பொதுமக்களின் வேதனையையும், கண்ணீரையும் துடைக்க வேண்டிய அரசு, அவர்களின் துயரத்தைப் பயன்படுத்திக் கொள்ளையடித்திருப்பது அம்பலத்துக்கு வந்திருக்கிறது. டெல்டா மாவட்டங்களைப் புரட்டிப்போட்ட கஜா புயலுக்கு நிவாரணப் பொருள்கள் வழங்கும் திட்டத்தில் பேக்கிங் பணியில் பெரும் ஊழல் நடந்திருப்பது வெளிச்சத்துக்கு வந்திருக்கிறது.
கஜா புயலால் பாதிக்கப்பட்ட டெல்டா மாவட்ட மக்களுக்கு தமிழக அரசின் சார்பில் 27 வகையான நிவாரணப் பொருள்கள் வழங்கப்படுகின்றன. இவற்றை பேக்கிங் செய்யும் பணிகளில் தஞ்சாவூர், திருச்சி, விழுப்புரம் உட்பட சில மாவட்டங்களில் உள்ள தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகங்களுக்குச் சொந்தமான கிடங்குகளில் உள்ள கூட்டுறவுத்துறை ஊழியர்கள் ஈடுபட்டனர்.
பேக்கிங் செய்த ஊழியர்களுக்கு, தனியாகச் சம்பளம் எதுவும் தரப்படவில்லை. அரசுக்குக் கூடுதல் செலவுமில்லை. என்ன நடந்ததோ தெரியவில்லை, பேக்கிங் செய்யும் பணி திடீரெனத் தனியாருக்குச் சொந்தமான ‘பேக்கிங் அண்டு மூவர்ஸ்’ நிறுவனத்திடம் ஒப்படைக்கப்பட்டது. சத்துணவு முட்டை ஊழலில் சிக்கிய கிறிஸ்டி குழுமத்திற்குச் சொந்தமான நிறுவனம் இது என்று சொல்லப்படுகிறது.
இது குறித்து நம்மிடம் பேசிய உணவுத்துறை அதிகாரி ஒருவர், “தனியார் நிறுவனத்துக்கு ஒரு பேக்கிங்கிற்கு 15 ரூபாய் கட்டணம் கொடுக்கப்படுகிறது. தஞ்சை, திருவாரூர், நாகப்பட்டினம், புதுக்கோட்டை ஆகிய மாவட்டங்களுக்கு மொத்தம் ஏழு லட்சம் பெட்டிகள் பேக்கிங் செய்யும் பணி அவர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. ஆக, ஒரு கோடி ரூபாய்க்கு மேல் அரசுப் பணம் அவர்களுக்குத் தரப்படுகிறது. அரசுக்கு இது தேவையில்லாத செலவு. இந்த ஒரு கோடி ரூபாயில் இன்னும் சிலருக்கு உதவிகளைச் செய்திருக்கலாம்” என ஆதங்கப்பட்டார்.
கூட்டுறவுத்துறை அலுவலர் ஒருவரிடம் பேசியபோது, ‘‘தஞ்சாவூர்ல விமானப்படைத் தளத்துக்கு எதிரில் உள்ள சந்தானம் கிடங்குல இந்த பேக்கிங் பணி நடந்தது. பேக்கிங் பணியைச் செய்யும் தனியார் நிறுவனம், அந்தப் பணிக்கு நூறு நாள் வேலைத் திட்டத் தொழிலாளர்களையும், கூட்டுறவுத்துறை ஊழியர்களையும்தான் அதிகமாகப் பயன்படுத்துனாங்க. இவங்களுக்கு தனியார் நிறுவனம் தனியாகச் சம்பளம் எதுவும் கொடுக்கவில்லை. நூறு நாள் வேலைத்திட்டத் தொழிலாளர்களையும் வயதான ஆட்களையும் கொத்தடிமைகளைப் போலத் தனியார் பேக்கிங் நிறுவனத்தினர் நடத்தினாங்க. உச்சக்கட்ட வேதனை என்னன்னா, பாதிக்கப்பட்ட மக்களுக்கான நிவாரணப் பொருள்களை, அந்தத் தனியார் நிறுவன ஆட்கள் தங்கள் இஷ்டத்துக்கு எடுத்துக்கிட்டாங்க. அதை, அதிகாரிகள் தட்டிக்கேட்கவில்லை” என நொந்துகொண்டார்.
