சட்டவிரோதமாக செயல்படும் செங்கல் சூளைகள் : கேள்வி கேட்ட சமூக ஆர்வலருக்கு கொலை மிரட்டல்
கோவை, தடாகம், சின்னத்தடாகம், சோமையம்பாளையம், நஞ்சுண்டாபுரம், பன்னீர்மடை, வீரபாண்டி, மாங்கரை, ஆனைக்கட்டி பகுதிகளில் ஏராளமான செங்கல் தொழிற்சாலைகள் உள்ளன. சாதாரண சூளைகளாகத் தொடங்கப்பட்ட இவை, இப்போது ரோபோ எந்திரங்கள் மூலம் தினசரி லட்சக்கணக்கான செங்கற்களை உற்பத்தி செய்து தொழிற்சாலைகளாக வளர்ந்து நிற்கின்றன. மேற்குத் தொடர்ச்சி மலையடிவாரம் என்பதால், இங்கு தாராளமாக செம்மண் கிடைக்கிறது.
பட்டா நிலம், புறம்போக்கு நிலம் என்று பாரபட்சம் பார்க்காமல், பலநூறு அடிகளுக்கு ராட்சத குழிகளைத் தோண்டி மண் எடுத்து வருகின்றனர். இதனால் சூழலுக்குக் கடும் பாதிப்பு ஏற்பட்டு, பொது மக்களும் வனவிலங்குகளும் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.
கடந்த ஒரு மாதத்தில் நான்கு யானைகளும், 15-க்கும் மேற்பட்ட மனிதர்களும் உயிரிழந்துள்ளனர். இதில் எந்த செங்கல் தொழிற்சாலையும் மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் உட்பட எந்த அரசுத்துறையிடமும் அனுமதி வாங்கவில்லை எனக் கூறப்படுகிறது.
இதையடுத்து, அந்தச் செங்கல் தொழிற்சாலைகளுக்கு சீல் வைக்க வேண்டுமென்று சமூக ஆர்வலர்களும் பொது மக்களும் சட்டப் போராட்டம் நடத்தி வருகின்றனர்.
கோவையை சேர்ந்த ராஜேந்திரன் என்பவர் நீதிமன்றத்தில் தொடர்ந்த வழக்கில், மேற்கு தொடர்ச்சி மலை அடிவார பகுதிகளில் சட்டவிரோதமாக செங்கல் சூளைகள் இயங்குவதாக தெரிவித்துள்ளார். குறிப்பாக சின்ன தடாகம், நஞ்சுண்டபுரம், வீரபாண்டி, சோமயம்பாளையம், பண்ணிமலை ஆகிய கிராமங்களில், அரசு புறம்போக்கு நிலங்களில் 200 செங்கல் சூளைகள் சட்டவிரோதமாக செயல்படுவதாக மனுதாரர் கூறியுள்ளார்.
இந்த சூளைகளால் சுற்றுசூழலுக்கு மட்டுமல்லாது, நில வளத்திற்கும் கடுமையான பாதிப்பு ஏற்படுவதாகவும் மனுவில் கூறிய அவர்,சட்டவிரோதமாக இயங்கும் இந்த சூளைகளை மூட உத்தரவிட வேண்டும் என கோரினார். இந்த மனு நீதிபதிகள் சத்தியநாராயணன், சேஷசாயி ஆகியோர் அமர்வு முன் விசாரணைக்கு வந்தது. அப்போது மனுதாரர் தரப்பு வாதங்களை கேட்டறிந்த நீதிபதிகள், வழக்கை வரும் அக்டோபர் 17ம் தேதிக்கு ஒத்துவைத்து உத்தரவிட்டனர். இந்நிலையில், இந்த விஷயத்தைக் கையில் எடுத்துப் போராடி வரும் சமூக ஆர்வலர்கள் ராஜேந்திரன், கணேஷ் உள்ளிட்டோரின் வீடுகளுக்கு செங்கல் தொழிற்சாலை அதிபர்கள் சென்று கொலை மிரட்டல் விடுத்ததாகப் புகார் எழுந்துள்ளது.
இதுகுறித்து கணேஷ் கூறுகையில், `கோவை வடக்கு மாவட்ட செயலாளர் சி.ஆர்.ராமசந்திரன், கோவை மாவட்ட செங்கல் உற்பத்தியாளர் சங்கத் தலைவர் தர்மராஜ் உளட்பட 150-க்கும் மேற்பட்டோர் வீட்டுக்கு வந்து பிரச்னை செய்தனர்.
செங்கல் தொழிற்சாலை தொடர்பாக ஊடகங்களுக்குப் பேட்டி கொடுப்பதோ, வழக்கு தொடரவோ கூடாது.
அப்படித் தொடர்ந்தால் குடும்பத்துடன் கொலை செய்துவிடுவேன்’ என்று மிரட்டுகின்றனர். எங்கள் உயிருக்கும் உடைமைக்கும் பாதிப்பு என்றால், சி.ஆர்.ராமச்சந்திரனும் செங்கல் உற்பத்தியாளர்களும்தான் பொறுப்பு. அரசாங்கம் எங்களுக்கு உரிய பாதுகாப்பு வழங்க வேண்டும்” என்றார்.
இதேபோல, செங்கல் தொழிற்சாலைகளால் ஏற்படும் நோய் தொற்று குறித்து ஊடகங்களுக்குப் பேட்டியளித்த டாக்டர் ரமேஷ்க்கும் மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து சி.ஆர்.ராமசந்திரனிடம் கேட்டதற்கு, “சமூக வலைதளங்களில் என்னை தரக்குறைவாக விமர்சித்து மீம்ஸ் போட்டு வருகின்றனர். அதற்காகத்தான் அவர்களிடம் பேசப்போனேன். கொலை மிரட்டல் எல்லாம் விடுக்கவில்லை” என்றார்.
- சாகுல் ஹமீது