தலைமைச் செயலாளர், உள்துறை செயலாளருக்கு எதிராக நீதிமன்ற அவமதிப்பு வழக்கு
சிலை கடத்தல் வழக்குகளை விசாரித்து வரும் சிறப்பு அதிகாரி பொன் மாணிக்கவேல், தலைமைச் செயலாளர், உள்துறை செயலாளர், டி.ஜி.பி உள்ளிட்டோருக்கு எதிராக நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தாக்கல் செய்துள்ளார்.
தமிழகத்தில் சிலை கடத்தல் தொடர்பான வழக்குகளை விசாரித்து வரும் சிறப்பு அதிகாரி பொன்.மாணிக்கவேல், கடந்த இரண்டு ஆண்டுகளாக சிலை கடத்தல் தடுப்பு பிரிவுக்கு தேவையான வசதிகளை தமிழக அரசு செய்து கொடுக்கவில்லை என நீதிமன்ற அவமதிப்பு மனுத்தாக்கல் செய்துள்ளார்.
நீதிமன்ற அனுமதி இன்றி எந்த முடிவும் எடுக்கக்கூடாது என உத்தரவிட்டுள்ள நிலையில், எஸ்.பி. பதவி உருவாக்கப்பட்டுள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார். அந்த பதவிக்கு நியமிக்கப்பட்டுள்ள ராஜேஸ்வரி மற்றும் டிஜிபி அபய்குமார் சிங்கிடம், வழக்கு குறித்த விவரங்களை தெரிவிக்க தனக்கு கீழ் பணியாற்றுபவர்களை அறிவுறுத்தியுள்ளதாகவும் மனுவில் குறிப்பிட்டுள்ளார்.
அமைச்சர் ஒருவரும், டிஜிபி-யும் விசாரணையில் தலையிடுவதாக தெரிவித்துள்ள அவர், அரசியல் புள்ளிகள், தொழிலதிபர்கள் தொடர்புடைய குறிப்பிட்ட 4 வழக்குகளை தனது கட்டுப்பாட்டில் வைத்துக்கொள்ள கூடுதல் டிஜிபி ஆர்வம் காட்டுவதாகவும் தெரிவித்துள்ளார்.
43 வழக்குகளின் ஆவணங்கள் மாயமாகியுள்ளதாக கண்டறியப் பட்டுள்ளதாகவும், பொன்மாணிக்கவேல் குறிப்பிட்டுள்ளார். இதுதவிர 3 லட்சம் சிலைகள் தொடர்பான ஆய்வுகள் செய்ய வேண்டிய நிலையில், சிலை கடத்தல் தடுப்பு பிரிவுக்குக்கான வசதிகள் செய்து கொடுக்கவில்லை என்றும், திருச்சி சிறப்பு முகாம் அலுவலகத்திற்கு துப்புரவு பணிக்கு கூட நிதி ஒதுக்குவதில்லை எனவும் சுட்டிக்காட்டியுள்ளார்.
சிறப்பு பிரிவுக்கு தேவைப்படும் 8 ஆய்வாளர்கள், 47 உதவி ஆய்வாளர்கள் மற்றும் அவர்களுக்கான வாகன வசதி, உட்கட்டமைப்பு வசதி என எதுவும் செய்து கொடுக்காமல், தொடர்ந்து அவமதிப்பில் ஈடுபடுவதாக குறிப்பிட்டுள்ளார்.
தான் சிறப்பாக பணியாற்றுவதை தடுக்கவே, நீதிமன்ற உத்தரவை அரசு அதிகாரிகள் நிறைவேற்றாமல் தொடர்ந்து அவமதித்து வருவதாக கூறியுள்ள அவர், தலைமை செயலாளர் கிரிஜா வைத்தியநாதன், உள்துறை செயலாளர் நிரஞ்சன் மார்டி, டிஜிபி டி.கே.ராஜேந்திரன், சிலை கடத்தல் தடுப்பு பிரிவு கூடுதல் டிஜிபி அபய் குமார் சிங் ஆகியோர் மீது நீதிமன்ற அவமதிப்பு சட்டத்தின் படி நடவடிக்கை எடுக்க வேண்டும் என மனுவில் கோரியுள்ளார்.