திருப்பூரில் மாவட்ட ஆட்சியர், ஆணையர், மேயர் உள்பட ஏழுபேர் மீது போலீசில் புகார் ! காலாவதியான பாறை குழியில் குப்பை கொட்டிய விவகாரம்

திருப்பூரில் மாவட்ட ஆட்சியர், மேயர் உள்பட ஏழுபேர் மீது காவல்துயில், தமிழக விவசாய சங்கம் சார்பில் மாநில சட்ட விழிப்புணர்வு அணி செயலாளர் இரா. சதீஷ்குமார் புகார் அளித்ததால் திருப்பூர் மாவட்டத்தில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. அந்த புகார் மனுவில், திருப்பூர் மாவட்டம் பொங்குபாளையத்தை அடுத்த காளம்பாளையம் பகுதியில் உள்ள புல எண். 206 ல் உள்ள காலாவதியான அரசு வண்டி பாறைக்குழியில், திருப்பூர் மாநகராட்சி நிர்வாகம் தரம் பிரிக்கப்படாத வகை கழிவு குப்பைகளை கொட்டுவதற்கு திருப்பூர் மாவட்ட ஆட்சியர் அனுமதி அளித்து உத்தரவிட்டுள்ளதாகவும், அதன் அடிப்படையில் மாநகராட்சியில் ஒப்பந்ததாரரான SWMS நிறுவனம் தொடர்ந்து கடந்த ஆறு மாதகாலமாக அனைத்து வகையான குப்பை கழிவுகளை கொட்டி வருவதாகவும் புகார் மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது.

மேலும்.இது தொடர்பாக தென்மண்டல பசுமை தீர்ப்பாயத்தில் பொதுநல வழக்கு (OA.299/2025) தொடரப்பட்டு மாவட்ட ஆட்சியரின் உத்தரவிற்கு தடை உத்தரவு பெறப்பட்டுள்ளதாகவும், மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் சார்பில் குப்பை கொட்ட எந்த அனுமதியும் வழங்கவில்லை என தெரிவித்திருப்பதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும் கடந்தாண்டு டிசம்பர் மாதம் கழிவுகளை ஏற்றி வந்த லாரி மீது போலீசிஸ் புகார் தெரிவிக்கப்பட்டு வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனிடையே தற்போது திருப்பூர் மாநகராட்சி நிர்வாகம் விதிகளை மீறி பிளாஸ்டிக் கழிவுகள், வீட்டுக்கழிவுகள், ரசாயனக்கழிவுகள், மருத்துவக்கழிவுகள், இறைச்சி கழிவுகள், சாயக்கழிவுகள் என அனைத்தையும் மேற்படி காலாவதியான பாறைக்குழியில் கொட்டிவருவதால் மக்கள் உயிருக்கு அச்சுறுத்தலையும், பேராபத்தையும் உருவாக்கி வருவதாகவும் புகாரில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் கட்ந்த மாதம் 28 ஆம் தேதி பாறைக்குழியில் குப்பைக்கு தீ வைத்ததில் கடும் புகை மூட்டம் ஏற்பட்டு பாதிப்பு ஏற்பட்டுள்ளது. எனவே மேற்படி பாதிப்பை ஏற்படுத்த காரணமான மாவட்ட ஆட்சியர், மாநகராட்சி மேயர், மாநகராட்சி ஆணையர், ஒப்பந்ததாரர் உட்பட 7 பேர் மீது நடவடிக்கை எடுக்க கோரி பெருமாநல்லூர் போலீஸ் நிலையத்திற்கு இரா. சதீஷ்குமார் ஆன்லைனில் புகார் மனு அளித்ததால் திருப்பூரில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.