டெண்டர் வழிகாட்டு குழு அமைக்கப்பட்டதா? தமிழக அரசுக்கு உயர்நீதிமன்றம் சரமாரி கேள்வி
நெடுஞ்சாலைத்துறை டெண்டர் தொடர்பான வழிகாட்டு குழு குறித்தும், தென்காசி-கொல்லம் சாலை டெண்டரை ரத்து செய்தது குறித்தும் முழுமையான அறிக்கையை நீதிமன்றத்தில் தாக்கல் செய்ய வேண்டும் என்றும் லஞ்ச ஒழிப்புத்துறைக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
திமுக அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி, சென்னை உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ள மனுவில், தமிழக நெடுஞ்சாலைத் துறையில் பல்வேறு கோட்ட சாலை பணிகளுக்கான ஒப்பந்தங்களை முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அதிகார துஷ்பிரயோகம் செய்து சம்பந்தி பி.சுப்பிரமணியம் மற்றும் நெருங்கிய உறவினரான சந்திரகாந்த் ராமலிங்கம், பினாமி எஸ்பிகே நாகராஜன் செய்யாத்துரை மற்றும் சேகர் ரெட்டி ஆகியோருக்கு வழங்கியுள்ளார். இந்த ஒப்பந்தங்களுக்கு ரூ.4833.57 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது.
இதில், முதல்வரின் துணையுடன் மிகப்பெரிய ஊழல் நடந்துள்ளது. எனது புகார் மீது லஞ்ச ஒழிப்புத்துறை வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்துமாறு உத்தரவிட வேண்டும் என்று கூறப்பட்டிருந்தது. இந்த வழக்கு நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, அட்வகேட் ஜெனரல் விஜய் நாராயண் ஆஜராகி, திமுக கொடுத்த புகார் மீதான ஆரம்பகட்ட விசாரணை அறிக்கையை தாக்கல் செய்தார். அப்போது நீதிபதி அவரிடம், டெண்டர்களை முடிவு செய்வதற்கான வழிகாட்டு குழு அமைக்கப்பட்டுள்ளதா’ என்று கேட்டார். அதற்கு அட்வகேட் ஜெனரல் தெரியவில்லை என்றார். உடனே நீதிபதி, ‘டெண்டர் நடைமுறைகளை இறுதி செய்யும் குழுவே இன்னும் அமைக்கப்படவில்லை. எப்படி டெண்டரை முடிவு செய்ய முடியும். குழு அமைக்கப்பட்டுள்ளதா? குழுவில் யார் யாரெல்லாம் உறுப்பினராக உள்ளனர்? இது சிவில் வழக்கு தான் என்று சொல்ல வருகிறீர்களா? ஒரே டெண்டரில் எத்தனை பேர் பங்கேற்றனர் என்று நீதிபதி கேட்டார். அதற்கு அட்வகேட் ஜெனரல், ‘ஒரே ஒருவர் மட்டுமே டெண்டரில் கலந்து கொண்டார்’. மேலும், தென்காசி-கொல்லம் சாலை டெண்டர் ரத்து செய்யப்பட்டது’ என்றும், அட்வகேட் ஜெனரல் தெரிவித்தார்.
இதை கேட்ட நீதிபதி, ‘தென்காசி- கொல்லம் சாலை டெண்டர் எதற்காக ரத்து செய்யப்பட்டுள்ளது. டெண்டர் வழிகாட்டு குழு, டெண்டர் ஒதுக்கும் குழு ஆகிய குழுக்கள் எப்போது தொடங்கப்பட்டன?. குழுக்களில் இடம்பெற்றுள்ள உறுப்பினர்கள் யார்?
இந்த குழுக்கள் இதுவரை யாருக்கெல்லாம் டெண்டர்களை வழங்கியுள்ளது. எப்போது டெண்டர்கள் வழங்கப்பட்டன? என்பது உள்ளிட்ட அனைத்து விபரங்களும் அடங்கிய அறிக்கையை நீதிமன்றத்தில் தாக்கல் செய்ய வேண்டும். அதுவரை நீங்கள் தாக்கல் செய்த விசாரணை அறிக்கையை இந்த நீதிமன்றம் கணக்கில் எடுத்து கொள்ளாது’ என்று உத்தரவிட்டு விசாரணையை வரும் 26ம் தேதிக்குத் தள்ளி வைத்தார்.