தேர்தல் நெருங்கி வரும் நிலையில் கட்சிகளுக்கு ஆள் சேர்க்கும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. கட்சி சாராதவர்களை இணைக்கும் பணி ஒரு பக்கம் நடைபெற்றுவந்தாலும் மாற்று கட்சிகளிலிருந்து ஆட்களை சேர்க்கும் பணியும் நடைபெற்றுவருகிறது.
திமுக ஆன்லைன் மூலமாக புதிதாக உறுப்பினர்களைச் சேர்க்கும் பணியில் ஈடுபட்டுள்ளது. இந்நிலையில் அண்ணா அறிவாலயத்தில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையனின் அண்ணன் மகன் கே.கே.செல்வன் உள்ளிட்ட பலர் திமுகவில் இணைந்தனர்.
இதுகுறித்து திமுகவின் ட்விட்டர் பக்கத்தில், “திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில், ஈரோடு வடக்கு மாவட்டத்தை சேர்ந்த அதிமுக அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையனின் அண்ணன் மகன் குள்ளம்பாளையம் கே.கே.செல்வன் மற்றும் கோபி கே.ஈ.கதிர்பிரகாஷ், கோபி ஆர்.துரைசாமி ஆகியோர் திமுகவில் இணைந்தனர்” என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
கே.கே.செல்வன் தமிழ்நாடு மருந்து வணிகர் சங்கத்தின் மாநிலச் செயலாளர், அகில இந்திய மருந்து வணிகர் சங்கத்தின் பொருளாளர் உள்ளிட்ட பதவிகளை வகிக்கிறார். மேலும் அமைச்சர் செங்கோட்டையனுக்கு அரசியல் ரீதியாக உறுதுணையாகவும் இருந்துள்ளார்.
இந்நிலையில் அவர் திமுகவில் இணையப்போகும் செய்தி அமைச்சருக்கு கிடைத்ததும் செல்வனிடம் பேசியுள்ளார். திமுகவில் போய் சேர்ந்தால் என் மீது பல்வேறு விமர்சனங்கள் வருமே எனக்கூறி முடிவை மாற்ற வலியுறுத்தியுள்ளார். குடும்ப உறுப்பினர்கள் மூலமாகவும் பேசியுள்ளார். ஆனால் செல்வனை தடுக்க முடியவில்லை என்கிறார்கள்.
கொங்கு மண்டலம் அதிமுகவின் கோட்டையாக உள்ளது. பெரும்பாலான தொகுதிகளை அதிமுக கடந்த தேர்தலில் கொங்கு மண்டலத்தில்தான் வென்றது. அமைச்சர்கள் பலரும் அந்த வட்டாரத்தைச் சேர்ந்தவர்கள்தான். இந்நிலையில் மற்ற மாவட்டங்களைவிட அதிகளவிலான பணிகள் அங்குதான் நடைபெறுகின்றன.
இந்நிலையில் கொங்கு மண்டலத்தில் வலுவாக கால் ஊண்ற திமுக முயற்சித்து வரும் நிலையில் அமைச்சரின் அண்ணன் மகனையே தங்கள் பக்கம் இழுத்துள்ளது முக்கிய நகர்வாக பார்க்கப்படுகிறது.
சசிகலாவின் விடுதலை தமிழக அரசியல் களத்தில் ஒரு விவாதமாக கிளம்பியுள்ளது. அவரது விடுதலை குறித்த பல்வேறு தகவல்கள் வெளியான நிலையில், 2021ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 27ஆம் தேதி சசிகலா விடுதலையாவார் என்று தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் கேட்கப்பட்ட கேள்விக்கு பெங்களூரு பரப்பன அக்ரஹாரா சிறைத்துறை பதிலளித்துள்ளது.
சசிகலா சிறை செல்லும் முன்னர் கட்சியில் எவ்வளவோ சீனியர்கள் இருந்தாலும், எடப்பாடி பழனிசாமியை முதல்வராக கை காட்டி விட்டு சென்றார். ஆனால், அதன் பிறகு அவரது குடும்பத்தையே ஒரங்கட்டி விட்டு ஈ.பி.எஸ்.-ஓ.பி.எஸ்., ஆகியோர் இணைந்தது நாம் அனைவரும் அறிந்ததே.
