தேர்தல் முடிவு வரும் முன்பே எம்.பி.யான ஓபிஎஸ் மகன்
தேர்தல் முடிவே அறிவிக்கப்படாத நிலையில் தேனி பாராளுமன்ற தொகுதி எம்.பி. என்று குறிப்பிட்டு துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்தின் மகன் பெயரை கல்வெட்டில் பொறித்துள்ளது சர்ச்சையைக் கிளப்பியிருக்கிறது.
தேனியில் குச்சனூர் என்ற இடத்தில் சனிஸ்வர பகவான் கோயில் உள்ளது. இந்தக் கோயில் வளாகத்தில் காசி அன்னபூர்ணி ஆலயத்துக்கு கும்பாபிஷேகம் நடந்தது. கும்பாபிஷேகப் பணிகளுக்கு அதிக நன்கொடைகள் அளித்தவர்கள் பட்டியல் கோயில் நிர்வாகம் சார்பில் கல்வெட்டில் பொறிக்கப்பட்டுள்ளது. அதில் ஒரு கல்வெட்டில் மூன்று முக்கியமான பெயர்கள் ஹைலைட் செய்யப்பட்டுள்ளன.
அதில் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்தின் பெயரும், தேனி தொகுதியில் அதிமுக சார்பில் போட்டியிட்ட அவருடைய மகன் ஓ.பி.ரவீந்திரநாத் குமாரை தேனி பாராளுமன்ற உறுப்பினர் என்று குறிப்பிட்டு கல்வெட்டு பொறிக்கப்பட்டுள்ளது. மூன்றாவதாக ஓ.பி.ஜெயபிரதீப் குமார் என்ற பெயரும் பொறிக்கப்பட்டுள்ளது.
இதில் தேர்தல் முடிவு வருவதற்கு முன்பே தேனி நாடாளுமன்ற உறுப்பினர் என்று ரவீந்திரநாத் குமாரை குறிப்பிட்டுள்ளது சர்ச்சையாகி உள்ளது. தேனி நாடாளுமன்றத் தேர்தலில் பண வினியோகம் அமோகமாக நடந்ததாக எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டிவந்தன. தேர்தல் ஆணையம் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்றும் எதிர்க்கட்சிகள் புகார் தெரிவித்தன. தேர்தல் முடிந்த பிறகு கோவையிலிருந்து வாக்குப்பதிவு இயந்திரங்கள் தேனிக்கு கொண்டு வரப்பட்டது சர்ச்சையைக் கிளப்பியது.
தற்போது திருவள்ளூரிலிருந்து வாக்குப்பதிவு இயந்திரங்களைக் கொண்டு வந்ததும் சர்ச்சையாகி இருக்கிறது. இந்நிலையில் தேர்தல் முடிவுகள் அறிவிக்க இன்னும் ஒரு வாரம் உள்ள நிலையில் தேர்தல் விதிமுறைகளை மீறி குச்சனூர் சனீஸ்வரன் கோயில் கல்வெட்டில் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்தின் மகனை தேனி பாராளுமன்ற உறுப்பினர் எனக் குறிப்பிட்டிருப்பது புதிய சர்ச்சையை ஏற்படுத்தியிருக்கிறது.
இதையடுத்து ரவீந்திரநாத் குமாரின் பெயருடன் ஓ.பி.எஸ். பெயரையும் வெட்டி எடுத்துவிட்டு கோவில் நிர்வாகம் கல்வெட்டை வைத்துள்ளது. தேனி நாடாளுமன்ற வேட்பாளர் என்பதற்கு பதிலாக, தேனி நாடாளுமன்ற உறுப்பினர் என தவறுதலாக இடம்பெற்று விட்டதாக கோவில் நிர்வாகி வேல்முருகன் கூறியிருந்தார்.
இதனிடையே,கல்வெட்டில் தமது பெயருக்கு முன்பு நாடாளுமன்ற உறுப்பினர் என பொறிக்கப்பட்டதற்கு ரவீந்திரநாத் குமார் கண்டனம் தெரிவித்துள்ளார். தேர்தல் முடிவுகள் வெளிவராத நிலையில், இதுபோன்ற செயல்களில் ஈடுபடுவது தவறானது என்றும் தமது பெயருக்கு களங்கம் ஏற்படுத்தும் வகையில் செயல்பட்டவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் ரவீந்திரநாத் குறிப்பிட்டிருந்தார்.
ரவீந்திரநாத்தின் முகவரும் அதிமுக வழக்கறிஞர் அணியை சேர்ந்தவருமான சந்திரசேகர் அளித்த புகாரின்பேரில், கோவில் நிர்வாகி வேல்முருகன் மீது 3 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து சின்னமனூர் போலீசார் கைது செய்துள்ளனர்.கோவில் நிர்வாகியும், முன்னாள் காவலருமான வேல்முருகன், ஜெயலலிதா மறைந்தபோது காவல் சீருடையுடன் மொட்டை அடித்து பரபரப்பை ஏற்படுத்தியவர். அதோடு, காவிரி விவகாரத்தில் தேனி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் அவர் உண்ணாவிரத போராட்டமும் நடத்தினார். இறுதியாக, ஓடைபட்டி காவல்நிலையத்தில் பணியாற்றியபோது, காவல்துறை கட்டுப்பாட்டை மீறி விட்டதாக கூறி வேல்முருகனுக்கு கட்டாய விருப்ப ஓய்வு அளிக்கப்பட்டது.