மு.க.ஸ்டாலினுடன் சந்திரசேகர ராவ் சந்திப்பு : மூன்றாவது அணி குறித்து ஆலோசனை!
மேற்கு வங்கத்தில் மம்தா பானர்ஜி, தெலங்கானாவில் சந்திரசேகர ராவ், ஆந்திராவில் சந்திரபாபு நாயுடுவும் ஜெகன்மோகன் ரெட்டியும், உத்தரப் பிரதேசத்தில் மாயாவதியும் அகிலேஷ் யாதவ்வும் கூட்டணி அமைத்தும், ஒடிசாவில் நவின் பட்நாயக் தனித்தும் போட்டியிடுகின்றன. இந்த மாநிலக் கட்சிகள், காங்கிரஸ், பா.ஜ.கவுடன் கூட்டணி இல்லாமல் தனித்து போட்டியிடுகின்றன.
இந்தமுறை தேர்தல் முடிவில் பா.ஜ.க, காங்கிரஸ் ஆகிய கட்சிகளுக்கு பெரும்பான்மை கிடைக்காது என்று கருதப்படுகிறது. அதனால், தெலங்கானா மாநில முதல்வர் சந்திரசேகர ராவ், தேர்தலுக்குப் பிந்தைய மூன்றாவது அணி அமைக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளார்.
அவர், சமீபத்தில் மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி, கேரள முதல்வர் பினராயி விஜயன் ஆகியோர் நேரில் சந்தித்து ஆலோசனை நடத்தினார்.
இந்நிலையில், திமுக தலைவர் ஸ்டாலினை அவரது ஆழ்வார்பேட்டை இல்லத்தில் சந்திரசேகர ராவ் சந்தித்தார். இவர்களது சந்திப்பு சுமார் ஒருமணி நேரம் வரை நீடித்தது. சந்திப்பு முடிந்து வெளியே வந்த சந்திரசேகர் ராவ் செய்தியாளர்களை சந்திக்காமல் ஹைதராபாத்திற்கு புறப்பட்டுச் சென்றார்.
ஆழ்வார்பேட்டை இல்லத்தில் சந்திப்பு நடைபெற்ற போது ஸ்டாலினுடன், திமுக பொருளாளர் துரைமுருகன், மக்களவை உறுப்பினர் டி.ஆர்.பாலு ஆகியோர் உடனிருந்தனர். சந்திப்பின் இறுதியில் திமுக முன்னாள் தலைவர் கருணாநிதியின் சிலை சந்திரசேகர் ராவுக்கு ஸ்டாலின் பரிசாக வழங்கினார்.
இந்த சந்திப்பு தொடர்பாக சந்திரசேகர் ராவ் மற்றும் ஸ்டாலின் தரப்பில் செய்தியாளர்கள் சந்திப்பு நடைபெறவில்லை. எனினும், இதில் காங்கிரஸ் தலைமையிலான மதசார்ப்பற்ற ஜனநாயக கூட்டணிக்கு ஆதரவளிக்குமாறு சந்திரசேகர் ராவிடம் ஸ்டாலின் கேட்டுக்கொண்டதாக தகவல்கள் கூறுகின்றன.
கடந்த ஏப்ரல் மாதம் சந்திரசேகர் ராவ் மற்றும் ஸ்டாலின் சந்திப்பு நடைபெற திட்டமிடப்பட்டது. ஆனால் அது நடைபெறவில்லை. இதற்கு ஸ்டாலின் ஒப்புக்கொள்ளவில்லை என சொல்லப்படுகிறது.
இந்நிலையில் இருவரும் சந்தித்துக் கொண்டது அரசியல் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது. ஆனால் அவர்கள் இருவர் தரப்பிலும் சந்திப்பு தொடர்பான எந்தவிதமான விவரங்களும் வெளிவரவில்லை.