காஞ்சி மாவட்ட உட்கட்சி மோதலால் ஆட்டம் காணும் அமமுக
அரசனை நம்பி கட்டிய புருஷனை விட்ட கதையாகிப்போனது நம் நிலை என்ற புலம்பலில் தவிக்கின்றனர் காஞ்சி மாவட்ட தினகரன் ஆதரவாளர்கள். தகுதி நீக்கம் செய்யப்பட்ட 18 தொகுதிகளில் காஞ்சி மாவட்டம் மாவட்டம் திருப்போரூர் தொகுதியும் ஒன்று. இத்தொகுதிக்கு ஜெயலலிதாவால் அறிவிக்கப்பட்ட வேட்பாளர் முன்னால் மாமல்லபுரம் பேருராட்சி சேர்மன் கோதாண்டபாணி.
இவர் எப்படியாவது சட்டமன்ற உறுப்பினராகி, காஞ்சி மத்திய மாவட்ட கழகச் செயலாளராகி அமைச்சராகும் கனவில் பலதரப்பட்ட போராட்டங்களின் முடிவாக தொகுதி அ.தி.மு.க.வினரின் அயராத உழைப்பின் பயனாக சட்டமன்ற உறுப்பினர் ஆனார். அதன்பின் அவரின் மாவட்ட செயலாளர் மற்றும் அமைச்சர் பதவிக் கனவுகள் நிறைவேறாமலே இருந்தது. இதே தொகுதியில் சட்டமன்றத் தேர்தலில் போட்டியிட முன்னாள் மதுராந்தகம் சட்டமன்ற உறுப்பினர் வாசுதேவனிடமும், பல முன்னணி அ.தி.மு.க.வினரிடமும் சிபாரிசு செய்யும்படி தொடர் தொல்லை பண்ணி இறுதியில் முயற்சி பலனளிக்கவில்லை.
இந்நிலையில்தான் கோதாண்டபாணி மற்றும் வாசுதேவன் இருவரும் தினகரன் அணியில் ஐக்கியமானார்கள். – காஞ்சி மத்திய மாவட்ட செயலாளராக கோதாண்டபாணியும், தலைமை கழகப் பொறுப்பில் வாசுதேவனும் தினகரன் அணியில் பொறுப்பேற்றுக் கொண்டனர். அ.தி.மு.க.வில் எந்தவித பொறுப்புகளும் இல்லாத சிலரை சீடர்களாக தன்வசம் வைத்துக் கொண்டு கோதாண்டபாணியும், வாசுதேவனும் வலம்வந்த நிலையில் தினகரன் அணி 18 சட்டமன்ற உறுப்பினர்களும் நீதிமன்றத்தால் தகுதி நீக்கம் செய்யப்பட்டனர். அந்தந்த தொகுதியில் தகுதியிழந்தவர்களே மீண்டும் போட்டியிடுவார்கள் என்று தினகரன் அறிவித்திருந்த நிலையில் காஞ்சி மாவட்டம் திருப்போரூர் தொகுதிக்குள் மட்டும் கோதாண்டபாணிக்கும், வாசுதேவனுக்கும்- தொகுதிச் சண்டை மறைமுகமாகக் கிளம்பியது. நான் ஏற்கனவே 5 ஆண்டுகள் மதுராந்தகம் தொகுதி எம்.எல்.ஏ.வாக இருந்தவன். அதுமட்டுமின்றி கட்சியில் தற்போது தலைமைப் பொறுப்பில் உள்ளேன். அதனால் திருப்போரூர் தொகுதியில் எனக்குத் தான் வாய்ப்பு அதிகம். அதனால் நீ விலகிக் கொள் என வாசுதேவன் கோதாண்டபாணியிடம் நாசுக்காகச் சொல்லியுள்ளார். கொதிப்படைந்த கோதாண்டபாணி இந்தப் பிரச்சனையை நேரடியாக தினகரனிடம் கூற அப்செட் ஆகியுள்ளார் தினகரன்.
வாசுதேவன் கடந்த அ.தி.மு.க- ஆட்சியில் மதுராந்தகம் தொகுதி எம்.எல்.ஏ வாக இருந்த போது, தன்னை ஜெயலலிதா விவசாயத்துறை அமைச்சராக்க நினைத்ததாகவும், அதற்கு சசிகலா முட்டுக்கட்டையாக இருந்ததாகவும் கூறி சசிகலா கார்டனை விட்டு வெளியேற்றப்பட்ட போது அனைத்துக் கட்சிக்காரர்களுக்கும் இனிப்பு வழங்கிக் கொண்டாடியவர் வாசுதேவன். அப்படிப்பட்டவர் கொள்கைக்காக அணி மாறவில்லை. பதவிக்காகவே தினகரன் அணிக்கு வந்தார் என்பது கோதண்டபாணி ஆதரவாளர்களின் கருத்தாக உள்ளது.வாசுவா?கோதவா? என்ற குழப்பத்தில் உள்ள ர.ர.க்கள் தற்போது தினகரன் கூடாரத்தை விட்டு அ.தி.மு.க வுக்கே நகரத் தொடங்கியிருப்பதால் உன்னால் நான் கெட்டேன். என்னால் நீ கெட்டாய் என்ற பரிதாப நிலைக்குள்ளாகியுள்ளனர் வாசுதேவனும், கோதாண்டபாணியும்.
திருப்போரூர் தொகுதியைப் பொறுத்தவரை கோதாண்டபாணியை கடந்த தேர்தலில் ஜெயலலிதாவின் செல்வாக்கும் அக்கட்சியின் இரட்டை இலைச் சின்னமும் தான் வெற்றியடைய வைத்தது. வாசுதேவனோ கட்சியில் ஒரு ஓரமாக ஒதுக்கப்பட்டவர். இந்த இருவரில் யார் போட்டியிட்டாலும் திருப்போரூர் இடைத்தேர்தலில் தினகரன் அணி தீக்கிரையாவது உறுதி என்கின்றனர் தொகுதியைச் சேர்ந்த பிற கட்சியினர்.