தலையெழுத்தை மாற்றப்போகும் கையெழுத்து இயக்கம்
தேசத்தில் பற்றி எரியும் பல்வேறு பிரச்சினைகள் உள்ளன. பொருளாதார மந்த நிலையால் மக்களின் வாழ்வாதாரம் நிலை குலைந்து போயுள்ளது. இந்தியாவில் 25 வயது கொண்ட இளைஞர்களின் எண்ணிக்கை 40 கோடியாக எட்டியுள்ளது. இளைஞர்களின் வளத்தை தொழிற்சாலைகளை பெருக்கி பயன்படுத்துவதற்கு மாறாக, மத்திய அரசு மதவாத அரசியலுக்கு பயன்படுத்தி வருகிறது. 2020 ஜனவரி மாதத்தில் இந்தியாவில் 7.16% வேலையின்மை உள்ளது. நகரங்களில் 9.70%, கிராமப்புறங்களில் 5.97% இந்த அடிப்படை பிரச்சனைகளுக்கு தீர்வு காணாமல் அப்பட்டமான மதவாத அரசியலை முன்னெடுத்து வருகிறது மத்திய அரசு.
அண்ணல் அம்பேத்கர் தலைமையிலான அரசியல் சாசனகுழு அரசாட்சிக்கு முடிவு கட்டி குடியாட்சி முறையை கொண்டு வந்தது. எந்தவொரு மதத்தையும் பின்பற்றும் உரிமையை அரசியல் சாசனம் வழங்கியுள்ளது.
அரசு எந்தவொரு மதத்தையும் சார்ந்திராமல் அனைவருக்கும் அனைத்து மதத்தினருக்கும் பொதுவான அரசாக இருக்க வேண்டும் என்பது நமது அரசியல் சாசனத்தின் அடிநாதம். அதனால்தான் “மதச்சார்பற்ற” குடியரசு என்று அழைக்கப்படுகிறது. மதம் ஓர் அம்சமாக நமது அரசியல் சாசனத்தில் இல்லை. மூல குடியுரிமை சட்டத்திலும் இல்லை. இப்போதைய மோடி அரசு இதில் மதத்தை புகுத்தியுள்ளது.
மத்திய அரசு கொண்டு வந்துள்ள “குடியுரிமை சட்டம்” பாகிஸ்தான், பங்களாதேஷ், ஆப்கானிஸ்தான் ஆகிய மூன்று நாடுகளிலிருந்து வரும் இந்துக்கள், சீக்கியர்கள், பவுத்தர்கள், சமணர்கள், பார்சிகள், கிறிஸ்தவர்கள் ஆகியோருக்கு மட்டும் குடியுரிமை வழங்கப்படும் என்கிறது. அது என்ன மூன்று நாடுகள் மட்டும்? ஏன் இலங்கை, பர்மா, நேபாளம், பூடான் போன்ற அருகாமை நாடுகள் இல்லை. இலங்கையிலிருந்து வந்துள்ள தமிழ் இந்துக்களும், பர்மாவிலிருந்து வந்துள்ள முஸ்லீம்களும், நேபாளம் பூடானிலிருந்து வந்துள்ள கிறிஸ்தவர்களுக்கும் இந்தியக்குடியுரிமை மறுக்கப்படுகிறது. இது நமது அரசியல் சாசனத்திற்கு நேர் விரோதமானது.
இதற்கு எதிராகத்தான் திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைமையிலான கூட்டணி கட்சியின் கையெழுத்து இயக்கம் தொடங்கப்பட்டு வெற்றிகரமாக நடத்தி முடித்திருக்கிறது. சிஏஏ (குடியுரிமை திருத்த சட்டம்), என்சிஆர் (தேசிய மக்கள்தொகை பதிவேடு), என்ஆர்சி (தேசிய குடிமக்கள் பதிவேடு) என்கிற மும்முனைத் தாக்குதலை முறியடிக்கவே இந்த கையெழுத்து இயக்கம்.
- வே.க.இளங்கோ