எஸ்.ஆர்.எம் பல்கலை. அடுத்தடுத்து மாணவர்கள் தற்கொலை ஏன்?
சென்னையில் இயங்கி வரும் எஸ்.ஆர்.எம் பல்கலைக்கழகத்தில் நிகழும் அடுத்தடுத்த மாணவர்களின் தற்கொலை பெரும் பரபப்பை ஏற்படுத்தியுள்ளது. இது தொடர்பாக பல்கலைக்கழக பதிவாளர் விளக்கம் தெரிவித்து அறிக்கை விட்டிருக்கிறார்.
காட்டாங்கொளத்தூரில் உள்ள இந்தக் கல்லூரியின் விடுதி பொத்தேரியில் அமைந்திருக்கிறது. இங்கு 10-வது மற்றும் 2-வது மாடியிலிருந்து இரண்டு மாணவர்கள் குதித்து தற்கொலை செய்துக் கொண்டனர்.
இதில் இரண்டாவது மாடியிலிருந்து குதித்து தற்கொலை செய்துக் கொண்ட மாணவர் ஜார்கண்ட் மாநிலத்தைச் சேர்ந்த அனில் சௌத்ரி (வயது 19) என்பது தெரிய வந்திருக்கிறது. விடுதியில் தங்கி முதலாமாண்டு பொறியியல் படித்து வந்துள்ளார்.
அனிலின் தற்கொலை குறித்து மறைமலை நகர் போலீஸார் வழக்குப்பதிவு செய்து, விசாரணை நடத்தினார்கள். அப்போது அனிலின் பெற்றோர்கள், டி.வி கூட பார்க்கக் கூடாது எனவும், அனைத்து விஷயங்களுக்கும் மிகுந்த கட்டுப்பாடு விதித்ததால் அவர் சில நாட்களாக மன உளைச்சலில் இருந்ததாக, அனில் சௌத்ரியில் சக நண்பர்களிடம் தெரிவித்திருக்கிறார்.
10-வது மாடியிலிருந்து குதித்து தற்கொலை செய்துக் சொண்ட மாணவி அனுப்ரியா பயோ மெடிக்கல் இன்ஜினியரிங் இறுதியாண்டு பயின்று வந்துள்ளார். திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரியைச் சேர்ந்த அனுவும் ஹாஸ்டலில் தான் தங்கியுள்ளார்.
சனிக்கிழமை இவரது கடைசி தேர்வை முடித்து விட்டு, ஹாஸ்டலை காலி செய்துவிட்டு வீட்டிற்கு செல்ல தயாராகியிருந்த அனுவை அழைத்துச் செல்ல தாய் செல்வியும், சகோதரர் ராஜூ சுந்தரமும் வந்திருக்கிறார்கள். இந்நிலையில் எதிர்பாராதவிதமாக மாடியிலிருந்து குதித்து உயிரை மாய்த்திருக்கிறார் அனுப்ரியா.
இது தொடர்பாக எஸ்.ஆர்.எம். பல்கலைக்கழக பதிவாளர் வெளியிட்ட அறிக்கையில், ‘மன அழுத்தம் காரணமாக இரு மாணவர்கள் தற்கொலை செய்திருக்கிறார்கள். மாணவர்களின் மன அழுத்தத்தை போக்க பல்கலைக்கழக உளவியல் துறை உரிய ஆலோசனைகளை வழங்கி வருகிறது. 24 மணி நேரமும் ஆன் லைன் மூலமாகவும் ஆலோசனைகள் வழங்கப்படுகின்றன.
எப்போதுமே மாணவர்களுடன் அவர்களது பெற்றோர் நல்ல நட்புறவுடன் இருக்க வேண்டும். அவர்களின் திறனுக்கு ஏற்ப அவர்களை வழிநடத்த வேண்டும். ஆசிரியர்களும் இதற்கு உதவிகரமாக இருக்க வேண்டும் என வலியுறுத்தி வருகிறோம்’ என கூறியிருக்கிறார்.