அரசியல்

“எனக்கும் கூட சீட் மறுக்கப்பட்டுள்ளது; நான் அழுதேனா?” : மைத்ரேயனுக்கு ஜெயக்குமார் பதில்

அண்மையில் நடைபெற்ற மக்களவைத் தேர்தலில் போட்டியிடவும் எனக்கு வாய்ப்பு வழங்கப்படாததும், தன்னை மீண்டும் மாநிலங்களவை உறுப்பினராக தேர்வு செய்யாததும் வருத்தம் அளிப்பதாக அதிமுக முன்னாள் எம்.பி. மைத்ரேயன் தெரிவித்துள்ளார்.
அதிமுக உறுப்பினர் மைத்ரேயன், திமுகவின் கனிமொழி உள்பட 5 மாநிலங்களவை உறுப்பினர்களின் பதவிக்காலம் கடந்த வாரம் நிறைவு பெற்றது. அதிமுக உறுப்பினர் மைத்ரேயன் தனது இறுதி வாதங்களை கண்ணீர் மல்க உருக்கமாக பதிவு செய்தார். தன்னை மாநிலங்களவை உறுப்பினராக்கிய முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவுக்கு நன்றி தெரிவித்து விடை பெற்றார்.
இந்நிலையில் ஓய்வு பெற்ற எம்.பி. மைத்ரேயேன் சென்னை மெரினா கடற்கரையில் அமைந்துள்ள முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் நினைவிடத்திற்கு சென்று மரியாதை செலுத்தினார். இதனைத் தொடர்ந்து அவர் செய்தியாளர்களிடம் கூறுகையில், அண்மையில் நடைபெற்ற மக்களவைத் தேர்தலில் தென்சென்னை தொகுதியில் போட்டியிட விரும்பினேன். ஆனால் வாய்ப்பு கிடைக்கவில்லை.

மீண்டும் மாநிலங்களவை உறுப்பினராக தேர்வு செய்யப்படுவேன் என்று எதிர்பார்த்தேன் அதுவும் நிறைவேறவில்லை. இந்த இரு விருப்பங்கள் நிறைவேறாதது நிச்சயம் வருத்தம் அளிக்கிறது. அதிமுகவில் இரட்டை தலைமை குறித்து விவாதங்கள் எழுகின்றன.
ஒரே கொள்கை, நோக்கத்துடன் செயல்படும் பட்சத்தில் இரட்டைத் தலைமையும் சிறப்பாகவே இருக்கும். மேலும் தன்னை மூன்று முறை மாநிலங்களவை உறுப்பினராக்கி அழகு பார்த்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவுக்கு நன்றி தெரிவிப்பதற்காகவே இங்கு வந்துள்ளேன் என்று தெரிவித்துள்ளார்.
தேர்தலில் போட்டியிட வாய்ப்பு மறுக்கப்பட்டால் அழக் கூடாது என அமைச்சர் ஜெயக்குமார் மைத்ரேயனுக்கு பதில் அளித்துள்ளார்.
சென்னை தலைமை செயலகத்தில் 36ஆவது ஜி.எஸ்.டி கவுன்சில் கூட்டம் தொடர்பான ஆலோசனைக்கூட்டம் காணொளி காட்சி மூலம் நடந்தது. இந்த கூட்டத்தில் மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் கலந்து கொண்டார்.
பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் ஜெயக்குமார், கூட்டத்தில் எடுக்கப்பட்ட முக்கிய முடிவுகள் குறித்து நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அதிகாரப்பூர்வமாக விரைவில் அறிவிப்பார். மேலும் ஆகஸ்ட் 1 முதல் எலக்ட்ரிக் காருக்கான ஜிஎஸ்டி வரி 12 சதவீதத்தில் இருந்து 5 சதவீதமாக குறைக்கப்படும். எலக்ட்ரானிக் கார்களுக்கான பேட்டரி, சார்ஜருக்கு 18% லிருந்து 5% ஆக வரி குறைக்கப்படும்.
மின்சார பேருந்துகளுக்கும் விலக்கு அளிக்கவும் ஒப்புதல் வழங்கியது ஜிஎஸ்டி கவுன்சில். இந்த வரி குறிப்பு தொடர்பான அறிவிப்பை மத்திய நிதித்துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன் அதிகாரப்பூர்வமாக அறிவிப்பார் என்றார்.
12ம் வகுப்பு பாடத்திட்டத்தில் தமிழ் மொழி குறித்து தவறு செய்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என ஏற்கனவே பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் தெரிவித்துள்ளார். எனவே தவறு செய்தவர்கள் யாராக இருந்தாலும் அரசு நிச்சயம் நடவடிக்கை எடுக்கும் என்றார்.
அதுமட்டுமின்றி முத்தலாக் உள்ளிட்ட மசோதாவில் அதிமுகவின் நிலைப்பாட்டை மாநிலங்களவையில் வெளிப்படுத்துவோம். நாடாளுமன்றத்தில் ரவீந்தரநாத் பேசியது குறித்து நான் கருத்து தெரிவிக்க விரும்பவில்லை.

எனக்கும் கூட சீட் மறுக்கப்பட்டுள்ளது; நான் அழுதேனா?’ பதவி வழங்கவில்லை என்பதற்காக யாரும் கட்சியை விமர்சிக்கக் கூடாது; முந்தைய காலங்களில் எனக்கும் கூட சீட் மறுக்கப்பட்டுள்ளது, அதற்காக நான் அழுதேனா? என்று அமைச்சர் ஜெயக்குமார் கேள்வி எழுப்பினார்.
முன்னேறிய சமுதாய பிரிவினருக்கு 10% இட ஒதுக்கீட்டு விவாகரத்தில், 69 சதவீதம் பாதிக்காத வகையில் தமிழக அரசு உரிய முறையில் நடவடிக்கை எடுக்கும். மேலும் இந்த விவகாரத்தில் எடுத்தோம், கவிழ்த்தோம் என செயல்பட முடியாது என அமைச்சர் கூறினார்.
கூட்டணியில் இருந்தாலும் பிஜேபி மற்றும் அதிமுகவிற்கு கொள்கை வேறு. நாங்கள் இரட்டை குழல் போல் மத்திய அரசும், நாங்களும் ஒட்டி இணைந்து இல்லை என்றும், எங்களுக்கு வாயும், வயிறும் வெவ்வேறு எனவும் பதில் அளித்தார்.
சசிகலா எப்போது வெளியில் வந்தாலும், எங்களுக்கு கவலை இல்லை. அவர் வெளியில் வந்த பிறகு கட்சியில் அவருக்கும், அவரது குடும்பத்திற்கும் இடம் இல்லை என்ற முடிவில் திட்டவட்டமாக உள்ளதாக தெரிவித்தார்.

– நமது நிருபர்

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button