவியில் இருந்தாலும் இல்லாவிட்டாலும் எனது தொகுதி மக்களுக்குத் தேவையான வளர்ச்சி திட்டங்களை அரசு செய்து கொடுத்தால் சந்தோசம்.
அதற்கு நான் முத்தையா தேவையில்லை. வருகிற காலத்தில் சட்டமன்றத் தேர்தல் வந்தாலும் சரி இடைத்தேர்தல் ஆனாலும் சரி அமமுகவும் அதிமுகவும் போட்டி போடட்டும். யாருக்கு மக்கள் வாக்களிக்கிறார்கள் என்பதை அந்த வெற்றி தீர்மானிக்கட்டும்.

இம்மாவட்ட அமைச்சர் மணிகண்டன் நானே தொகுதிக்கு எம்எல்ஏவாக வளர்ச்சிப்பணிகளைக் கண்காணித்துச் செய்கிறேன் என்கிறாரே?


என்ன வளர்ச்சி இங்கு நடந்துள்ளது நான் ஒன்று சொல்கிறேன். பரமக்குடி அரசு ஆஸ்பத்திரியில் நாளொன்றுக்கு ஆயிரம் 2000 என்று மக்கள் சிகிச்சைக்கு வருகிறார்கள். கூடுதலாகக் கைனகாலஜிஸ்ட் டாக்டர் இருக்கிறாரா? ரேடியாலஜிஸ்ட் டாக்டர் இருக்கிறாரா? ophthalmologistடாக்டர் இருக்காங்களா? முதலில் தேவையான டாக்டர்கள் பரமக்குடி ஆஸ்பத்திரியில் இருக்கிறார்களா?
இவ்வளவு பெரிய ஆஸ்பத்திரிக்குத் தேவையான சி.டி.ஸ்கேன், ஒரு டிஜிட்டல் எக்ஸ்ரே, ஒரு ரத்த வங்கி இங்க இருக்கிறதா? இன்னும் இல்ல… நான் வந்ததிலிருந்து கேட்டுக் கொண்டுள்ளேன். ஒண்ணுமே நடக்கலை.
நைனார் கோவில் ஊருணியை தூர்வாரித் தரக் கேட்டேன். அதற்குக் கூட நடவடிக்கை இல்லை. சாதாரணக் கோரிக்கைகளைக் கூட நிறைவேற்ற முடியாத தமிழக அரசு நான் எம்எல்ஏவாக இருந்தபோதும் நடக்கல இப்பவும் நடக்கலை.


நீங்கள் பிற கட்சிக்குச் சென்றுவிடுவீர்கள் என்று அவ்வப்போது ஒரு பேச்சு எழுகிறது?


நான் அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்திலேயே இருக்கிறேன். எனக்கென்று தனிப்பட்ட மதிப்பும், மரியாதையும் பரமக்குடி தொகுதி மக்களிடம் இருக்கு.
தானாக வந்து விட்டு நானாக ஓடினால் எனக்கு மக்கள் மீது உள்ள மரியாதை போய்விடும். அதனால் எந்தச் சூழ்நிலையிலும் அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம் ஒருவேளை அண்ணா திமுகவுடன் இணைந்தால் அப்போது நான் இணைவேனே தவிர டாக்டர் முத்தையா எந்தக் கட்சியிலும் எங்கேயும் எப்பவும் போக மாட்டேன்.. போக மாட்டேன் என்றும் வரக்கூடிய பரமக்குடி தொகுதி சட்டமன்ற இடைத்தேர்தலில் அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் மிகப்பெரிய வெற்றியை பெறும் சாதிமத பேதமற்ற இளைஞர்களின் ஆதரவு மிகப்பெரிய அளவில் எங்களுக்கு உள்ளது. என்றும் தெரிவித்துள்ளார்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button