புழல் ஏரியிலிருந்து சென்னைக்கு வழங்கப்படும் குடிநீர் நிறுத்தம்?
சென்னையின் குடிநீர் ஆதாரமான புழல் ஏரி இன்னும் இரு வாரங்களில் வறண்ட நிலைக்கு செல்ல உள்ளது. வடகிழக்குப் பருவமழை பொய்த்துபோனதால் சென்னையில் எதிர்பார்த்த அளவிற்கு மழை இல்லை. சென்னை குடிநீருக்கு ஆதாரமான ஏரிகள் எல்லாம் காய்ந்து மேய்ச்சல் நிலங்களாக மாறிவிட்டன. ஃபோனி புயலால் மழை பெய்து தண்ணீர் பிரச்னையிலிருந்து சென்னை தப்பிக்கும் என்று எதிர்ப்பார்க்கப்பட்ட நிலையில் அதுவும் ஏமாற்றியது.
மேலும் நிலத்தடி நீர்மட்டம் அடிபாதாளத்துக்கு சென்றுவிட்டது. தற்போது சென்னையே தண்ணீர் பஞ்சத்தில் சிக்கியுள்ளது. குறைந்தது ஜூலை வரையாவது கோடை நிலவும் என்பதால், சமாளிப்பது எப்படி என நினைத்து சென்னை மக்கள் விழி பிதுங்குகின்றனர்.
இந்நிலையில் சென்னையின் குடிநீர் ஆதாரமாக விளங்கும் பூண்டி ஏரி இன்னும் இரு வாரங்களில் வறட்சி ஏற்படுட்டு, சென்னைக்கு குடிநீர் நிறுத்தப்பட வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது. சோழவரம், செம்பரம்பாக்கம் ஏரிகள் முழுவதுமாக வறண்ட நிலையில், தற்போதைய சென்னையின் ஒரே ஆதாரமாக பார்க்கப்படுவது புழல் ஏரி மட்டும்தான். அதுவும் தற்போது வறண்டு 45 மில்லியன் கன அடி தண்ணீர் மட்டுமே உள்ளது.
புழல் ஏரியிலிருந்து மின் மோட்டார் மூலம் ராட்சத குழாய்கள் வழியாக விநாடிக்கு 25 கன அடி என்ற விகிதத்தில், நாளொன்றுக்கு 75 மில்லியன் லிட்டர் தண்ணீர் மட்டுமே சென்னைக்கு வழங்கப்படுகிறது. சென்னையில் நாளொன்றுக்கு 800 மில்லியன் லிட்டர் தண்ணீர் தேவைப்படும் நிலையில், இன்னும் இரு வாரங்களில் புழல் ஏரி முழுமையான வறட்சியை எட்டும் சூழல் ஏற்பட்டுள்ளது.
இதனால் ராட்சத குழாய்கள் மூலம் சென்னைக்கு அனுப்பப்படும் தண்ணீரும் நிறுத்தப்பட வாய்ப்பு இருப்பதால், அடுத்தக்கட்டமாக சென்னையின் குடிநீர் தேவையை அதிகாரிகள் எப்படி சமாளிக்கப்போகிறார்கள் என்பது கேள்விக்குறியாகவே உள்ளது.
சட்டவிரோதமாக நிலத்தடி நீர் உறிஞ்சப்படுவதை தடுக்காத பொதுப்பணித்துறை செயலாளர் உள்ளிட்டோர் மீது சென்னை உயர் நீதிமன்றம் தாமாக முன்வந்து நீதிமன்ற அவமதிப்பு வழக்கை பதிவு செய்துள்ளது.
நிலத்தடி நீர் பாதுகாப்பு குறித்து கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் 3 ஆம் தேதி பிறப்பிக்கப்பட்ட தீர்ப்பை பின்பற்றவில்லை என நீதிபதி எஸ்.எம்.சுப்ரமணியம் தானாக முன்வந்து வழக்கு தொடர்ந்தார்.
தண்ணீர் பஞ்சத்தினால் மக்கள் கடுமையாக அவமதிப்படுவதாகவும், மறுபுறம் சட்டவிரோதமாக நிலத்தடி நீர் திருடப்பட்டு, அதிக விலைக்கு விற்பனை செய்யப்படுவதாகவும், சட்டவிரோதமாக நிலத்தடி நீர் உறிஞ்சப்படுவது குறித்து பொதுமக்கள் புகார் செய்தும் அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கவில்லை என்று விரிவான செய்திகளை பத்திரிகைகள் மற்றும் ஒரு தனியார் டிவி சேனல்கள் மூலம் கண்டறிந்த நீதிபதி இந்த வழக்கினை தொடர்ந்தார்.
