விருதுநகரில் தொடர் வழிப்பறி: மாவட்ட கண்காணிப்பாளரின் அதிரடி நடவடிக்கை
விருதுநகர் மாவட்ட கண்காணிப்பாளர் ராஜராஜன் துரித நடவடிக்கை மேற்கொண்டு பிரபல வழிப்பறி கொள்ளையனை கைது செய்து பொதுமக்களுக்கு பயத்தை போக்கி உள்ளார். பிரபல ரவுடி அஜித்தை கைது செய்தது பொதுமக்களிடம் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.
விருதுநகர், இராமநாதபுரம் மற்றும் மதுரை மாவட்டங்களில் தொடர் வழிப்பறி மற்றும் இரு சக்கர வாகனத் திருட்டில் ஈடுபட்டு வந்த கும்பலைச் சேர்ந்த 3 பேர் கைது, இரு சக்கர வாகனம் ஒன்றையும் பறிமுதல் செய்து திருச்சுழி காவல்துறையினர் நடவடிக்கை.
விருதுநகர் மாவட்டம் திருச்சுழி மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் கடந்த சில மாதங்களாக தொடர் வழிப்பறி மற்றும் இரு சக்கர வாகனத் திருட்டுக்கள் அதிகம் நடைபெறுவதாக பொதுமக்களிடம் இருந்து திருச்சுழி காவல் நிலையத்தில் புகார்கள் வந்த வண்ணம் இருந்தன.
இந்த நிலையில், கடந்த சில தினங்களுக்கு முன்பு திருச்சுழி அருகே இலுப்பையூர் பகுதியில் இரு சக்கர வாகனத்தில் வந்த தம்பதியரை வழிமறித்து அவர்களிடம் இருந்து பணம், நகைகள் மற்றும் இரு சக்கர வாகனத்தையும் மர்ம கும்பல் பறித்துச் சென்று விட்டதாக திருச்சுழி காவல் துணைக் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் புகார் அளிக்கப்பட்டது.
இதனையடுத்து, விருதுநகர் காவல் கண்காணிப்பாளர் இராஜராஜன் உத்தரவின்படி, குற்றவாளிகளைப் பிடிக்க திருச்சுழி காவல் துணைக் கண்காணிப்பாளர் சசிதரன் தலைமையில் தனிப்படை அமைத்து வழிப்பறிக் கும்பலைத் தேடி வந்தனர்.
இந்நிலையில் தனிப்படையினர் நடத்திய தேடுதல் வேட்டையில் வழிப்பறிக் கும்பலைச் சேர்ந்த 3 பேரை காவல்துறையினர் மடக்கிப் பிடித்து கைது செய்தனர்.
அவர்களிடம் நடத்திய விசாரணையில் குற்றவாளிகள், திருச்சுழி அருகே அம்மன்பட்டியைச் சேர்ந்த உடையப்பன் (எ) வெற்றிவேல் (51),
இராமநாதபுரம் மாவட்டம் மறக்குளம் மணிவண்ணன் (23), கடலாடியைச் சேர்ந்த சண்முகையா பாண்டி (22) என்பது தெரிய வந்தது. அவர்களிடம் இருந்து இருசக்கர வாகனம் ஒன்றையும் காவல்துறையினர் கைப்பற்றினர்.
மேலும் இவர்கள் பல்வேறு இடங்களில் வழிப்பறி மற்றும் வாகனத் திருட்டில் ஈடுபட்டு வந்தது தெரியவந்தது. இது தொடர்பாக திருச்சுழி காவல்துறையினர் குற்றவாளிகளிடம் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
– பா.நீதிரஜன், திருமங்கலம்