தஞ்சாவூரில் பேக்கிங் செய்யும் பணி டிசம்பர் 10-ம் தேதி முடிவடைந்த நிலையில், சுமார் 50 லட்சம் ரூபாய்க்கும் அதிகமான நிவாரணப் பொருள்கள் மிச்சம் இருந்தன. இதுகுறித்து நம்மிடம் மிகுந்த வேதனையுடன் பேசிய கூட்டுறவுத்துறை அதிகாரி ஒருவர் “பேக்கிங் முடிஞ்ச பிறகு 42 டன் ரவை, 20 டன் சர்க்கரை உட்பட பல பொருள்கள் மிச்சம் இருந்தன. அவற்றை, தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழக அதிகாரிகள் டிசம்பர் 11-ம் தேதி ஐந்து லாரிகள்ல ஏற்றி திருச்சிக்கு அனுப்பிக் கள்ளத்தனமாக விற்பனை செஞ்சிருக்காங்க. அதுல கிடைச்ச பணத்தை அதிகாரிகள் பங்குப்போட்டுருக்காங்க. எத்தனை குடும்பங்களுக்கு எவ்வளவு பொருள்கள் எனத் துல்லியமாகக் கணக்கீடு செய்துதான், தமிழக அரசால் 27 வகையான பொருள்கள் கொள்முதல் செய்யப்பட்டன. புயல்ல பாதிக்கப்பட்ட மக்களுக்குப் போய்ச்சேர வேண்டிய நிவாரணப் பொருள்களை அபகரிக்க எப்படிதான் இவங்களுக்கு மனசு வந்துச்சோ” என்றார் வேதனையுடன்.
தஞ்சை மாவட்டத்தில் கஜா புயலால் கடுமையாகப் பாதிக்கப்பட்ட பேராவூரணி, ஈச்சங்கொட்டை உள்ளிட்ட பகுதிகளில் பெரும்பாலான ஏழைக் குடும்பங்களுக்கு நிவாரணப் பொருள்கள் கிடைக்கவில்லை. நாகப்பட்டினம், திருவாரூர் ஆகிய மாவட்டங்களிலும் அரசு நிவாரணப் பொருள்கள் வழங்கும் பணி இன்னும் தொடங்கப்படவில்லை.
இக்குற்றச்சாட்டுகள் குறித்து உணவுத்துறை அமைச்சர் காமராஜிடம் கேட்டபோது, ‘‘நிவாரணப் பொருள்களை பேக்கிங் செய்வது மிகப்பெரிய பணி. அரசு ஊழியர்களை மட்டும் இதில் ஈடுபடுத்தினால் விரைவாக முடிக்க முடியாது என்பதால்தான், அவுட் சோர்சிங் முறையில் வெளியாட்களையும் இதில் பயன்படுத்துகிறோம். நிவாரணப் பொருள்கள் பேக்கிங்கின் போது யாரும் எந்த ஒரு பொருளையும் எடுத்துவிட முடியாது. இதில் முறைகேடு நடைபெற வாய்ப்பே இல்லை. இது பல துறைகளைத் சேர்ந்தவர்களின் கூட்டு முயற்சி. எப்பொழுதும் கண்காணிப்பு இருக்கும். பேக்கிங் முடிந்த பிறகு பொருள்கள் மிச்சமிருந்ததாகச் சொல்வதும் பொய்யான குற்றச்சாட்டு. பேக்கிங் பணி முடியவில்லை” என்று தெரிவித்தார்.
இவர் இப்படிச் சொல்கிறார். ஆனால், தஞ்சை மாவட்டம் ஒரத்தநாடு உள்ளிட்ட பகுதிகளில் வழங்கப்பட்ட நிவாரணப் பெட்டியில் பல பொருள்கள் இல்லை எனவும், சில பொருள்கள் மிகவும் மோசமான நிலையில் இருந்ததாகவும் இப்பகுதி மக்கள் குற்றம்சாட்டுகிறார்கள்.