அரசியல்

ஜெ , மரணம் தொடர்பான விசாரணைக்கு ஆஜராகும் ஓ.பி.எஸ்

 ஜெயலலிதா மரணம் குறித்து விசாரணை நடத்தி வரும் ஆறுமுகச்சாமி கமிஷன் முன்பு முதன்முறையாக ஓ. பன்னீர் செல்வம் நாளை ஆஜராகிறார்.
மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதா மரணம் தொடர்பாக விசாரணை நடத்தி அறிக்கை தாக்கல் செய்ய கடந்த 2017ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் ஆறுமுகசாமி ஆணையத்தை அமைத்து தமிழக அரசு உத்தரவிட்டது. ஜெயலலிதாவின் உறவினர்கள், பாதுகாவலர்கள், மருத்துவர்கள் அரசு உயர் அதிகாரிகள் என இதுவரை 150க்கும் மேற்பட்டோர் ஆணையத்தில் ஆஜராகி விளக்கம் அளித்துள்ளனர்.

மருத்துவர்களை விசாரிக்கும்போது மருத்துவ குழு வல்லுனர்கள் முன்னிலையில் விசாரணை நடத்த வேண்டும் என அப்போலோ மருத்துவமனை நிர்வாகம் சார்பாக உச்ச நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கு காரணமாக கடந்த இரண்டு ஆண்டுகளாக விசாரணை நடைபெற முடியாத சூழல் இருந்து வந்தது.

உச்ச நீதிமன்ற தீர்ப்பின்படி, எய்ம்ஸ் இயக்குனர் பரிந்துரையின் படி 6 பேர் கொண்ட மருத்துவக் குழு அமைக்கப்பட்டது. அதன் தொடர்ச்சியாக விசாரணையை அடுத்த கட்டத்திற்கு எடுத்துச் செல்வது தொடர்பாக நீதிபதி ஆறுமுகசாமி தலைமையில் நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில், சசிகலா தரப்பு மற்றும் அப்போலோ தரப்பு வழக்கறிஞர்கள் பல்வேறு பரிந்துரைகளை வழங்கினர்.

இதற்கிடையே, மார்ச் 21ம் தேதி நேரில் ஆஜராக அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் சசிகலாவின் அண்ணன் மனைவி இளவரசி ஆகியோருக்கு ஆறுமுகசாமி ஆணையம் சம்மன் அனுப்பியிருந்தது. ஓ.பன்னீர்செல்வத்திற்கு 9ஆவது முறையாக சம்மன் அனுப்பப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் ஆறுமுகச்சாமி கமிஷன் முன்பாக முன்னாள் முதல்வரும் அதிமுக ஒருங்கிணைப்பாளருமான ஓ. பன்னீர் செல்வம் நாளை நேரில் ஆஜராகவுள்ளார். இதே போல சசிகலாவின் அண்ணன் மனைவி இளவரசி ஆஜராகிறார். நாளை காலை 10 மணிக்கு இளவரசியும், அதைத் தொடர்ந்து காலை 11.30-க்கு ஓ. பன்னீர் செல்வமும் ஆறுமுகச்சாமி கமிஷன் முன்பாக ஆஜராகவுள்ளனர்

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button