சுதந்திர இந்தியாவின் முதல் தீவிரவாதி ஒரு இந்து..! : கமலின் சர்ச்சை பேச்சும்… கண்டனங்களும்
அரவக்குறிச்சி தொகுதியில் மக்கள் நீதி மய்யம் கட்சி சார்பில் போட்டியிடும் மோகன்ராஜை ஆதரித்து, பள்ளப்பட்டியில் கமல்ஹாசன் பிரசாரம் மேற்கொண்டார். அப்போது பேசிய அவர், இஸ்லாமியர்கள் அதிகம் பேர் இருக்கும் இடம் என்பதால் சொல்லவில்லை; காந்தி சிலைக்கு முன் சொல்கிறேன்.. சுதந்திர இந்தியாவின் முதல் தீவிரவாதி ஒரு இந்து அவர் பெயர் கோட்சே என்றார். மேலும் காந்தியின் மானசீக கொள்ளுப் பேரனாக, அந்த கொலைக்கு கேள்வி கேட்க வந்திருப்பதாக தெரிவித்தார்.
சமரச இந்தியா மற்றும் சமமான இந்தியாவுக்கு எதிரான போக்கு காந்தி கொலையிலிருந்தே தொடங்குவதாக கமல் குறிப்பிட்டார். இந்த பேச்சு தற்போது சர்ச்சையை கிளப்பியுள்ளது. பாஜக தரப்பில் இருந்து கடும் கண்டனங்கள் எழுந்துள்ளன. இதனால், தனது பிரசாரத்தை கமல்ஹாசன் ரத்து செய்துள்ளார்.
இந்நிலையில், தமிழக பால்வளத்துறை அமைச்சர் ராஜேந்திர பாலாஜி தூத்துக்குடியில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில், கமல்ஹாசனின் நாக்கை அறுக்க வேண்டும்.
அவருக்கு தற்போது சனி இருக்கிறது. தீவிரவாத்துக்கு இந்து, இஸ்லாம், கிறிஸ்துவம் என்று மதம் கிடையாது. அவர்களை தீவிரவாதிகள் என்று தான் சொல்ல வேண்டும். சிறுபான்மையினர் வாக்கை பெறுவதற்காக இவ்வாறு பேசும் கமல்ஹாசனின் நாக்கை ஒருநாள் அறுக்கப்போகிறார்கள். கமல்ஹாசன் வாயில் இருந்து வருவது அனைத்தும் விஷமாக உள்ளது.
கமல்ஹாசன் விஷத்தை கக்குகிறார். அதனால், வன்முறையை விதைக்கும் கமல்ஹாசனின் கட்சியை தடை செய்ய வேண்டும். கமல்ஹாசன் மீது தேர்தல் ஆணையம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.
இது தொடர்பாக தமிழிசை சவுந்தரராஜன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது, ’மகாத்மா காந்தியின் படுகொலை நாடே பதறிய ஒன்று, அதை எந்த விதத்திலும் நியாயப்படுத்த முடியாது. அதனால், அந்த மாபாதக செயலை செய்த கோட்சே தூக்கிலிடப்பட்டான்.
ஆனால் இன்று இஸ்லாமியர்கள் அதிகம் வாழும் பகுதியில் ‘இந்து தீவிரவாதம்’ என்ற வார்த்தையை பயன்படுத்தியது மட்டுமல்லாமல், சுதந்திர இந்தியாவின் முதல் தீவிரவாதம் இந்து தீவிரவாதம் என்று கமலஹாசன் பேசியிருக்கிறார். இது வன்மையாக கண்டிக்கத்தக்கது.
புதிய அரசியலை முன்னெடுக்கிறோம் என்று சொல்லும் கமலஹாசன் பழைய, விஷமத்தனமான, விஷம் பொருந்திய பிரித்தாளும் ஓட்டு அரசியிலில் தானும் கீழ்த்தரமாகத்தான் நடந்து கொள்வேன் என்பதை அப்பட்டமாக வெளிப்படுத்தி இருக்கிறார்.
