தொடர்ந்து அதிகரித்து வரும் பெட்ரோல் விலையை கண்டித்து எதிர்க்கட்சிகள் நாடுமுழுவதும் கடையடைப்பை நடத்தியுள்ள வேளையில், இது ஒரு மிகப் பெரிய பாதிப்பின் சிறு துவக்கமே என்று பொருளாதார நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.
கடந்த வருடத்தின் செப்டம்பர் மாத முதல் வாரத்தோடு ஒப்பிடுகையில், பெட்ரோலின் விலை 25 சதவீதமும், டீசலின் விலை 13 சதவீதமும் அதிகரித்துள்ளது.
இந்திய ரூபாய் மதிப்பின் வீழ்ச்சியே இந்த பிரச்சனைகளின் பிரதான மூலமாக பார்க்கப்படுகிறது.
ஆசிய கண்டத்திலுள்ள நாடுகளிலேயே இந்தியாவின் பணமதிப்புதான் இந்த வருடத்தில் மோசமான வீழ்ச்சியை கண்டுள்ளது. அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு இந்த வருடத்தில் மட்டும் சுமார் 13 சதவீதம் வீழ்ச்சி கண்டுள்ளது.
அமெரிக்காவின் பொருளாதாரம் வளர்ச்சி பாதையை நோக்கி செல்வதால், பல வெளிநாட்டு முதலீட்டாளர்கள் வளர்ந்துவரும் சந்தைப் பொருளாதாரத்தை கொண்ட நாடுகளை விட்டு வெளியேறுகின்றனர். சீனாவிற்கும் அமெரிக்காவிற்கும் இடையிலான வர்த்தக யுத்த கவலைகள் பிராந்தியத்திலுள்ள முதலீட்டாளர்களின் நம்பிக்கைக்கு உதவில்லை.
“ரூபாய் மதிப்பு சரிவுக்கும் ஏற்றுமதிக்கும் ஒப்பீட்டளவில் தொடர்பு உள்ளது. ஒரு நாட்டின் பணமதிப்பில் தொடர் சரிவு இருக்கும்போது தங்களுக்கு வேண்டிய பொருட்களை வாங்குவது குறித்து ஏற்றுமதியாளர்கள் யோசிக்கலாம். ரூபாயின் மதிப்பில் ஏற்பட்டு வரும் தொடர் சரிவு, அது இன்னும் சரிகிறதா என்பதை பார்த்து முடிசெய்வதற்கு ஏற்றுமதியாளர்களை தூண்டலாம்“ என்று யெஸ் பேங்க்கின் தலைமை பொருளாதார நிபுணர் ஷுபாடா ராவ் கூறுகிறார்.
அதுமட்டுமில்லாமல், இந்தியாவின் பணமதிப்பு குறைந்து வருவதால், கச்சா எண்ணெய் போன்ற அத்தியாவசிய பொருட்களின் இறக்குமதி விலை கணிசமாக அதிகரித்து வருகிறது.
தனது மொத்த கச்சா எண்ணெய் தேவையில் சுமார் 80 சதவீதம் இறக்குமதியை மட்டுமே நம்பியுள்ள இந்தியாவின் எரிபொருள் விலை மாற்றத்திற்கு, சௌதி அரேபியா, இரான் போன்ற கச்சா எண்ணெய் ஏற்றுமதி நாடுகளின் அரசியல் சூழ்நிலை, தயாரிப்பு நிறுத்தம் போன்றவையும் காரணமாக அமைகின்றன.
கடந்த 2014 மற்றும் 2015க்கு இடைப்பட்ட காலத்தில் எரிபொருளின் விலை உலகளவில் குறைவாக இருந்த போதிலும், இந்தியாவில் சில்லறை விற்பனை விலை அதிகமாகவே இருந்தது. இதற்கு அரசாங்கத்தின் கொள்கைகளே காரணம் ஆகும்.
பெட்ரோல் விலையில் 45 சதவீதமும், டீசல் விலையில் 36 சதவீதமும் மதிப்பு கூட்டு வரிகள் மற்றும் கலால் வரிக்காக சென்றுவிடுகின்றன. இதைத்தவிர ஒவ்வொரு மாநிலமும் எரிபொருளின் மீது வேறுபட்ட வரிவிதிப்பை செலுத்துகின்றன. எனவே தான் மும்பையின் பெட்ரோல் விலை டெல்லியை விட அதிகமாக உள்ளது.
சமீபத்தில் ராஜஸ்தான் மாநில அரசாங்கம் தனக்கு வருவாய் இழப்பு ஏற்படும் சூழல் இருந்தாலும், எரிபொருள் மீதான வரியை நான்கு சதவீதம் குறைத்தது. ஆந்திரப்பிரதேச அரசாங்கம் பெட்ரோல், டீசல் விலையை லிட்டருக்கு இரண்டு ரூபாய் குறைக்கவுள்ளதாக முடிவெடுத்திருந்தது. ஆனால், நாட்டின் பெரும்பாலான மாநிலங்கள் விலையை குறைப்பதற்கோ அல்லது வரியை குறைப்பதற்கோ தயாராக இல்லை.
