தமிழகம்

குறைந்த விலைக்கு கார் வாங்கித் தருவதாக கூறி பணமோசடி ! போலீசார் வலைவீச்சு !

சோழவரம் கே.வி.ஜி அவன்யூ பகுதியை சேர்ந்த ரமேஷ் என்பவரின் மகன் சுகாஸ் (வயது 25) அண்ணா நகரில் உள்ள ஐடி நிறுவனத்தில் பணிபுரிந்து வந்துள்ளார். இவருக்கு தெரிந்த  நண்பர் மூலம் அறிமுகமான பெரம்பூர் துளசிங்கம் தெருவை சேர்ந்த பார்த்தசாரதி (வயது 27) என்பவர், சுகாஸிடம் தான் ஒரு வழக்கறிஞர் எனக் கூறி நண்பராக சில நாட்கள் பழகி வந்துள்ளார். இந்நிலையில், சுகாஸின் தாயார் உடல்நிலை சரியில்லாததால் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று வருவதற்காக, ஒரு பழைய காரை வாங்கித் தருமாறு பார்த்தசாரதியிடம் கூறியுள்ளார். பின்னர்  கொளத்தூர் 200 அடி சாலையில் உள்ள ஒரு கார் நிறுவனத்திற்கு சுகாஸை அழைத்துச்சென்ற பார்த்தசாரதி, மாருதி ஸ்விப்ட் காரை மூன்று லட்ச ரூபாய் விலை பேசி வைத்துள்ளதாகவும், தான் இல்லாமல் தனியாகச் சென்று வாங்கினால் நான்கு லட்சம் ரூபாய் கொடுக்க வேண்டிவரும் என கூறியதோடு, மூன்று லட்சம் ரூபாய் விலை என்னிடம் கொடுத்து விடுங்கள், நான் காரை எடுத்துவந்து தருகிறேன் எனக் கூறியிருக்கிறார். அவரது பேச்சை நம்பிய சுகாஸ் மறுநாள் பார்த்தசாரதியிடம் பணத்தை கொடுத்துள்ளார். அதன்பிறகு பேசியபடி, காரை வாங்கி கொடுக்காமல் பல மாதங்களாக அலைக்கழிப்பு செய்து வந்துள்ளார்.

ஒரு கட்டத்தில் பொறுமையை இழந்த சுகாஸ், தான் ஏமாற்றப்பட்டது சம்பந்தமாக, கொளத்தூர் ராஜமங்கலம் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.
புகாரை பெற்றுக் கொண்ட ராஜமங்கலம் காவல் நிலைய போலீசார், வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். பின்னர் போலீசாரின் விசாரணையில் இவர் இது போல் பல இடங்களில் மோசடி வேலைகளில் ஈடுபட்டு, பலரிடம் வழக்கறிஞர் எனக்கூறி, அவர்களிடம் மிரட்டி பணம் பெறுவதை வாடிக்கையாகக் கொண்டிருப்பதாக தெரியவந்துள்ளது. இவரைப் பற்றிய தகவல் தெரிந்தாலும், அவர் இருப்பிடம் தெரிந்தாலும்,  கொளத்தூர் ராஜமங்கலம் காவல் நிலையத்திற்கு தகவல் அளிக்கலாம் என போலீசார் கூறியுள்ளனர்.

– கே.எம்.எஸ்

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button