வாழ்க்கையில் ஒழுக்கத்தைக் கடைபிடித்தவர் மகாத்மாகாந்தி. வாழ்வில் எந்த ஒழுக்கத்தையும் கடைபிடிக்காதவர் கமல், தான் காந்தியின் கொள்ளுப் பேரன் என்று சொல்ல எந்த தகுதியும் இல்லாதவர். இப்படி எந்த தகுதியும் இல்லாமல் அரசியலில் நுழைந்து ஏதாவது ஒரு வகையில் மக்களை கவர வேண்டும் என்று பேசுவது கண்டிக்கத்தக்கது. அதுவும் மதக்கலவரத்தையும், பதற்றத்தையும் ஏறப்டுத்தும் அளவிறகு பேசியிருப்பது வன்மையாகக் கண்டிக்கத்தக்கது.
பக்கத்து நாட்டில் அதிபயங்கரமான குண்டு வெடிப்பு நடந்து அதில் ஈடுபட்டவர்கள் இஸலாமியர்கள் என்று தெரிந்தும் கண்டிக்காதவர்கள், கருத்து கூட சொல்லாதவர்கள், இஸ்லாமிய தீவிரவாதம் என்று சொல்லும் துணிச்சல் அற்றவர்கள், இத்தகைய கொடூரச் செயல்களை உலகமெங்கும் ஒரு மதத்தினரால் அரங்கேறிய போது தீவிரவாதத்திறகு மதம் கிடையாது என்று சப்பை கட்டு கட்டியவர்கள், இன்று செத்து மடிந்த ஒரு பிரச்சினையை அதுவும் ‘இந்து’ என்ற அடைமொழியோடு சொல்லி இருப்பதை எப்படி ஏற்றுக் கொள்ள முடியும்.
பிரச்சாரக் கூட்டங்களில் பதற்றமான கருத்துக்கள் கூறப்படுகிறதா என்பதைக் கண்டறிய தேர்தல் ஆணையம் வீடியோ பதிவெடுக்கிறார்கள். இது எதற்கு? இத்தகைய கருத்துக்களைக் கூறினால் நடவடிக்கை எடுப்பதற்கு. இத்தகைய கருத்துக்கள் மீது தேர்தல் ஆணையம் கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும். வட இந்தியாவில் சிலரின் சர்ச்சைக்குரிய கருத்துக்களால் அவர்கள் பிரச்சாரம் செய்வதே தடை செய்யப்பட்டிருக்கிறது.இஸ்லாமியர்கள் அதிகம் வாழும் பகுதிக்கு சென்று இந்து தீவிரவாதம் என்று பேசும் கமலின் கருத்து விஷமத்தனமான, உள்நோக்கம் கொண்டது. ஆக இத்தகைய நோக்குடையவர்களின் பிரச்சாரம் தடை செய்யப்பட வேண்டும். பதற்றத்தை ஏறப்டுத்தும் சூழலை ஏறப்படுத்த முயற்சிப்பதால், காவல்துறை இவர் மீது சட்டரீதியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்.
தன் ஒரு படத்திற்கு தடை ஏறப்ட்டதால் நாட்டை விட்டே வெளியேறுவேன் என்று தன் விஸ்வரூபத்தைக் காட்டிய கமல், இன்று நாட்டைப் பற்றியும், காந்தியைப் பற்றியும், நாட்டுப் பற்று பற்றியும் பேசுவதும் அப்பட்டமான அரசியல் நடிப்பு. திரை நடிப்பு முடிந்து வாய்ப்பு கிடைக்காத கமல் அரசியல் வாய்ப்புக்காக கண்டபடி பேசுவது கண்டிக்கத்தக்கது’ என்றும் தமிழிசை சவுந்தரராஜன் தெரிவித்துள்ளார்.
இரண்டு நாட்கள் பிரச்சாரத்தை ரத்து செய்திருந்த கமல்ஹாசன் திருப்பரங்குன்றம் வேட்பாளர் சக்திவேலை ஆதரித்து தோப்பூர் பகுதியில் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.
