பல்லடம் போக்குவரத்து போலீசாரால் நடத்தப்படும் வாகன சோதனையில் மாபெரும் கொள்ளை நடைபெறுவதாக வாகன ஓட்டிகளும் பொதுமக்களும் குற்றம் சாட்டுகின்றனர்.
பல்லடத்தில் தினந்தோறும் மாலை மற்றும் இரவு நேரங்களில் வாகன சோதனை என்ற பெயரில் சுமார் முப்பதிற்கும் மேற்பட்ட போக்குவரத்து போலீசார் பல்லடத்தின் நான்கு வீதிகளிலும் நிற்கின்றனர். இவர்கள் நகருக்குள் வரும் அனைத்து லாரிகள், கார்கள் மற்றும் இருசக்கர வாகனங்களை சோதனை என்கிற பெயரில் தடுத்து நிறுத்துகின்றனர். வாகன ஓட்டிகள் வாகனங்களில் உரிய ஆவணங்களை காண்பித்த பிறகும் வாகனங்களை மடக்கி நிறுத்தியதற்காக ரூ 200 கட்டாய லஞ்சமாக வசூலிக்கிறார்கள். மேலும் குடிபோதையில் வாகனத்தை ஓட்டி வரும் வாகன ஓட்டிகளிடம் ரூ 3 ஆயிரம் அபராதம் விதித்து போலியான ரசீதை எழுதிக் கொடுக்கின்றனர். அதன்பிறகு அந்த வாகனத்தை போக்குவரத்து போலீசார் அங்கிருந்து எடுத்துச் சென்று பல்லடம் நான்கு ரோட்டில் இருக்கும் டிகே லாட்ஜ் அருகே இருக்கும் டிகே சைக்கிள் ஸ்டாண்டில் நிறுத்தி வைக்கிறார்கள்.
இந்த சைக்கிள் ஸ்டாண்ட் உரிமையாளர் அதிமுக நகர அம்மா பேரவை தலைவர் துரைகண்ணுவிற்கு சொந்தமானதாகும். பறிமுதல் செய்த வாகனத்தின் வாகன ஓட்டிகளிடம் நாளை நீதிமன்றத்தில் 3 ஆயிரம் பணத்தை செலுத்திவிட்டு பிறகு வந்து வாகனத்தை எடுத்துச் செல்லுங்கள் என்று முதலில் காவல்துறையினர் சொல்கிறார்கள். சரி என்று கிளம்பினால் அவர்களை தடுத்து நிறுத்தி நாளை நீதிமன்றம் சென்றால் 3 ஆயிரம் அபராதம் செலுத்துவதோடு உங்களது ஓட்டுநர் உரிமம் 6 மாதம் ரத்து செய்யப்படும். ஆகையால் இப்போதே இங்கு செலுத்தினால் 2500 ரூபாய் மட்டும் தான் என பேரம் பேசி அந்த ஆளும் கட்சி பிரமுகரான சைக்கிள் ஸ்டாண்ட் உரிமையாளர் துரைக்கண்ணுவிடம் 2500 ரூபாய் செலுத்தி வாகனத்தை எடுத்துச் செல்லுமாறு கூறுகின்றனர்.
தினந்தோறும் சுமார் 300க்கும் மேற்பட்ட வாகனங்களை இரவு நேரங்களில் சோதனை செய்வதையே வாடிக்கையாக வைத்துள்ளனர். இவர்களுடைய இலக்கு தினந்தோறும் 10 ஆயிரம் ரூபாயாம். போலீஸ் நண்பர்கள் என்கிற பெயரில் சிறுவர்கள் 20 பேரை வைத்துக்கொண்டு வாகனங்களை தடுத்து நிறுத்த பயன்படுத்துகிறார்கள். ஆளும் கட்சியினரின் உதவியுடன் நடைபெறும் இந்த வசூல் வேட்டையை தடுத்து நிறுத்துவார்களா? காவல்துறை உயரதிகாரிகள். நீதித்துறையின் மீதும் சட்டத்தின் மீதும் அந்த போக்குவரத்து காவல்துறையினருக்கு அக்கரை இருந்தால் பிடிபடும் வாகன ஓட்டிகளிடம் போலியாக ரசீது கொடுத்து பணத்தைப் பெற்றுக் கொண்டவுடன் அந்த இடத்திலேயே கிழித்து போடுவதை விட்டுவிட்டு நீதிமன்றத்திலேயே முறையாக அபராதம் செலுத்தியவுடன் அந்த ரசீதை கொண்டுவந்து காண்பித்தவுடன் தானே வாகனத்தை கொடுக்க வேண்டும். இந்த மாதிரி தவறு செய்யும் நபர்களிடம் பணத்தைப் பெற்றுக்கொண்டு அரசுக்குச் சேர வேண்டிய பணத்தை தங்களது வீட்டிற்கு எடுத்துச் செல்லும் காவலர்களால் தான் ஒட்டு மொத்த காவல்துறைக்கே களங்கம் ஏற்படுகிறது என்கிறார்கள். பொதுமக்களும் வாகன ஓட்டிகளும் இதன்பிறகாவது நடவடிக்கை எடுப்பார்களா? உயர்அதிகாரிகள்
- சாகுல் ஹமீது