இருப்பினும், சசிகலாவின் அபிமானிகள் அதிமுகவில் ஏராளம் என்பதால், அவர் வெளியே வந்த பின்னர் பல்வேறு திருப்பங்கள் தமிழக அரசியல் களத்தில் நிகழலாம் என எதிர்பார்க்கப்பட்டு வருகிறது. அதிமுகவில் இருக்கும் சசிகலாவின் அபிமானிகள் அவர் பின்னால் இணைவார்களா. ஈ-பிஎஸ்., ஓ.பி.எஸ். ஆகிய இருவரின் எதிர்காலம் என்னவாகும். அதிமுகவில் என்ன நிகழும் என்பது பரவலாக எதிர்பார்ப்புக்கு உள்ளாகியுள்ளது.
இந்த நிலையில், புகார் ஒன்றின் காரணமாக அதிமுகவில் முக்கியத்துவம் கொடுக்கப்படாமல் சிறிது காலம் ஓரங்கட்டப்பட்ட அமைச்சர் செங்கோட்டையன் மீண்டும் கட்சியில் முக்கியத்துவம் பெற்றதற்கு சசிகலாவின் குடும்பத்தினர் முக்கிய காரணமாக இருந்துள்ளனர் என்ற தகவல் தற்போது வெளி வந்துள்ளது. இந்த தகவலை தெரிவித்தது வேறு யாரும் இல்லை திமுகவில் இணைந்துள்ள செங்கோட்டையனின் உடன் பிறந்த சகோதரர் கே.ஏ.காளியப்பன் மகன் கே.கே.செல்வன்தான்.
எம்.ஜி.ஆர். காலம் தொட்டு அதிமுகவில் முக்கிய தலைவராக வலம் வருபவர் செங்கோட்டையன். அதிமுக இரண்டு அணிகளாகப் பிரிந்தபோது சசிகலா அணியில் இருந்த அவருக்கு பல்வேறு முக்கிய பொறுப்புகள் வழங்கப்பட்டன. சசிகலா சிறை செல்லும் முன்னர் கூட செங்கோட்டையனைத்தான் முதல்வர் நாற்காலியில் அமர வைப்பார் என்றும் கூறப்பட்டது. அந்த அளவிற்கு அதிமுகவில் முக்கியத்துவமும், சீனியாரிட்டியும் உள்ள செங்கோட்டையனை ஜெயலலிதா ஒரு காலத்தில் ஓரங்கட்டி வைத்திருந்தார்.
அப்போது, “சசிகலா கணவர் நடராஜனை சந்தித்து அவருடைய உதவியோடும் ஆதரவோடும்தான் செங்கோட்டையனுக்கு அதிமுகவில் மீண்டும் முக்கியத்துவம் கொடுக்கப்பட்டது. தற்போது அமைச்சராகவும் இருக்கிறார். அதற்கு நானும் ஒரு முக்கிய காரணம்“ என்று கே.கே.செல்வன் தனியார் இணையதளம் ஒன்றுக்கு அளித்த பேட்டியில் தெரிவித்துள்ளார்.
செங்கோட்டையன் மட்டுமல்ல இதுபோன்று அதிமுகவில் இன்னும் ஏராளமானோர் உள்ளனர். அவர்கள் அனைவரும் சசிகலாவினால் ஏதோ ஒரு வகையில் ஆதாயமடைந்தவர்களாகவே இருக்கின்றனர். எனவே, சசிகலா வருகைக்கு முன்னர் தங்களது ஆதரவு வட்டங்களை ஈ.பி.எஸ்.- ஓ.பி.எஸ்., ஆகிய இருவரும் பெருக்கிக் கொள்ள பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருவதாகவும் அதிமுக வட்டாரத் தகவல்கள் தெரிவித்துள்ளன.
– வெற்றிவேல்