இதில் தமிழக பொதுப்பணித்துறை செயலாளர், தமிழ்நாடு மாசுக்கட்டுப்பாட்டு வாரிய தலைவர், மத்திய நிலத்தடி நீர் வாரியத்தின் மண்டல இயக்குனர், பொதுப்பணித்துறை தலைமை என்ஜினீயர் ஆகியோர் மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடந்துள்ளார்.
இந்த வழக்கு விசாரணையில், நிலத்தடி நீர் உறிஞ்சப்படுவதை ஒழுங்குப்படுத்த எடுக்கப்பட்ட நடவடிக்கை என்ன? தனியார் நிலத்தில் அனுமதியின்றி சட்டவிரோதமாக நிலத்தடி நீர் உறிஞ்சப்படுவதை தடுக்க என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டது? ஏரி, குளம், விவசாய நிலம், தனியார் நிலம் ஆகியவற்றில் இருந்து சட்டவிரோதமாக நிலத்தடி நீர் உறிஞ்சப்படுவது குறித்து பொதுமக்கள் கொடுத்த புகாரின் அடிப்படையில் என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டது?
விவசாயத்துக்காக இலவசமாக கொடுக்கப்படும் மின்சாரத்தை பயன்படுத்தி நிலத்தடி நீரை உறிஞ்சி, அதை அதிக விலைக்கு விற்பனை செய்பவர்கள் மீது என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டது? முறையான அனுமதியின்றி ஆழ்துளை கிணறுகள் அமைத்து நிலத்தடி நீரை உறிஞ்சுபவர்கள் மீது என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது? என சரமாரி கேள்விகளை நீதிமன்றம் முன்வைத்தது.
மேலும் கடந்த கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் 3 ஆம் தேதி அன்று பிறப்பித்த உத்தரவை அமல்படுத்தாததற்காக பொதுப்பணி துறை செயலாளர் உள்ளிட்ட அதிகாரிகள் மீது நீதிமன்ற அவமதிப்புச் சட்டத்தின் கீழ் ஏன் தண்டனை வழங்கக்கூடாது? போன்ற கேள்விகளுக்கு பதிலளிக்குமாறு உத்தரவிட்டு மே 20ஆம் தேதி வழக்கை சென்னை உயர்நீதிமன்றம் ஒத்திவைத்துள்ளது.
இந்நிலையில் தமிழகத்தில் நிலவும் தண்ணீர் தட்டுப்பாட்டை போக்க உடனடி நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகவும், மாவட்டங்கள் தோறும் உரிய நிதி ஒதுக்கப்பட்டுள்ளதாகவும் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி தெரிவித்துள்ளார்.
மதுரை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், பருவ மழை சரியாக பெய்யாததாலேயே கடுமையான வறட்சியால் குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாகவும், தேர்தலுக்கு முன்னரே இது குறித்து நடவடிக்கை எடுக்க துறை சார்ந்த அதிகாரிகளுக்கு அறிவுரைகள் வழங்கப்பட்டிருப்பதாகவும் தெரிவித்தார்.
அண்ணா பல்கலை கழகத்தில் அரசின் தலையீடு இருப்பதாக துணைவேந்தர் சுரப்பா வைத்துள்ள குற்றச்சாட்டு தவறானது என முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கூறினார். தேர்தல் சமயத்தில் மத உணர்வுகளை தூண்டும் வகையில் பேசுபவர்கள் மீது தேர்தல் ஆணையம் தான் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் தெரிவித்தார்.
இந்நிலையில் சென்னையின் பல இடங்களில் நிலத்தடி நீரின் அளவு குறைந்து வருகிறது. இன்னும் சில இடங்களில் அதளபாதாளத்திற்கு சென்றுவிட்டது. நகரத்தில் வசிக்கும் பலரும் மெட்ரோ நீரையே நம்பியுள்ளனர். ஆனால் அது தொடர்ந்து கிடைப்பதிலும் சிக்கல் நீடிக்கிறது.
