கந்த சஷ்டி கவச பாடலை கருப்பர் கூட்டம் என்ற யூடியூப் சேனலில் ஆபாசமாக சித்தரித்து வெளியிட்ட விவகாரம் தொடர்பாக பாஜக உள்ளிட்ட இந்து அமைப்புகள் எதிர்ப்பு தெரிவித்து தமிழகம் முழுவதும் காவல் நிலையங்களில் புகார் கொடுத்தனர்.
இதுசம்பந்தமாக செந்தில்வாசன், சுரேந்திரன் ஆகியோர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைத்தனர். அதேபோல் முகமது நபி குறித்து சர்ச்சைக்குரிய கருத்தை சமூக வலைதளத்தில் வெளியிட்ட கோபால் என்பவர் மீதும் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. கருப்பர் கூட்டம் யூடியூப் சேனலில் இந்துக்களுக்கு எதிரான கருத்துக்களை தொடர்ந்து பரப்பிய அதன் நிர்வாகிகளுக்கு பின்புலமாக திமுக செயல்பட்டதாகவும் திமுகவின் இணையதள நிர்வாகியுடன் கருப்பர் கூட்டம் யூடியூப் சேனலின் நிர்வாகி இருக்கும் புகைப்படத்தை சமூக வலைதளங்களில் வெளியிட்டு திமுகவிற்கு எதிரான கருத்துக்களை பாஜகவினரும் இந்து அமைப்புகளும் தொடர்ந்து பரப்பி வந்தனர்.
இந்து கடவுள் முருகனை இழிவு படுத்தி வீடியோ வெளியிட்ட கருப்பர் கூட்டம் யூடியூப் சேனலுக்கு எதிராக திமுக தலைவர் ஸ்டாலின் ஏன் குரல் கொடுக்க வில்லை என உள்ளாட்சித் துறை அமைச்சர் வேலுமணி கேள்வி எழுப்பினார். அதனைத் தொடர்ந்து அதிமுகவினரும் திமுகவிற்கு எதிராக தொடர்ந்து குரல் கொடுத்தனர். அதற்கு திமுக தரப்பில் அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி விளக்கம் கொடுத்தார்.
இதுசம்பந்தமாக முருகனின் அறுபடை வீடுகளில் ஒன்றான பழனி சட்டமன்ற உறுப்பினரும், திமுகவின் திண்டுக்கல் கிழக்கு மாவட்டச் செயலாளருமான இ.பெ.செந்தில்குமாரை தொடர்பு கொண்டு கேட்டபோது, அவர் நம்மிடம் கூறுகையில்,
ஒன்றே குலம் ஒருவனே தேவன் என்ற கொள்கையை உயிர் மூச்சாக கொண்ட பேரறிஞர் அண்ணா, கலைஞர் வழியில் திமுக தலைவர் ஸ்டாலின் சென்று கொண்டு இருக்கிறார். பண்பாடு கலாச்சாரம் என்பது வேறு. மூடநம்பிக்கையை எதிர்ப்பது என்பது வேறு. வரலாற்றுச் சிறப்பு மிக்க திருவாரூர் தேரை ஓட வைத்தவர் முன்னாள் முதல்வர் கலைஞர் என்பது உலகமே அறிந்த ஒன்று.
இறை நம்பிக்கையுடையவர்களை புண்படுத்தும்படியும், தமிழ் கடவுள் முருகனை இழிவு படுத்தும் விதமாகவும் வீடியோ வெளியிட்ட கருப்பர் கூட்டம் யூடியூப் சேனல் நிர்வாகிகளின் செயல் கடும் கண்டனத்திற்குரியது.
இத்தனை நாட்களாக இல்லாமல் தேர்தல் நெருங்கும் சூழலில் இந்த இழிவான செயல் யாரால் தூண்டி விடப்பட்டிருக்கும் என்பது விரைவில் மக்களுக்கு தெரியவரும். திமுக என்றுமே எந்த மதத்திற்கும் எதிரான இயக்கம் அல்ல. முருகன் குடிகொண்டு இருக்கும் பழனியின் சட்டமன்ற உறுப்பினர் என்ற பொறுப்புணர்வோடு கருப்பர் கூட்டத்தின் இச்செயலை வன்மையாக கண்டிக்கிறேன் என்று கூறினார்.