அரசியல்

தோல்வியில் முடிந்த சாதிக்கணக்குகள்

தமிழகத்தில் அதிமுக, பாஜக எதிர்ப்பலையில் சிக்கி வடமாவட்டங்களில் பலம் வாய்ந்த கட்சியாக கருதப்பட்ட பாட்டாளி மக்கள் கட்சி அனைத்து தொகுதிகளிலும் தோல்வியை தழுவியுள்ளது.
மக்களவை, தமிழக சட்டமன்ற இடைத்தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்பட்டன. இந்த தேர்தலில் திமுக அநேக இடங்களில் வெற்றி பெற்று தனது செல்வாக்கை அக்கட்சி மீண்டும் நிரூபித்துள்ளது. நாடாளுமன்றத் தேர்தலில் தமிழகத்தில் அதிமுக – பாஜக கூட்டணியின் சாதி அடிப்படையிலான வியூகத்துக்கு எதிராக மக்கள் பிரச்சனைகளை முன்னெடுத்துச் சென்ற திமுக – காங்கிரஸ் கூட்டணி வெற்றி வாகை சூடியுள்ளது.
கவுண்டர், வன்னியர் சாதி ஓட்டுகளை திரட்டும் நோக்கில் அதிமுக – பாஜக கூட்டணி களமிறங்கிய நிலையில், திமுக மோடி எதிர்ப்பு, பாஜக எதிர்ப்பு, அலைகளை சரியாக பயன்படுத்திக்கொண்டது. கூடவே ஸ்டெர்லைட் ஆலை போராட்டத்தில் நடந்த படுகொலை, ஹைட்ரோகார்பன் திட்டம், சென்னை – சேலம் எட்டுவழிச்சாலை திட்டம், விவசாயிகள் பிரச்னை என பல மக்கள் பிரச்னைகளை பிரசாரத்தின்போது பிரதானமாகப் பேசியது.
திமுகவுடன் விசிக இணைந்த நிலையில் அக்கட்சிக்கு ஒத்துவராத பாமகவை கூட்டணியில் சேர்த்தது பாமக. 2014ஆம் ஆண்டு விசிகவை எதிர்த்துப் போட்டியிட்டு பாமக வென்றிருந்தது. அதை மீண்டும் ஒருமுறை நிகழ்த்திக்காட்ட அதிமுக திட்டம் தீட்டியது. முடிவில், அந்த முயற்சி வீணாகி, திமுக கூட்டணி தமிழகத்தில் 37 தொகுதிக்களையும் புதுச்சேரியில் உள்ள ஒரே தொகுதியையும் சேர்த்து 38 தொகுதியை வசப்படுத்தியது. தேனியில் மட்டும் அதிமுக வென்றுள்ளது.
சாதி வாக்குகளைத் திரட்ட நினைத்த முதல்வர் எடப்பாடி பழனிசாமி அதில் மறைந்திருக்கும் பாதக அம்சங்களையும் பார்த்திருக்க வேண்டும். பெரிய கூட்டணியை அமைத்த அதிமுக கடைசியில் 22 தொகுதிகளில் மட்டுமே போட்டியிட முடிந்தது. ஆனால், பாமக மற்றும் புதிய தமிழகம் கட்சிகளுடன் கூட்டணி வைத்ததால் சட்டப்பேரவை இடைத்தேர்தலில் ஆதாயம் அடைந்துள்ளது. மக்களைவத் தேர்தலுக்காக சேர்ந்த கூட்டணிக் கட்சிகள் அனைத்து இடைத்தேர்தலில் அதிமுகவுக்கு முழு ஆதரவு அளித்தன. இதனால் பாமக தயவில் வட தமிழகத்தில் நான்கு தொகுதிகளும் புதிய தமிழகத்தின் துணையால் தென் தமிழகத்தில் ஐந்து தொகுதிகளும் அதிமுகவுக்குக் கிடைத்துள்ளன.