“பொருளாதாரத்தை பொறுத்தவரை நீங்கள் வர்த்தகத்தில் மேற்கொள்ள நினைக்கும் இரண்டு மாற்றங்களையும் ஒரே சமயத்தில் செய்துவிட முடியாது. அதாவது, எரிபொருளின் விலையை கட்டுக்குள் வைத்திருக்க அரசாங்கம் விரும்பினால், அதன் மீதான வரியை குறைப்பதை தவிர வேறு வழியில்லை. எரிபொருள்கள் மீதான மத்திய மற்றும் மாநில வரியை குறைக்க வேண்டும்“ என்று பொருளாதார ஆய்வு நிறுவனமான சிஆர்ஐசிஐஎல்லின் தலைமை பொருளாதார நிபுணரான ஜோஷி கூறுகிறார்.
எரிபொருளுக்காக செலவிடும் நாடுகள் பட்டியலில் இந்தியா படுபாதாளத்தில் உள்ளது. ஒரு இந்தியர் தனது வருமானத்தில் அதிகபட்சம் 76 சதவீதத்தை எரிபொருளுக்காக செலவிடுவதாக அறிக்கை ஒன்று தெரிவிக்கிறது. எனவே, சமீபகாலமாக தொடர்ந்து அதிகரித்து வரும் எரிபொருள் விலை சாதாரண மக்களின் வாழ்க்கையில் பாதிப்பை ஏற்படுத்தக்கூடும்.
டீசலின் விலை உயர்வால் காய்கறிகள் போன்ற அத்தியாவசிய பொருட்களை ஓரிடத்திலிருந்து மற்றொரு இடத்திற்கு எடுத்துச்செல்லும் போக்குவரத்து செலவு அதிகரிக்கிறது. இது பணவீக்கதை அதிகரிப்பதுடன், ரிசர்வ் வங்கி வட்டி வீதத்தை கூட்டுவதற்கான அழுத்தத்தை அதிகரிக்கிறது. இது நடக்குமானால், எரிபொருளுக்கு மட்டுமல்லாமல் காய்கறிகள், வீடு மற்றும் வாகன கடனையும் நீங்கள் அதிகமாக செலவிட நேரிடலாம்.
“அமெரிக்க டாலருக்கெதிரான இந்திய ரூபாயின் மதிப்பு இன்று 72.32 ரூபாய். சில தலைவர்களின் வயதைவிட வேகமாக அதிகரித்து வருகிறது” என்று காங்கிரஸ் கட்சியின் தலைவர்களில் ஒருவரான கபில் சிபல் மத்திய அரசை விமர்சித்து ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.
காங்கிரஸ் தலைமையிலான அரசாங்கத்தின் 2009-&2014 வரையிலான ஆட்சிக்காலத்தில் அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு 67 ரூபாயை தொட்டபோது, அப்போதைய குஜராத் முதலமைச்சர் நரேந்திர மோதியால் தேர்தலில் வாக்குகளை கவரும் விசயமாக பயன்படுத்தப்பட்டதுடன், “நாட்டின் பொருளாதாரம் அல்லது ரூபாய் வீழ்ச்சியைப் பற்றி கவலை இல்லாமல் தனது ஆட்சியை தக்க வைப்பதில் மட்டும் கவனம் செலுத்தும் இந்த அரசாங்கத்தால் நாடு ஏமாற்றம் அடைந்துள்ளது” என்றும் தெரிவித்திருந்தார்.
ஆனால், இன்று மத்தியில் ஆட்சியில் இருக்கும் பாஜக தலைமையிலான அரசாங்கம் பின்கால் வைக்கிறது.
எரிபொருள் விலை உயர்வு குறித்து பேசிய மத்திய அமைச்சர் ரவிசங்கர் பிரசாத், சர்வதேச சந்தையை இதற்கு குற்றஞ்சாட்டியது ஆச்சர்யமளிக்கும் விதமாக இருந்தது. ஆனால், அவர் ரூபாய் மதிப்பு வீழ்ச்சியை பற்றி எதுவும் குறிப்பிடவில்லை.
“சில தருணங்களில் மக்களுக்கு சிரமம் இருந்தாலும் அவர்கள் முழு அடைப்புக்கு ஆதரவு அளிக்கவில்லை என்று பாஜக நம்புகிறது. இது காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகளுக்கு கவலையளிக்கிறது” என்று சமீபத்தில் நடந்த கட்சி கூட்டம் ஒன்றில் அவர் கூறியிருந்தார். ஆனால், 2019ஆம் ஆண்டு தேர்தலுக்கு முன்னரே ‘மோடினோமிக்ஸ்’ என்ற கூற்று அரசாங்கத்திற்கெதிரான விவகாரமாக மாறிவருகிறது என்பது மட்டும் உண்மை.