அப்போது அவர் பேசுகையில், அரவக்குறிச்சியில் நான் பேசியதற்காக என்மீது கோபப்படுகிறார்கள். நான் கூறியது சரித்திர உண்மை. உண்மை சில நேரங்களில் கசக்கத் தான் செய்யும். கசப்பு தான் நல்ல மருந்து. என் வீட்டில் உள்ளவர்களும் இந்துக்கள் தான் அவர்கள் மனம் புண்படும்படி நான் பேசமாட்டேன். நான் கலகத்தை விளைவிக்கிறேன் என்று கூறுவது என் உள்மனதை புண்படுத்துகிறது.
நாங்கள் தீவிர அரசியலில் ஈடுபட்டுள்ளோம், பிரிவினையை ஏற்படுத்த மாட்டோம். நான் பேசியதை புரியாமல் கோபப்படுபவர்கள் என்னுடைய ஹேராம் படத்தை பார்த்துவிட்டு பேசுங்கள்.
நான் நினைத்திருந்தால் பயங்கரவாதி என்றோ, கொலைகாரன் என்றோ கூறியிருக்கலாம். மதச் செருக்கு, சாதிச் செருங்கும் எங்கும் நிற்காது என்று விளக்கம் அளித்துள்ளார்.
மேலும் அவர் பேசுகையில், இந்த அரசு வீழும். வீழ்த்தப்பட வேண்டும். முறைப்படி இந்த அரசை வீழ்த்துவோம் என்று தெரிவித்துள்ளார்.
இவ்விவகாரம் தொடர்பாக கமல்ஹாசனுக்கு எதிராக அரவக்குறிச்சி காவல் நிலையத்தில் இரண்டு பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இதனைத் தொடர்ந்து இந்த வழக்கில் முன்ஜாமீன் கோரி கமல்ஹாசன் தரப்பில் உயர்நீதிமன்ற மதுரை கிளையில் மனுத்தாக்கல் செய்யப்பட்டது.
இந்த மனு மீதான விசாரணையின் போது, கமல்ஹாசனின் பரப்புரை வீடியோ பதிவு நீதிபதியிடம் காண்பிக்கப்பட்டது. அதற்கு காந்தியை சுட்டுக் கொன்ற கோட்சே ஒரு இந்து என்பதை தவிர வேறு அடையாளம் இல்லையா என்று நீதிபதிகள் கேள்வி எழுப்பினர்?
அதற்கு கமல் தரப்பில் பதில் அளிக்கையில், கோட்சே ஒரு இந்து என்று மட்டும் தான் நான் தெரிவித்தேன். இந்துகள், இஸ்லாமியர்கள் இடையே மோதல் ஏற்படும் வகையில் நான் எதையும் கூறவில்லை. பதற்றத்தை ஏற்படுத்தும் வகையில், எனது கருத்து திரித்து வெளியிடப்படுகிறது என்று விளக்கம் அளிக்கப்பட்டது.
இந்த வழக்கில் கமல்ஹாசன் கைது செய்யப்பட வாய்ப்பு உள்ளதா என்று கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு கமல்ஹாசனிடம் உரிய விளக்கம் கேட்கப்படும். விளக்கத்தில் திருப்தி இல்லாத பட்சத்தில் கைது நடவடிக்கைக்கு வாய்ப்பு உள்ளதாக தெரிவித்தனர். இதனைத் தொடர்ந்து வழக்கின் தீர்ப்பு தேதி குறிப்பிடாமல் ஒத்தி வைக்கப்பட்டது.
மேலும், தேர்தல் முடிவடையும் வரை ஊடகங்கள், அரசியல் கட்சிகள் பொது நலன் கருதி கமல்ஹாசனின் கருத்து குறித்து விவாதம் நடத்துவதை தவிர்க்க வேண்டும் என்று நீதிபதி அறிவுறுத்தி உள்ளார்.
-தே.முத்துப்பாண்டி
All news are super