டிடிவி தினகரன் அதிமுகவிலிருந்து விலகி அமமுக என தனிக்கட்சி ஆரம்பித்ததும் அதற்கு தேவர் சமூகத்தினரிடம் ஆதரவு பெருகியதும் அதிமுகவுக்கு ஆப்பு வைத்துவிட்டது. எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா காலத்தில் தேவர் சாதி ஓட்டுதான் அதிமுகவின் முதுகெலும்பாக இருந்திருக்கிறது. துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் தேவர் சமூகத்தைச் சேர்ந்தவராக இருந்தாலும் டிடிவி தினகரனின் அமமுக வாக்கு வங்கியை அசைக்க முடியவில்லை. ஓபிஎஸ்-ஈபிஎஸ் ஆறுதல் அடைவதற்கான ஒரே விஷயம் டிடிவி தினகரன் தேர்தலுக்குப் முன் பில்டப் கொடுத்த அளவுக்கு அமமுக, ஆட்சிக்கு எந்த பாதிப்பையையும் உருவாக்கவில்லை என்பதுதான்.
தென்காசி தொகுதியில் இரட்டை இலை சின்னத்திலேயே போட்டியிட்ட புதிய தமிழகம் கட்சித் தலைவர் கே. கிருஷ்ணசாமியை மக்கள் கைவிட்டுவிட்டனர். எஸ்.சி. வாக்குகளுக்காக, குறிப்பாக பள்ளர் வாக்கு வங்கியை தன்வசப்படுத்துவதற்காக அதிமுகவுடன் கூட்டணி வைத்த அவரது திட்டம் காலை வாரிவிட்டது. எம்.ஜி.ஆர். ஆட்சியில் தென்காசி தொகுதி மக்கள்தான் அதிமுகவின் குறிப்பிடதக்க வாக்கு வங்கியாகக் கருதப்பட்டார்கள்.
விவசாயிகள் பிரச்னையை கையில் எடுப்பது எதிர்க்கட்சிகளுக்கு தேர்தல் நேரத்தில் ஊக்கம் தரக்கூடிய காரணி என்பதை இத்தேர்தல் மீண்டும் நிரூபித்துள்ளது. உள் மாவட்டங்களில் இந்தப் பிரச்னையை பேசிய திமுக அதனை கட்சிதமாக வாக்குகளாக மாற்றியுள்ளது.
திமுகவின் வெற்றிக்கும், அதிமுகவின் தோல்விக்கும் சில காரணங்கள் கூறப்படுகின்றன. அதில் முக்கியமான ஒன்றாக, எதிர்ப்பலை கூறப்படுகிறது.
தமிழகத்தில் தற்போது மட்டுமல்ல, எப்போதுமே பாஜகவுக்கு எதிரான அலை இருந்த வண்ணம் உள்ளது. அந்த அலையை ஓயவிடாமல் திராவிடக் கட்சிகள் திரம்பட செயலாற்றி வருகின்றன. அப்படிப்பட்ட பாஜகவுடன் அண்மை காலமாக இணக்கமாக செயல்பட்டு வரும் அதிமுக மீதும் தமிழக மக்களுக்கு கோபம் ஏற்பட்டுள்ளது.
முந்தைய சட்டமன்றத் தேர்தலில் தமிழகத்தின் முதல்வர் வேட்பாளராக பிரபலப்படுத்தப்பட்ட அக்கட்சியின் இளைஞரணித் தலைவரான அன்புமணி ராமதாசும் தோல்வியையே தழுவியுள்ளார். அதிமுக, பாஜக மீதான கோபத்தால் தான் பாமகவும் தோல்வியை தழுவியுள்ளதாக விமர்சகர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.
தமிழக எதிர்க்கட்சியாக இருந்த தேமுதிகவும் இந்த தேர்தலில் ஒரு வெற்றியை கூட பதிவு செய்யவில்லை. மாறாக தேமுதிகவை எதிர்த்து போட்டியிட்ட திமுக கூட்டணியினர் பல லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றியை பதிவு செய்துள்ளனர்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button