கேந்திரிய வித்யாலயா பள்ளியில் 2 ஏழைச் சிறுவர்களைச் சேர்த்த ஆட்சியர்!
போளுர் பகுதியை சேர்ந்த இரண்டு இருளர் இன சிறுவர்களை திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் கந்தசாமி கேந்திரிய வித்யாலயா பள்ளியில் சேர்த்தார். பன்னிரெண்டாம் வகுப்பு வரையலான கட்டணங்களை மாவட்ட ஆட்சியரின் விருப்ப நிதியில் இருந்து செலுத்த ஆணையிட்டார்.
திருவண்ணாமலை மாவட்டத்தில் பழங்குடியின இனத்தை சேர்ந்த இருளர் சமூகத்தினர் போளுர், வந்தவாசி, செய்யார், அனக்காவூர், வெம்பாக்கம், சேத்துப்பட்டு, செங்கம், ஆகிய பகுதிகளில் அதிகளவில் வசித்து வருகின்றனர். இவர்கள் மரம் வெட்டுவது கூலி வேலை செய்வது பேப்பர் பொறுக்குவது போன்ற வேலைகளை செய்து குறைந்த வருமானத்தில் குடும்பத்தினை நடத்தி வருகிறார்கள்.
கடந்த மாதம் போளுர் பகுதியில் வெண்மணியை சேர்ந்த முருகன் மற்றும் எல்லம்மாள் ஆகியோர் தங்கள் குழந்தைகளுடன் காகிதங்கள் மற்றும் கண்ணாடி பாட்டில்கள் சேகரித்துக்கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த சைல்டு லைன் அமைப்பினர் அவர்களிடம் விசாரணை நடத்தினர். தங்களுக்கு இரண்டு ஆண் குழந்தைகளும் இரண்டு பெண் குழந்தைகளும் இருப்பதாகவும் தாங்கள் பிழைப்பிற்காக காகிதங்கள் மற்றும் கண்ணாடி பாட்டில்கள் சேகரித்து காயலான் கடையில் போட்டு அதிலிருந்து கிடைக்கும் பணத்தினை கொண்டு குடும்பம் நடத்தி வருவதாகவும் தெரிவித்தார். சைல்ட் லைன் அமைப்பினர் அவர்களை மீட்டு அவர்களின் குழந்தைகளை திருவண்ணாமலை டெரி டேஸ் ஹோம்ஸ் கேர் நிறுவனத்தின் குழந்தைகள் காப்பகத்தில் சேர்த்தனர். இந்த தகவல் திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் கந்தசாமி அவர்களுக்கு தெரிவிக்கபட்டது.
போளுர் பகுதியில் இருந்து மீட்ட முருகன் எல்லம்மாள் தம்பதியினரின் மகள் வனிதா வயது 6 மற்றும் அடுத்த எட்டிவாடி கிராமத்தில் இருந்து மூன்றாண்டுக்கு முன்னர் மீட்ட சரவணன் வயது 6 ஆகிய இருவரையும் திருவண்ணாமலை அருகே கனந்தம்பூண்டியில் உள்ள கேந்திரிய வித்யாலயா பள்ளியில் ஒன்றாம் வகுப்பு சேர்த்தார் அவர்கள் 1 முதல் 12 ஆம் வகுப்பு வரை அந்த பள்ளியில் படிப்பதற்கான மொத்த பள்ளி கட்டணங்களையும் மாவட்ட ஆட்சியரின் விருப்ப நிதியிலிருந்து செலுத்த ஆணையிட்டார்.
– ஆ.கன்னியப்பன்