இதை களையும் நோக்கில் மெட்ரோ தண்ணீரை ஆன்லைனில் முன்பதிவு செய்து பெற்று கொள்ளும் வசதி நடைமுறையில் உள்ளது. அதன்படி, மெட்ரோ நீர் தேவைப்படும் மக்கள் https://chennaimetrowater.tn.gov.in/ என்ற இணையத்தளத்தில் சென்று முன்பதிவு செய்து கொள்ளலாம்.
அந்த இணையதளத்தின் முகப்பு பக்கத்தில் Book a Water tanker என்று இருக்கும் ஆப்ஷனை சொடுக்க வேண்டும். பிறகு அதன் பக்கத்தில் முகவரி, தேவைப்படும் நீரின் கொள்ளவு உள்ளிட்ட விவரங்களை வழங்க வேண்டும்.
அதை தொடர்ந்து OTP என்ற ஒருமுறை மட்டுமே பயன்படுத்தக்கூடிய கடவு எண் குறுஞ்செய்தியில் கிடைக்கும். அதை கிடைத்தவுடன், மெட்ரோ தண்ணீருக்கான முன்பதிவு உறுதிசெய்யப்படும். முன்பதிவு உறுதிசெய்யப்பட்டவுடன் பயனரின் கைப்பேசிக்கு ரகசிய எண் வரும். மெட்ரோ நீர் பயனரின் வீட்டுக்கு கொண்டுவரப்படும் போது அதை தெரிவிக்க வேண்டும் என சொல்லப்பட்டுள்ளது.
மேலும், 6 ஆயிரம் லிட்டர் தண்ணீருக்கு ரூ. 475 மற்றும் 9 ஆயிரம் லிட்டர் தண்ணீருக்கு ரூ. 700 கட்டணமாக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. தண்ணீர் உடனடியாக தேவைப்படுவோர் மெட்ரோ நீரை தட்கல் முறையிலும் பதிவு செய்யும் வசதி பயன்பாட்டில் உள்ளது.
ஒருவருக்கு மெட்ரோ நீர் கிடைத்தவுடன், அவருக்கு மீண்டும் தண்ணீர் தேவைப்பட்டால் அந்த நபர் ஏழு நாட்களுக்கு பிறகு தான் முன்பதிவு செய்ய முடியும். இதற்கான செயல்பாட்டு முறை எளிதாக இருப்பதாக பயனடைந்தவர்கள் தகவல் தெரிவிக்கின்றனர்.
ஆறு மாநிலங்கள் தண்ணீரை சிக்கனமாக பயன்படுத்த மத்திய அரசு அறிவுறுத்தல்
தண்ணீர் பிரச்னை தலையாய பிரச்னையாக உருவெடுத்துள்ள நிலையில் 6 மாநிலங்கள் தண்ணீரை சிக்கனமாக பயன்படுத்த மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது.
தமிழகத்தில் கடந்தாண்டு பருவமழை போதிய அளவில் பெய்யவில்லை. இதனையடுத்து கோடைக்காலமான தற்போது மிகப் பெரிய அளவில் தண்ணீர் பிரச்னை ஏற்பட்டுள்ளது. மக்கள் குடிநீருக்காக மிகவும் சிரமப்பட்டு வருகின்றனர். தமிழகம் மட்டுமல்லாமல் இந்தியாவின் பல மாநிலங்களிலும் குடிநீர் பிரச்னை ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில் தமிழகம் உள்பட 6 மாநிலங்களுக்கு தண்ணீரை சிக்கனமாக பயன்படுத்த மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது. மகாராஷ்டிரா, கர்நாடகா, குஜராத், ஆந்திரப் பிரதேசம், தெலங்கானா, தமிழ்நாடு உள்ளிட்ட மாநிலங்களில் உள்ள அணைகளின் நீர்மட்டம் மிகவும் குறைந்து வருவதால் தண்ணீர் பஞ்சம் ஏற்படலாம் என எச்சரிக்கை விடுத்துள்ளது. எனவே இத்தகைய மாநிலங்கள் தண்ணீரை சிக்கனமாக பயன்படுத்த மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது.
முன்னதாக வறட்சியால் ஏற்பட்டுள்ள குடிநீர் பற்றாக்குறையை சமாளிக்க, குடிநீரை சிக்கனமாக பயன்படுத்தும்படி தமிழக மக்களுக்கு மாநில அரசு கோரிக்கை விடுத்திருந்ததும் குறிப்பிடத்தக்கது.